Monday, June 13, 2005

எழுத்து சிற்றிதழ்


" நான் ஒரு சிற்றிதழ் ஆரம்பித்தால் அதற்கு சோதனை என்று பெயர் வைப்பேன் ... சோதனை என்றால் சோதித்துப் பார்த்தல் என்று பொருள், தொல்லை என்ற பொருளும் அதற்கு உண்டு " என்று புதுமைப்பித்தன் வேடிக்கையாகச் சொல்வாராம்.

0

எழுத்து சிற்றிதழ் சி.சு செல்லப்பா அவர்களை ஆசிரியராகக் கொண்டு , ஜனவரி 1959 முதல் , புதுமை இலக்கிய மாத ஏடு என்ற அறிவிப்புடன் 50 பைசா விலையில் , 19-A பிள்ளையார் கோவில் தெரு , திருவல்லிக்கேணி , சென்னை - 5 என்ற முகவரியிலிருந்து வெளிவரத் தொடங்கியது.


சென்னையில் வருடா வருடம் விநாயகர் சதூர்த்தியானது அதிவிமரிசையாக ஒருவாரம் முதல் 10 நாட்கள் வரை கொண்டாடப்படும் . அது சமயம் , திருவல்லிக்கேணி பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர்கள் , பிள்ளையார் சிலைகளைத் தயாரித்துக் கொடுப்பார்கள். இதன் பொருட்டே அந்தத் தெருவுக்கு பிள்ளையார் தெரு என்ற பெயர்வந்தது.


தட்டுத் தடுமாறி காலூன்றுவதற்கு முன்பே காலவாதியாகிவிட்ட சிற்றிதழ்கள் தமிழகத்தில் பல உண்டு . ஆயினும் எழுத்து இதழோ மிகுந்த சிரத்தைக்கிடையிலும் தொடர்ந்து 12 ஆண்டுகளாக வெளிவந்தது .

ஜனவரி 1959 - முதல் 1968 மார்ச் வரை எழுத்து ,மாத இதழாக வெளிவந்தது . (மொத்தம் 111 மாத இதழ்கள்) . 1968 (ஏப்ரல் - ஜூன்) முதல்1970 (ஜனவரி - மார்ச்) வரை காலாண்டிதழாக வெளிவந்தது (8 காலாண்டிதழ்கள்) ஆகமொத்தம் 119 இதழ்கள் வெளிவந்தன .


1959 , 1961 , 1963 ஆகிய மூன்று வருட எழுத்து இதழ்கள் என்னிடம் இருக்கின்றன. மெலிதான அட்டை . இதழின் பக்கங்கள் அனைத்தும் பூச்சிகள் அரித்து மஞ்சள் பூத்து மட்கிப் போய்விட்டன .ஒரு வருடத்து இதழ்கள் அனைத்தும் தொடர்ச்சியான பக்க எண்களுடன் அச்சிடப்பட்டிருக்கின்றன.


சென்ற வருட ஆனந்தவிகடன் தீபாவளி மலரில்(2004 ) விருட்சம் சிற்றிதழின் ஆசிரியரான அழகிய சிங்கர் அவர்கள் " எழுத்திலிருந்து மணல் புத்தகம் வரை என்ற கட்டுரையில்சிற்றிதழ்களைப் பற்றி எழுதியிருக்கிறார். எனினும் அந்தக் கட்டுரையில் எழுத்து இதழைப் பற்றி விரிவாக எழுதப்படவில்லை.

க.நா.சு நடத்தி வந்த சூறாவளி , சந்திரோதயம் பத்திரிகைகளில் துணையாசிரியராகப் பணிபுரிந்த அனுபவம் சி.சு செல்லப்பாவுக்கு உண்டு. சுதேசமித்திரன் இதழ் செல்லப்பா எழுதிய கட்டுரை ஒன்றை வெளியட மறுத்த பொழுது எழுந்த கோபத்தில் எழுத்து இதழைத் தொடங்கினார் . ந.பிச்சமூர்த்தி எழுத்து இதழின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார் .


முதல் எழுத்து இதழில் (ஜனவரி 1959) ....

