Thursday, October 27, 2005

மூன்று கவிதைகள்

எனது வீட்டிலிருந்து அலுவலகம் சுமார் 20 கி.மீ தூரத்தில் உள்ளது.ஒரு மணிநேர பேருந்துப் பயணம் , முன்னிருக்கைக்காரர்களின் பின்மண்டையை எவ்வளவு நேரம்தான் பார்த்துக் கொண்டிருப்பது . அச்சலாத்தியாக இருக்கும் அல்லவா , ஆகையால் கையில் தினமும் ஏதாவது புத்தகத்தோடுதான் பேருந்தில் ஏறுவேன். யாருமே தொல்லை தராத வண்ணம் கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டு படித்துக் கொண்டே வருவேன் . இன்று இரண்டு புத்தகங்கள் எடுத்துக் கொண்டேன்.ஒன்று கரிகாலன் எழுதிய ஆறாவது நிலம் மற்றொன்று காலச்சுவடு கவிதைத் தொகுப்பு.

0

வளர்ப்பு நாயின் சுகவீனத்தால்
கவலை கொள்ளும்
சிறுமியின் பிரார்த்தனை
கடவுளுடைய இருப்பிற்கான
பரிசோதனையாய் மாறுகிறது

நாயின் மரணம் சம்பவித்தவேளையில்
உருளும் கண்ணீர் துளியில்
தோல்வியை ஒப்புக்கொண்டபடி கரைகிறது
சிறுமியின் மனதிலிருந்து
கடவுளெனும் கற்பிதம்
0

மேற்காணும் கவிதை ஆறாவது நிலம் கவிதைத் தொகுப்பில் கரிகாலன் எழுதிய கவிதை ஆகும்.பேருந்து ஜன்னலை மீறி உள்ளே நுழைந்த சின்ன மழை , என்னைச் சுமார் 20 வருடங்களுக்குப் பின்னோக்கிஇழுத்திச் சென்றது

0
அப்பொழுது நான் நான் ரெண்டாப்பு படிச்சுட்டு இருந்தேன் , ஒருநா ஒன்னுக்கு பீரியடுல நல்லா மழைபெஞ்சிட்டு இருந்துச்சு , எல்லாப் பயன்களும் நனைஞ்சுக்கிட்டே போயி கம்மாக்கரையில போயி ஒன்னுக்கு இருக்கப் போனோம் , உதா கலரு டவுசர இடது பக்கம் தூக்குனமானக்கி பக்கத்துல ஒன்னுக்கு இருந்துக்கிட்டிருந்த முருகேசன் கிட்ட ," எலே முருவேசா , மழை எப்புற்றா பெய்யுது ? " ன்னு கேட்டேன். அதுக்கு அவன் சொன்னியான் , வானத்துல கடவுள் இருக்கார்ரா , அவர் அங்க இருந்து ஒருபெரிய்ய வாளில தண்ணிய மோந்து மோந்து ஊத்துவார்ரா , அதான் மழையா பெய்யுதுன்னான், அவன் சொல்லிமுடித்த பொழுது என்னிலிருந்து கடைசி சொட்டு நீர் வெளியேறி உடம்பு சிலிர்த்தது. அவன் சொன்னது நெசந்தான்னு நானும் ரொம்ப நாளா நம்பிக்கிட்டுத் திரிஞ்சேன்.அப்புறம் நாலாப்பு வந்ததுக்கப்புறந்தான் மேகத்தில் இருந்துதான் மழை பெய்யுதுன்னும் தெரியவந்திச்சி ....கடவுள் இருக்காரா இல்லையான்னு சந்தேகமும் வந்திச்சி ....இன்னமும் சந்தேகம் தீர்ந்தபாடில்லை.....

0

ஆறாவது நிலம் தொகுப்பில் இருக்கும் பெரும்பாலான கவிதைகள் எனக்குப் பிடித்திருந்தன.காலச்சுவடு தொகுப்பிலிருந்து இரண்டு கவிதைகளை மட்டும் இங்கே தருகிறேன்.

பேட்டி - யுவன்

ஊர்வதற்கே வாழ்வென
உடம்பெல்லாம் கால்கொண்ட
மரவட்டை ஒன்று
ஓய்வாகச் சுருண்டிருக்கக் கண்டேன்.

பொழுதுபோகாமல் கேட்டேன்

"இந்திய சுதந்திரத்தின்
பொன்விழாபற்றி...."

"என்ன பெரிய சுதந்திரம்?
பையன்கள் இன்னமும்
குத்துகிறார்கள் குச்சியால் "
இலைகளிலும் மலர்களிலும்
சிறுநீர்த் துளிகளுடன்
அருகிலிருந்த செடி
ஆமென்றது தலையசைத்து

பையனாய் இருந்து
வந்தவன்தான் நானும் எனச்
சொல்லாமல் மறைத்து

" என்றாலும் வாழ்க்கைத் தரம் .. ? "
என்றேன்

" நோ கமெண்ட்ஸ்" என்று
நகர்ந்தது தன்
நூறாவது காலை
எதிர்காலத்துள் இழுத்துவைத்து...