" முழுக்க முழுக்க கருத்து ஆழமும் கனமும் உள்ள ஒரு இலக்கியப் பத்திரிகையை இந்தப் பாமரப் பிரியமான பத்திரிகைப் பரப்புக் காலத்தில் ஆரம்பிப்பது ஒருசோதிக்கின்ற முயற்சிதான் . எழுத்து பற்றி பிரஸ்தாபித்த போது பலவாசகர்கள்,எழுத்தாளர்கள் , நண்பர்கள் , இத்தகைய அபிப்ராயத்தைத் தான் எதிரொலித்துச் சொன்னார்கள். தன் ரக வரிசையில் எழுத்து முதலாவதாக வருகிறது என்று நான் அடித்துச் சொல்ல வரவில்லை. கால் நூற்றாண்டுக்கு முன்பு "வ.ரா.மணிக்கொடி" இத்தகைய சோதனை முயற்சியாக அமைந்திடும் முன்பு பாலபாரதி , பஞ்சாமிர்தம் , பிரஜாநுகூலன் , போன்றவைகளும் பிறகு சுதந்திரச்சங்கு , சூறாவளி, தேனீ போன்றவைகளும் அதன்உடன் நிகழ்காலத்திலேயே கலைமகள் பத்திரிகையும் அதனதன் காலம்,சூழ்நிலைக்கேற்ப இலக்கிய சோதனை முயற்சிகளில் இறங்கியவை தான். அந்த மரபுவழியில் வரும் எழுத்து இன்றைய சூழ்நிலை , பரப்பு ,வீச்சு போக்குக்குத் தக்கபடி தன்னை உருவாக்கிக் கொண்டு வெளிவருகிறது என்பதைத் தான் குறித்துச் சொல்லத் தோன்றுகிறது ........................... "

இப்படியாக நான்கு பக்கத்திற்கு நீளும் தலையங்கத்தின் மூன்றாவது பக்கத்தை ஜெமினி & சாவித்ரி நடித்த கடன்வாங்கி கல்யாணம் என்ற படத்தின் விளம்பரம் ஆக்கிரமித்திருக்கிறது .


எழுத்து காலகட்டத்தில் இயங்கி வந்த சாந்தி (தொ.மு.சி ரகுநாதன்) , தாமரை(ப.ஜீவானந்தம்) , சரஸ்வதி (விஜயபாஸ்கரன்), போன்ற இதழ்கள் புதுக்கவிதையில் அவ்வளவாக கவனம் செலுத்தவில்லை .

எழுத்து இதழ் பல கவிஞர்களுக்கு ஒரு பயற்சிக்கூடமாக விளங்கியது.
கிராம ஊழியனில் வெளியான (1944) ந.பிச்சமூர்த்தியின் பெட்டிக்கடைநாராயணன் என்ற இரண்டு பக்கக் கவிதை எழுத்து முதல் இதழில் மறுபிரசுரமானது. தி.சோ.வேணுகோபாலனின் முதல் புதுக்கவிதையான கவி-வேதனை என்ற கவிதை எழுத்து இரண்டாவது இதழில் (பிப்ரவரி - 1959) பிரசுரமானது . எழுத்து மூன்றாவது இதழில் (மார்ச் - 1959) , சுந்தரராமசாமியின் (பசுவய்யா) முதல் புதுக்கவிதையான உன் கை நகம் என்ற கவிதையும் , நகுலனின் (டி.கே துரைஸ்வாமி ) முதல்புதுக்கவிதையான கரத்தபானை என்ற கவிதையும் பிரசுரமாயின . எழுத்து நவம்பர்-1959 இதழில் சி.மணியின் (சி.பழனிச்சாமி) முதல் புதுக்கவிதையான முக்கோணம் என்ற கவிதை வெளிவந்தது . எழுத்து ( ஜனவரி 1960 ) இதழில் பிரமிளின் (தருமுசிவராமு ) முதல் புதுக்கவிதையான நான் என்ற கவிதை வெளியானது . எழுத்து ( நவம்பர்-1961 ) இதழில் வைத்தீஸ்வரனின் முதல் புதுக்கவிதையான கிணற்றில் விழுந்த நிலவுவெளியானது. எழுத்து - ஐந்தாவது இதழ் (மே - 1959) கு.ப.ராவின் நினைவுமலராக வெளியிடப்பட்டது . எழுத்து - ஏழாவது இதழ் (ஜூலை- 1959) புதுமைப்பித்தனின் நினைவுமலராக வெளியிடப்பட்டது.புதுமைப்பித்தனின் நெருங்கிய நண்பரான தொ.மு.சி ரகுநாதன் திருச்சிற்றம்பலக்கவிராயர் என்ற புனைபெயரில் எழுத்து இதழில் சில கவிதைகள் எழுதினார். புதுக்கவிதை பற்றி க.நா.சு, முருகையன் , சி.கனகசபாபதி ஆகியோர்கட்டுரைகள் எழுதி விவாதித்தனர்.எழுத்து கவிஞர்கள் சிலரின் கவிதைகள் தொகுக்கப்பட்டு புதுக்குரல்கள் என்ற கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது.


சில ஆண்டுகளுக்குப் பின்பு புதுக்குரல்கள் கவிதைத் தொகுப்பைப் பற்றிய விமர்சனம் ஒன்றை சதங்கை சிற்றிதழ் நடத்திய பேராசிரியர் நா.வனமாமலை அவர்கள் தாமரை இதழில் (மார்ச் 1969) எழுதினார் .

"இவர்களது சோக ஓலங்களும் நம்பிக்கை வறட்சி ஒப்பாரிகளும் வாழ்க்கை மறுப்புப் பாடல்களும் நல்வாழ்வுக்காக நம்பிக்கையோடு போராடும் மக்களுக்குச் சிறிதும் தேவையற்றவை. இவர்களுடைய புதுக்கவிதையில் புதுமையுமில்லை , கவிதைத் தன்மையுமில்லை புரட்சித் தன்மையுமில்லை . இவ்வாழ்க்கைப் போராட்டத்துக்குப் பயந்து சாவை விரும்பும் பலவீன மனிதர்களின் கூக்குரல் தான் " -வனமாமலை


தமிழ்ப் புதுக்கவிதையில் சாதனை புரிந்த எழுத்து இதழ் 1970 ஆம் ஆண்டின் முதல் இதழோடு நின்றுவிட்டது . எழுத்து நின்றவுடன் சிறிது காலத்திற்குப் பிறகு சுவை என்ற மாத இதழை செல்லப்பா தொடங்கினார் , அதுவும் முதல் இதழோடு நின்று விட்டது. அவர் சொந்த ஊரான வத்தலக்குண்டுக்குத் திரும்பினார் , அங்கே இலக்கியம் பேசுவதற்குநண்பர்கள் யாரும் கிடைக்காததால் மீண்டும் சென்னை வந்தார். 18/12/1988 அன்று சென்னையில் சி.சு.செல்லப்பா காலமானார் .

0


எழுத்து ஆரம்பித்த சில வருடங்கள் கழித்து கா.நா.சுவிற்கும் செல்லப்பாவிற்கும் இடையே விமர்சனக் கலை குறித்தான பார்வையில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வந்தன . ஆகையால் எழுத்துவில் தன் பங்களிப்பை நிறுத்திக் கொண்ட க.நா.சு இலக்கிய வட்டம் ( நவம்பர் 1963 ) என்ற சிற்றிதழைத் தொடங்கினார். செல்லப்பாவின் எழுத்து சிற்றிதழ் கொடுத்த உத்வேகத்தில் தான் கஸ்தூரிரங்கன் அவர்கள் கணையாழி இதழை ஆரம்பித்தார் .


0


"கவிதை முதலிய பலதுறைகளில் பழைய பஞ்சாங்களான பல அபிப்ராயங்கள் விடாப்பிடியாக மக்களின் மூளையைக் கவ்விக்கொண்டு கிடக்கின்றன . போர் , அநாகரீகம் என்று தெரிந்தும் உலகம் இன்னும் விட்டபாடில்லையோ அதைப் போலவே அரசாங்கம் , பொருளாதாரம் , கவிதை , கலை, சங்கீதம் முதலிய துறைகளில் துருப்பிடித்த கருத்துக்கள் சில இன்னும் வளைய வந்து கொண்டிருக்கின்றன . கவிதைக்குச் சில சொற்கள் தான் எடுப்பாக இருக்குமாம் ! கவிதைக்குச் சில விஷயங்கள் தான் பொருத்தமாம் ! கவிதையில் எதுகை மோனை இருக்க வேண்டுமாம் ! கவிதை சில விஷயங்களைப் பற்றிப் பேசவேகூடாதாம் ! கவிதை தேமாங்காய்,கூவிளங்காய் போன்ற பண்டைக் கூடுகளில் அடைத்தால் தான் அழகாக இருக்குமாம். கவிதை என்பது கடவுளைப் போல, கவிதைக்கு எல்லை கோலி வேலி அமைப்பது பாவமாகும் அது அறிவுடமையாகாது "(வ.ரா -எழுத்து ஆக்ஸ்ட் - 1963 )

0

ஒரு நண்பர் வீட்டில், புதுமைப்பித்தன் , ரகுநாதன் , நான் (கு.அழகிரிசாமி)இத்தனை பேரும் பேசிக்கொண்டிருந்தோம்.பேச்சின் நடுவிலே புதுமைப்பித்தன் சொன்னார் , " தமிழ்நாட்டில் இன்று யாருக்கு ஐயா கதை எழுத வருகிறது நம் மூன்று பேரைத் தவிர்த்து ......"

அரை நிமிஷம் மெளனமாக இருந்தார் ..