0

ஒற்றை ரகசியம் - உமா மகேஸ்வரி

என் மென்மைகளை
ஊற்றிவிடுகிறேன் ஒவ்வொரு நாளும்
செம்பருத்தியின் வேருக்கு

உருட்டி வைக்கிற எனது
நட்புணர்வில்
அலகு பதிக்கும் காகம்
உன்னைக் கண்டதேயில்லை

நமதில்லாத குழந்தைகளைத் தழுவும்போதுதான்
தளிர்க்கிறது என் தாய்மை நிபந்தனைகளின்றி

நள்ளிரவில்
நட்சத்திரங்கள் தேங்கிய மாடித்தளம்
என் பாதம் வழி ஊடுருவிப்
பகிரும் கிளர்ச்சிகளை
ஒவ்வொரு மழையின் போதும்
இளகிப் பொழிவித்திட முடிகிறது என்னையும்

மோகங்கள் தாபங்கள்
முற்றுப்பெறாத சஞ்சலங்கள்
மற்றும் நீ தொடவொண்ணாத
தூய்மையின் ஆழங்களோடு
சாறுகள் பிழிபட்ட
வெற்றுச் சக்கையின் கிடப்பே
உன் கட்டிலுக்கு என்றுணர்கையில்
அடைகிறேன் உனை வென்ற உவகையை
நீ அறியவியலா ஒற்றை ரகசியமாக

Monday, October 10, 2005

ஈரத்தாமரைப் பூவே - போட்டி




ஈரத் தாமரைப் பூவே
உன் இதழில் எத்தனை சாரங்கள்
புத்தன் நானே பித்தன் ஆனேன்
உறங்கவில்லை சில வாரங்கள்

0

கண்கள் கார்த்திகை அகல்களோ
இல்லை நட்சத்திரங்களின் நகல்களோ

விரல்கள் வெள்ளரிப் பிஞ்சுகளோ - இல்லை
வெடித்த பருத்திப் பஞ்சுகளோ

0

கூந்தல் என்பது சமுத்திரமோ - அதில்
பூக்கள் மலர்வது விசித்திரமோ

இலைகள் இல்லா பூமரமோ
உன் இமையே உனது சாமரமோ

நீ இலைகள் இல்லா பூமரமோ
உன் இமையே உனது சாமரமோ

ஈரத் தாமரைப் பூவே...
உன் இதழில் எத்தனை சாரங்கள்
புத்தன் நானே பித்தன் ஆனேன்
உறங்கவில்லை சில வாரங்கள்

போட்டி

கேள்வி எண் (1) : மேலே இருக்கும் பாடல் இடம் பெற்ற திரைப்படம் எது ?
துப்பு : சமீபத்தில் ஓர் எழுத்தாளர் இந்தத் திரைப்படத்தின் பெயரைத் தலைப்பாகக் கொண்டு ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.


கேள்வி எண் (2) : இந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் ?




கேள்வி எண் (3) : ஒரு நடிகையின் பெயரில் உள்ள முதல் இரண்டு எழுத்துக்களைப் புனைபெயராகக் கொண்ட தமிழ்க் கவிஞர் , அவர் யார் ?
துப்பு : கவிஞர் மீரா அல்ல


கேள்வி எண் (4) : ஒரு வில்லன் நடிகரின் பெயரைக் கொண்ட ஓர் இலங்கை எழுத்தாளர் , அவர் யார் ?

ஒவ்வொரு பதிலுக்கும் ஒரு புத்தகம் பரிசாக வழங்கப்படும் :-)


போட்டி முடிவு

1. பாய்மரக்கப்பல் - பரிசு பெறுபவர் ( பிரகாஷ் )

ஜனகராஜ் கதாநாயகனாக நடித்த படம் . இந்தப் பாடலைப் பாடியவர் பால்சுப்ரமணியன் . இசை கே.வி. மகாதேவன் என்று நளாயினி தெரிவித்திருக்கிறார் (நன்றி) . இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். இந்தப் பாடலின் Mp3 வடிவம் என்னிடத்தில் இருக்கிறது . தேவைப்பட்டால் maravantu@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு மடல் அனுப்பவும்


2. சுரேந்தர் - பரிசு பெறுபவர் ( ஆனந்த் )

3. அபி - பரிசு பெறுபவர் ( சொக்கன்)