பிறகு கட கடவென்று சிரித்துக் கொண்டு " நம் மூன்று பேர் என்று தாட்சண்யத்துக்காகத் தான்சொல்லுகிறேன் , என்னைத் தவிர்த்து யார் கதை எழுதுகிறார்கள் ? " என்று கேட்டார் .எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தோம் . " - அழகிரிசாமி - புதுமைப்பித்தன் நினைவு மலர்- எழுத்து ஜூலை 1959


0

பிரமிள் தனது அக உலகக் கலைஞர்கள் என்ற கட்டுரையில் (எழுத்து - டிசம்பர் 1961) ல.சா.ரா, மெளனி , புதுமைப்பித்தன் ஆகியோருடைய கதைகளைத் திறனாய்வு செய்திருக்கிறார். பிரமிள் இந்தக் கட்டுரையில் மூவரையும் ஒரே ஸ்தானத்தில் தான் வைத்துப் பார்த்திருக்கிறார்.
ஆனால் கு.அழகிரிசாமிக்கோ , ல.சா.ரா மற்றும் மவுனியின் கதைகளில் நல்லஅபிப்ராயம் இருந்ததில்லை .


" சிறுகதைகளை புதுமைப்பித்தனைப் போன்று உன்னதமான முறையில் புதுமையும் ,கனமும் , வேகமும் , தரமும் ஆழமும் , உருவமும் கொண்டவையாக வேறு யாரும் தமிழ்நாட்டில் மட்டுமல்ல ஆசியாவிலேயே எழுதியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை . உலகம் முழுவதும் சிறுகதை இலக்கியத்தின் தந்தையர் என்றும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர்கள் என்று போற்றப்படும் மாப்ஸான்,செக்காவ் என்ற இரு எழுத்தாளர்கள்டு ஒன்றாக வைத்து எண்ணத்தக்க எழுத்தாளர் புதுமைப்பித்தன்..
என்ன எழுதுகிறோம் என்று தனக்கே தெரியாமல் , தனக்குத் தெரிந்தாலும் மற்றவர்களுக்குத் தெரிந்து விடக்கூடாது என்று எதையோ எழுதினால் எப்படி இருக்குமோ , பிரமாதமான விஷயம் உள்ளே அடங்கியிருப்பது போல பாவனை பண்ணுவதற்காக எழுதினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிற கதைகளுக்கு இந்த இருவருடைய (மெளனி , ல.சா.ரா) கதைகளையும் உதாரணமாகச் சொல்லத் தோன்றுகிறது இந்தக் கதைகளில் கருத்தாழமோ , இலக்கியச் சுவையோ எந்த ஒருவகை இலக்கியச் சிறப்புமோ அறவே இல்லை " - கு.அழகிரிசாமி


எனக்கும் உங்களைப் (மெளனி , ல.சா.ரா) போல கதை எழுதத்தெரியும் என்கின்ற தொனியில் புதுமைப்பித்தன் , மனக்குகை கதையை எழுதினார்.

0

இலக்கியப் பணி ஒன்றையே நம்பி வாழ்க்கை நடத்துவது கஷ்டமென்பதை நிரூபித்தவர்கள் கு.பா.ராவும் ,புதுமைப் பித்தனுந்தான் . பதினைந்து ஆண்டுகள் எழுத்திலேயே கழித்து தீராத நோயையும் மாறாத வறுமையையுந்தான் சம்பாதித்தார் புதுமைப்பித்தன். இலக்கியம் பணக்காரர்களின் பொழுதுபோக்கு , இலக்கியத்தை நம்பி மட்டும் பொழுதுபோக்காகக் கொண்டால் அது அவனைக் கொன்று விடும் என்று அவர் சொல்வதுண்டு. அந்த இலக்கியமே அவரைக் கொன்று தீர்த்தது - கமலா புதுமைப்பித்தன்


0


எழுத்துக் கவிஞர்கள் சிலரைப் பற்றிய குறிப்புகள்


1)சி.சு.செல்லப்பா

சி.சு.செல்லப்பா அவர்கள் மதுரை மாவட்டத்திலுள்ள வத்தலக்குண்டில் 1912 ஆம் ஆண்டு பிறந்தார் . சொந்த ஊர் சின்னமனூர் .கல்லூரியில் படித்த பொழுதே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைத்தண்டனையை அனுபவித்தவர் .தனது முழுவாழ்வையையும் இலக்கியத்தோடு கழித்தவர்.சி.சு.செல்லப்பா தனது 86 ஆவது வயதில் 18/12/1998 அன்று சென்னையில் சி.சு.செல்லப்பா காலமானார் .

சிறுகதைகள்:சரசாவின் பொம்மை,மணல் வீடு,சத்யாக்ரகி,அறுபது,கைதியின் கர்வம்,செய்தகணக்கு ,பந்தயம்,ஒரு பழம், நீர்க்குமிழி, பழக்கவாசனை, சி.சு.செல்லப்பா சிறுகதைகள் (7 தொகுதிகள் சிறுகதை)வடிவாசல் - குறுநாவல்
கவிதை :1)மாற்று இதயம் , 2) நீ இன்று இருந்தால்

கட்டுரை :தமிழில் சிறுகதை பிறக்கிறது,தமிழில் சிறுகதை முன்னோடிகள், இலக்கிய விமர்சனம் , படைப்பிலக்கியம் , காற்று உள்ள போதே , ஏரிக்கரை , குறித்த நேரத்தில்,எல்லாம் தெரியும் , ஊதுபத்திப்புல் , மாயதச்சன், பி.எஸ்.ராமையாவின் சிறுகதைப்பாணி
நாவல்:1) ஜீவனாம்சம் , 2) சுதந்திரதாகம்

சுதந்திரதாகம் (சாகிதிய அகடாமி விருது பெற்றது)

2) ந.பிச்சமூர்த்தி

மணிக்கொடி இதழில் (1934) காதல் என்ற முதல் புதுக்கவிதையை எழுதிய ந.பிச்சமூர்த்தி அவர்கள் புதுக்கவிதை பிதாமகன் என்றழைக்கப்படுகிறார்.

"என் முயற்சிக்கு விட்மனின் புல்லிதழ் வித்திட்டது , அதைப் படித்த போது கவிதையின் ஊற்றுக் கண் தெரிந்தது . தொடர்ந்து பாரதியின் வசனகவிதை என்கருத்தை வலுவடையச் செய்தது , இவற்றின் நிறைவாக கவிதைகளை எழுதத்தொடங்கினேன் - என்று காட்டு வாத்து முன்னுரையில் ந.பிச்சமூர்த்தி எழுதியிருக்கிறார்.

நடேச தீட்சிதர் - காமாட்சியம்மாள் தம்பதியருக்கு நான்காவது மகனாக 15/08/1900 அன்று கும்பகோணத்தில் பிச்சமூர்த்தி பிறந்தார்.அவருடைய இயற்பெயர் வேங்கட மகாலிங்கம் . இவருக்கு முன்னாள் பிறந்த மூன்று குழந்தைகளில் இருவர் இறந்து விட்டதால் வேங்கட மகாலிங்கம் என்ற இயற்பெயரை , பிச்சை என்று இவருடைய பெற்றோற்கள் மாற்றி வைத்தார்கள் .பிச்சை , சுப்பு , குப்பு குப்பை என்று பெயர் வைத்தால் எமதர்மராஜன் இந்தஅற்பமான பெயர்கள் கொண்ட குழந்தைகளை அழைத்துச் செல்லமாட்டான் என்று ஒரு நம்பிக்கை . பிச்சமூர்த்தி அவர்கள் தனது எழுபத்தி ஆறாவது வயதில் 04-12-1976 அன்று காலமானார்.

பிச்சமூர்த்தியின் படைப்புகள்

சிறுகதைகள் : 1. பதினெட்டாம் பெருக்கு (2). ஜம்பரும் வேஷ்டியும் (3). மோஹினி (4). பிச்சமூர்த்தி கதைகள் (5). மாங்காய்த்தலை இரட்டை விளக்கு குடும்ப ரகசியம் (நாவல்) 8. காக்கைகளும் கிளிகளும் (சிறுவர் கதைகள்) மேலும் பல நூல்கள்..


0

சிக்கலோ, டம்பமோ இல்லாத ஒரு எளிய நீரோட்டம் போல எளிதாக வழுக்கிச் செல்கிற நடையில் பிச்சமூர்த்தியின் கதைகள் , மனிதனுக்குள்ளும் வாழ்க்கைக்குள்ளும் புதைந்து பார்த்த ஒரு முங்கு நீச்சுக்காரன் தரும் செய்திகளை கலையுருவ அழகின் தீய்ப்போடு மனசில் சூடு போடுகின்றன - வானமற்ற வெளி (பிரமிள்)


3) க.நா.சுப்ரமணியம்

கந்தாடை நாராயணசாமி ஐயர் சுப்பிரமணியம் (க.நா.சு) 31/01/1912 அன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் என்ற ஊரில் பிறந்தார் . தஞ்சாவூர் ,சிதம்பரம் , சென்னை , பெங்களூர் , மைசூர் , திருவனந்தபுரம் , புதுடில்லி ஆகிய நகரங்களில் வாழ்ந்திருக்கிறார் .16/12/1988 அன்று புதுடில்லியில் தன் மகள் வீட்டில் காலமானார்.