கவிஞர் அபியின் இயற்பெயர் அபிபுல்லா , இவருடைய சொந்த ஊர் தேனி மாவட்டத்திலுள்ள போடி நாயகனூர் ஆகும் , முதுகலைத் தமிழ் பட்டம் பெற்ற இவர் கல்லூரியில் பேராசியராகப் பணிபுரிகிறார். "இன்னொரு நான்" என்பது இவர் எழுதிய முதல்(1967) கவிதை ஆகும் . மெளனத்தின் நாவுகள் (1974) , அந்தர நடை (1979) , என்ற ஒன்று (1988) , அபிகவிதைகள் ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார் . மேலும் லா.ச.ராமாமிர்தம் நாவல்களை ஆய்வு செய்துடாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார். சமீபத்தில் நண்பர் சுதாகர் கஸ்தூரி அவர்கள் அபியின் கவிதைகள் குறித்து ஒரு பதிவை இட்டிருக்கிறார்


4. மு.பொன்னம்பலம் - பரிசு பெறுபவர் (பெயரில்லாப்பூச்சி)

நிறைய பேர் சிலோன் விஜயேந்திரன் என்று தவறாகச் சொல்வார்கள் என்று எனக்குத் தெரியும் :-)

பி.கு

இந்தப் போட்டியின் பரிசுப் புத்தகங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனந்த் மற்றும் பெயரில்லாப்பூச்சி ஆகியோர் தங்களது முகவரியை எனக்கு அனுப்பி வைக்கவும்.

0


இனிமேல் போட்டியில் கலந்து கொள்பவர்கள் தங்களது மின்னஞ்சல் முகவரியையும் சேர்த்து எழுதுங்கள்

0


நிறைய பேர் கலந்து கொள்வதற்குள் போட்டி முடுந்துவிடுகிறதே என்று சிலர் அங்கலாய்க்கிறார்கள் :-) . இனி இப்படிச் செய்யலாம் , போட்டிக்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு முன்பே போட்டி என்றைக்கு & எத்தனை மணிக்குத் தொடங்கும் என்ற விபரத்தை முன் கூட்டியே ஒரு பதிவாக இட்டுவிடுகிறேன். போட்டியாளர்களுக்கு வசதியாக இருக்கும்.


Wednesday, October 05, 2005

இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ




இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ
இசை வண்டுகள் வந்து ஊதாப்பூ
இந்த கோலமகள் ஒரு கொய்யாப்பூ
தென்றல் கைகளினாலே கொய்யாப்பூ

0

இந்த வண்ணமகள் விழிகள் எனும் வேலை
கண்டு வர்ணனைகள் செய்வது என் வேலை
தென்றல் மெல்ல மெல்ல நீந்துகின்ற மாலை
இவள் மார்பினில் நான் ஏந்துகின்ற மாலை

0

அந்தக் காமன் விடும் மலர்க்கனைகள் அஞ்சும்
இவள் கிட்ட நின்றால் பாய்வதற்கு அஞ்சும்
இந்தத் தோகைமயில் உறவுகளை நாடி
கொஞ்சத் துடித்திருக்கும் காதலனின் நாடி

0

எந்தன் உள்ளம் எனும் சின்னஞ்சிறு பூவை
இவள் கிள்ளிக் கிள்ளி பறித்துக் கொண்ட பூவை
கை வில்லதனை வளைத்திருக்கும் நாணும்
இந்த மெல்லியளாள் புருவம் கண்டால் நாணும்

0

இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ
இசை வண்டுகள் வந்து ஊதாப்பூ
இந்த கோலமகள் ஒரு கொய்யாப்பூ
தென்றல் கைகளினாலே கொய்யாப்பூ


போட்டி

மேலே இருப்பது ஒரு திரைப்படப் பாடல்

1) இந்தப் பாடலின் விஷேசம் என்ன ? (இலக்கியத்தனமான பதில் தேவை)
2) பாடலாசிரியர் யார் ?
3) பாடகர் யார் ?
4) திரைப்படத்தின் பெயர் என்ன ?

மேலேயுள்ள நான்கு கேள்விகளுக்கும் முதலில் பதிலளிப்பவர்களுக்கு புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.

ஒவ்வொரு பதிலுக்கும் ஒரு புத்தகம் பரிசாக அனுப்பிவைக்கப்படும்.

பரிசுபெறுபவர் அயல்நாடுகளில் வசிக்கும் பட்சத்தில் , அவருடைய இந்திய நண்பர் யாருக்கேனும் புத்தகத்தை அனுப்பிவைக்கப் பரிந்துரைசெய்யவேண்டும்.