சூறாவளி , சந்திரோதயம் , இலக்கியவட்டம் ஆகிய சிற்றிதழ்களை நடத்திதன் வாழ்நாள் முழுவதையும் இலக்கியத்திற்காகவே செலவிட்டார்.மயன் என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதியிருக்கிறார்.


க.நா.சு. நாவல்கள் : சர்மாவின் உயில் , பசி , வாழ்வும் தாழ்வும் ,சக்தி விலாசம் , பொய்த்தேவு , ஏழுபேர் , ஒரு நாள் , அசுரகணம் புழுதித்தேர்,ஏழுமழை , வக்கீல் ஐயா , மால்தேடி , ஜாதிமுத்து , வாழ்ந்தவர் கெட்டால் , ஆயுள் தண்டனை , கந்தர்வ கோலத்தில் கொலை , நடுத்தெரு , திருஆலங்காடு,ஆட்கொல்லி, கோபுர வாசல் , சமூக சித்திரம் , அவரவர் பாடு


சிறுகதைத் தொகுப்புகள் : மணிக்கூண்டு, ஆடரங்கு , கருகாத மொட்டுவிமர்சனம் : விமர்சனக் கலை , படித்திருக்கிறீர்களா ? உலகத்துச் சிறந்த நாவல்கள் , முதல் ஐந்து தமிழ் நாவல்கள் , இலக்கிய விசாரம் ,இந்திய இலக்கியம் , பத்து சிறந்த இந்திய நாவல்கள்


மொழிபெயர்ப்பு : அன்புவழி (ஸ்வீடிஸ் நாவல் ) ,தபால்காரம் (பிரெஞ்சு நாவல்),மதகுரு(ஸ்வீடிஸ் நாவல் ) , நிலவளம் (நார்விஜி நாவல்) , மிருகங்கள் பண்ணை(ஆங்கில நாவல்கள்)


0

க.நா.சு வின் மிகச் சிறந்த ஆக்கம் பொய்த்தேவு தான், இதற்கு முன் எழுதப்பட்டவற்றில் அ.மாதவையா , ராஜம் ஐய்யர் , வேதநாயகம் பிள்ளை ,ஆகியோரின் எழுத்துக்கள் வெறும் எழுத்துக்கள் வெறூம் முன்னோடி முயற்சிகள் மட்டுமே . நாவல் என்ற வடிவத்தை நோக்கி பிரக்ஞையுடன் எடுத்துவைக்கப்பட்ட முதல் எட்டு பொய்த்தேவு . ஆனாள் நாவலாசிரியருக்குத் தேவையான எதையும் நிகழ்த்தக் கூடிய புனைவு மொழி , விரிவான வாழ்க்கை அவதானிப்புகள்,புற உலகை நிகழ்த்தி காட்டும் திறன் ஆகியவை " பொய்த்தீவு " வில் இல்லைஎ ன்பதால் அது நாவலாக முழுமை பெறவில்லை - ஜெயமோகன்


4) பிரமிள்


அஜித்ராம் பிரமிள் - 20/04/1939 அன்று இலங்கையில் உள்ள திருகோணமலையில் பிறந்தார். தனது இருபது வயதிலேயே , தருமசிவராமு என்ற புனைபெயரில் கவிதைகளும் , கவிதைகள் குறித்த கட்டுரைகளையும் எழுத்து இதழில் எழுதத் தொடங்கினார்.
எழுபதுகளில் இவர் எழுதிய கட்டுரைகள் கசடதபற , அஃ , ஞானரதம் , சதங்கை , பிரக்ஞை, கொல்லிப்பாவை, லயம் மற்றும் மீறல் முதலிய பத்திரிகைகளில் பிரசுரமாயின -

பிரமிளின் கவிதைப்படைப்புகள் - கண்ணாடியுள்ளிருந்து , கைப்பிடியளவு கடல் , மேல்நோக்கிய பயணம்.

விமர்சனம் - விமரசன ஊழல்கள் , தமிழின் நவீனத்துவம் (எழுத்து கட்டுரைகள்)

கதை - லங்காபுரி ராஜா (இரு குறு நாவல்களும் இறு சிறுகதைகளும்) , ஆயி (குறுநாவல்) ,நட்சத்ரவாஸி (மூன்று நாடகங்கள் ) , படிமம் (இலக்கியத் தொகுப்பு) , சாது அப்பாதுரையின் தியானதாரா (சாது அப்பாதுரையின் வரலாறும் வாழ்வும்), ஸ்ரீலங்காவின் தேசிய தற்கொலை (சரித்திரம்)

0

நான் என் கவிதைகளின் மூலம் மெட்டா ·பிஸிக்சை உருவகப்படுத்துகிறேன் . நான் புதுமையான எல்லா எண்ணங்களுடனும் எனது சிந்தனைகளுக்குத் தெளிவு கிடைப்பதற்காகப் போராடுகிறேன் . இந்த மல்யுத்தம் தான் எனக்கு காவிய ரசனையையும் அளித்தது .நான் ஒரு புதுமை கவிஞராக ஆவதற்கோ ,சர்ரியலிஸ்டிக் கவிஞராவதற்கோ கவிதை எழுதவில்லை . நான் என்னையே தேடிச் செல்கிறேன் . இத்தேடலில் தான் என்னுடைய சாராம்சம் உள்ளது. தேடலின் போதுநான் நடந்து செல்லும் பாதை கவிதையினுடையது - பிரமிள் (மீறல் சிறப்பிதழ்)


5) வைத்தீஸ்வரன்

1935 ஆம் ஆண்டில் கோயம்பத்தூரில் பிறந்த கவிஞர் எஸ். வைத்தீஸ்வரன் கல்லூரி மேற்படிப்பிற்காக சென்னைக்குச் சென்று , பின் சென்னையிலேயே குடியேறிவிட்டார் . இவர் இந்தியன் ஏர்லைன்ஸில் விமான அதிகாரியாகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.


எழுத்து , நடை , கணையாழி , கசடதபற , ஞானரதம் சதங்கை, கொல்லிப்பாவை ,நவீனவிருட்சம் , சுபமங்களா முதலிய இதழ்களில் இவர் கவிதை எழுதியுள்ளார்.


உதய நிழல் ( 1970 ) , நகரச்சுவர்கள் (1994) விரல் மீட்டிய மழை(1996)ஆகிய கவிதைத் தொகுப்பு நூல்களை வெளியிட்டிருக்கிறார் .இது தவிர வைத்தீஸ்வரன் கவிதைகள் என்ற தொகுப்பு நூலும் வெளிவந்திருக்கிறது.


6) தி.சோ.வேணுகோபாலன்

தி.சோ. வேணுகோபாலன் தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் 1929 ஆம் ஆண்டு பிறந்தார். பொறியியல் பட்டதாரி. கோடைவயல் (1965) , மீட்சி விண்ணப்பம் (1977) ஆகிய இரு கவிதை தொகுப்புகளை எழுதியுள்ளார் . தி.சோ.வேணுகோபாலன் கேரளாவில் உள்ள அழகப்பாநகரில் உள்ள அழகப்பா பாலிடெக்னிக்கில் பேராசிரியாராகப் பணிபுரிந்திருக்கிறார் .


7) சி.மணி

ஆங்கில இலக்கியத்தில் நன்கு பரிச்சயமுள்ள சி.மணியின் இயற்பெயர் எஸ்.பழனிச்சாமி ஆங்கிலப் பேராசிரியப் பணிபுரிந்தவர். இவர் வே.மாலி என்ற பெயரிலும் கவிதைகள் எழுதியிருக்கிறார் . பல ஆங்கில ஹைக்கூ கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் .வரும் போகும்(1974) , ஒளிச்சேர்க்கை (1976) என்ற கவிதைத் தொகுப்பும் வெளியிட்டிருக்கிறார்.


குறிப்பு நூல்கள்

1) எழுத்து , குமுதம் தீராநதி மற்றும் சில சிற்றிதழ்கள்

2) பிரமிள்- மீறல் சிறப்பிதழ்

3) தமிழில் சிறுபத்திரிகைகள் - வல்லிக்கண்ணன்

4) புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் - வல்லிக்கண்ணன்

5) புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும் - ந.வனமாமலை

6) புதுக்கவிதை வரலாறு - ராஜமார்த்தாண்டன்

7) வானமற்ற வெளி - பிரமிள் கட்டுரைகள்

8) சொல் பொருள் மெளனம் - க.மோகனரங்கன்

9) சிறுகதைப் படைப்பின் உள்விவகாரம் -மேலாண்மை பொன்னுச்சாமி

10) இலக்கிய முன்னோடி வரிசை - ஜெயமோகன்

11) இந்திய இலக்கிய சிற்பிகள் (க.நா.சு) - அசோகமித்திரன்

12) கலாப்ரியா கவிதைகளில் அகத்திணை மரபுகள் - இரா .இராமகிருட்டிணன் .

13) இந்திய இலக்கியம்- க.நா.சு.