போட்டி முடிவு

1)இந்தப் பாடலின் விஷேசத்தன்மை என்ன ?
பதில் : சிலேடை அணி

இரண்டு வரிகளின் கடைசியிலும் ஒரே வார்த்தை வேறு அர்த்தங்கள் - கார்த்திக் ரமாஸ்
கார்த்திக் ரமாஸின் பதிலும் ஏற்கத்தக்கதே

0

மடக்கணி அல்லது ஒரு பொருள் பன்மொழி - பிரேம்

தண்டியலங்காரம் மடக்கணிக்கு என்ன இலக்கணம் சொல்லுதுன்னா ..

எழுத்தின் கூட்டம் இடைபிறி தின்றியும்
பெயர்த்தும் வேறு பொருள்தரின் மடக்கெனும் பெயர்த்தே

மடக்கணி என்ற பதில் ஓரளவுக்கு சரி மாதிரி தான் தெரியுது

ஒரு சொல் பன்மொழி (Homonym) என்பதை ஒரு பொருள் பன்மொழி
என்று எழுதியிருக்கிறீர்கள்

0

ஒரே சொல் வினைச் சொல்லாகவும் பெயர்ச்சொல்லாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது - பாலராஜன் கீதா

இந்த பதிலையும் ஏற்றுக் கொள்ளலாம்

ஆர்வத்தோடு இந்தக் கேள்விக்குப் பதிலளித்த கார்த்திக் ரமாஸ் ,பிரேம் மற்றும் பாலராஜன்கீதா ஆகியோருக்கு தலா ஒரு புத்தகம் வழங்கப்படும்

2)பாடலாசிரியர் யார் ?
பதில் - வாலி
பரிசு பெறுபவர் - என் .சொக்கன்

3)பாடகர் யார் ?
பதில் - எஸ்.பி. பாலசுப்பிரமணியன்
பரிசு பெறுபவர் - குமரேஷன்

4) திரைப்படத்தின் பெயர் என்ன ?
பதில் தாம்பத்யம் ஒரு சங்கீதம்
மோகன் கதாநாயகனாக நடித்த படம்
பரிசு பெறுபவர் - என் .சொக்கன்

பரிசுப்புத்தகங்கள்

1) எஸ்.வி.ராஜதுரை அவர்கள் எழுதிய சொல்லில் நனையும் காலம் - கலை இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு நூல்

2)மீட்சி சிற்றிதழ் நடத்திவந்த பிரம்மராஜன் அவர்கள் எழுதிய நாடோடி மனம் - பல மேலை நாட்டுக் கவிஞர்களைப் பற்றிய குறிப்பும் , அவர்களுடைய கவிதைகளும் அடங்கிய நூல்.

3)ஓவிய ஆர்வலர் அரவக்கோன் அவர்களின் மனைவி மற்றும் பெண் கவிஞரான கிருஷாங்கினி அவர்கள் தொகுத்து வெளியிட்ட பறத்தல் அதன் சுதந்திரம் (கவிதைத் தொகுப்பு நூல் ) - இதில் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ப் பெண்கவிஞர்கள் சிலருடைய கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன

4)அமெரிக்க வாழ் பெண் எழுத்தாளரான காஞ்சனா தாமோதரன் அவர்கள் எழுதிய பூமித்தின்னிகள் -பல்வேறு சிற்றிதழ்களில் வெளியான இலக்கிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு நூல்

5) கலைவிமர்சகர் இந்திரன் அவர்கள் எழுதிய "கவிதை ஓவியம் சிற்பம் சினிமா" - கவிதை, ஓவியம் , சிற்பம் மற்றும் சினிமா குறித்தான விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு நூல்

6) பிரமிள் (தருமுசிவராமு) எழுதிய வானமற்ற வெளி -பல்வேறு சிற்றிதழ்களில் கவிதை குறித்து வெளியான விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு நூல்

மேலே உள்ள புத்தகங்களிருந்து ஏதேனும் ஒரு புத்தகம் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படும் , என்.சொக்கன் இரண்டு கேள்விகளுக்கு சரியாக பதிலளித்திருப்பதால் அவருக்கு இரண்டு புத்தங்கள் வழங்கப்படும்.

மற்ற விபரங்களுக்குத் தனிமடலில் தொடர்பு கொள்ளவும்
maravantu@gmail.com

குலுக்கல் முறையில் யார் யாருக்கு எந்தப் புத்தகம் என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது.


கார்த்திக் ரமாஸ் - வானமற்ற வெளி (பிரமிள்)

பிரேம் - கவிதை ஓவியம் சிற்பம் சினிமா (இந்திரன்)

குமரேஷ் - நாடோடி மனம் ( பிரம்மராஜன் )

பாலராஜன்கீதா - பறத்தல் அதன் சுதந்திரம் (கிருஷாங்கினி)

சொக்கன் - பூமித்தின்னிகள் (காஞ்சனா தாமோதரன்) & சொல்லில் நனையும் காலம் (எஸ்.வி.ராஜதுரை)