14) பிரம்மாண்டமும் ஒச்சமும் (சி.சு செல்லப்பாவின் படைப்புலகம்) - பெருமாள்முருகன்

15) தமிழ்ப் புதுக்கவிதைகளும் மொழியியற் சிந்தனைகளும் - ம.மதுசூதனன்

புத்தகங்கள் பிரபஞ்சத்தின் சாளரம் - மாக்ஸிம் கார்க்கி

8 comments:

Anonymous said...

Good post; Thanks

கருத்துச் சொன்னவரு: karthikramas

Anonymous said...

சி.சு.செல்லப்பாவையும் ந.பிச்சமூர்த்தியையும் வாசிச்சிருக்கோம்ல!

கருத்துச் சொன்னவரு: மூர்த்தி

Anonymous said...

«¼§¼! ÅñÞ ±ôÀÊ þôÀÊ ´Õ ¯ÕôÀÊ¡É
¸¡Ã¢Âõ¦ºö¾¡ö ±ýÉ¡ø ¿õÀ§Å ÓÊÂÅ¢ø¨Ä! þ¾üÌÓý ¯ý ŨÄò¾Çò¾¢ø ¿£ þð¼¾üÌô À¢Ã¡Âò¾§Á¡?;0±ò¾¨É ¾¸Åø¸û! ¯ñ¨Á¢ø «Õ¨Á¡¸§Å þÕ츢ÈÐ! À¡Ã¡ðÎì¸û!
«ýÒ¼ý
¨„ă¡

கருத்துச் சொன்னவரு: shylaja

Anonymous said...

Nice Post. Congrats.

- Suresh kannan

கருத்துச் சொன்னவரு: suresh kannan

Anonymous said...

எப்பாஆஆஆ !! என வாயைப்பிள்க்கவைக்கும் வகையில் பல அரிய விசயங்களை தொகுத்துள்ளீர். பாராட்டுக்கள்!

கருத்துச் சொன்னவரு: Positive RAMA

Anonymous said...

மரவண்டு எழுத்துச் சிற்றிதழ் பற்றியதை வெகு அழகாக தொகுத்து இருக்கிறீர்கள். பாதுக்காகப்பட வேண்டிய பதிவு. நன்றி.

கருத்துச் சொன்னவரு: அல்வாசிட்டி.விஜய்

Anonymous said...

கன்சு,
ரொம்ப சந்தோசமாக உள்ளது. மிக அருமையாக தொகுத்தளித்திருக்கிறீர்கள். இத்தனை எழுத்தாளர்களில் ஒரு சிலரை தான் நான் படித்திருக்கிறேன். உங்களின் இந்த ஆக்கத்தின் மூலம் தமிழுக்காக ஆக்கப்பூர்வமாகப் பாடுபட்ட இலக்கியவாதிகளை அறிந்துக் கொள்ள முடிந்ததில் பெருமகிழ்ச்சி.
நேற்று தான் விகடனில் சுஜாதா இந்த வாரம் தனக்கு பிடித்த எ.பி.க. என்று பிரமிளின் கவிதையைப் போட்டிருந்ததைப் படித்தேன்.
போனவாரம் வாடிவாசல் (சி.சு. செல்லப்பா எழுதியது) படித்தேன். ஒரு நேரடி நிகழ்ச்சியை பார்க்கும் உணர்வு இந்த குறுநாவலைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக ஏற்படும். மிக அழகான, ஆழமான நடை.

இப்பொழுது ஏற்கனவே பல முறை படித்திருந்தாலும் புதுமைப்பித்தனின் முழு சிறுகதை தொகுதியும் இப்பொழுது கிடைத்திருப்பதால் படித்துக் கொண்டிருக்கிறேன். புதுமைப்பித்தன் எல்லாவித சோதனைகளையும் தனது சிறுகதைகளில் செய்துள்ளார். அவரைப் பற்றி கு. அழகிரிசாமி சொல்லியுள்ளது நூற்றுக்கு நூறு உண்மை என்றே படுகிறது.

உலகம் முழுவதும் சிறுகதை இலக்கியத்தின் தந்தையர் என்றும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர்கள் என்று போற்றப்படும் மாப்ஸான்,செக்காவ் என்ற இரு எழுத்தாளர்கள்டு ஒன்றாக வைத்து எண்ணத்தக்க எழுத்தாளர் புதுமைப்பித்தன்..

மீண்டும் நன்றிக் கூறுகிறேன். உமதுப் பணி மிகவும் பாராட்டத்தக்கது.

கருத்துச் சொன்னவரு: மஞ்சூர் ராசா

Anonymous said...

கருத்துச் சொன்ன எல்லாத்துக்கும் நன்றி !

கருத்துச் சொன்னவரு: maravantu