Tuesday, June 21, 2005

சில துணுக்குச் செய்திகள்

அன்புள்ள நண்பர்களுக்கு

நான் யாகூ குழுமங்களில் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல்கள் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்..

0

சமீபத்தில் ஒரு நாள் திருவள்ளுவரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த போது " என்ன ஐயா , இப்படிக் கல்லைத் தூக்கிப் போட்டுவிட்டீரே ? "என்று கேட்டேன்.

அவர் அப்போது நூல் பஞ்சம் காரணமாக கைத்தறியைச் சும்மா போட்டுவிட்டு ,சத்தியாகிரகம் செய்யலாமா ? இல்லை மந்திரிகளுக்குக் கறுப்புக் கொடி காட்டலாமா ? என்று யோசித்துக் கொண்டிருந்தார்.

ஆகையால் நான் கூறியதற்குத் தவறாகப் பொருள் செய்து கொண்டு, "சேச்சே, கல்லைத் தூக்கிப் போடுகிறதாவது , அது யார் செய்கிற வேலை ? மந்திரிகள் மீது கல்லைத் தூக்கிப் போடுவது என்றால் அப்புறம் நாட்டிலே இருக்கும் பஞ்சம் போதாதென்று , கல்லுக்கும் பஞ்சம் வந்துவிடுமே ? " என்றார்.


"ஐயையோ அப்படி ஒன்றும் சொல்லவில்லையே , என் தலையிலே கல்லைத் தூக்கிப் போட்டுவிட்டீர்களே என்றல்லவா சொன்னேன் "

அடடா , கல்லுக்குக் காயம் பட்டுவிட்டதா ? என்றார் திருவள்ளுவர்.

இல்லை, இல்லை , உம்முடைய குறள் ஒன்றைச் சொல்லவந்தேன்.

"தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று "

என்பதாக ஒரு குறள் பாடியிருக்கிறீர்கள் அல்லவா ? அதைத் தான் குறிப்பிட்டேன்.ஒருவன் தோன்றும் போதே எப்படி ஐயா புகழோடு தோன்ற முடியும் ? சீசர் என்ன ,நெப்போலியன் என்ன, ஹிட்லர் என்ன , மக் ஆர்தர் என்ன இப்படிப்பட்டவர்கள் எல்லாம் கூட பிறந்து , பிறகு தோலைக் கடித்துத் துருத்தியைக் கடித்து , அப்புறம் தானே வேட்டை நாய்களாகியிருக்கிறார்கள் . பிறக்கும் போதே புகழோடு தோன்றிய ஒரே ஒருவரைப் பற்றித் தான் காவிய இதிகாசங்களிலே கூட கேள்விப்பட்டிருக்கிறோம் . துரியோதனன் பிறக்கும் போது பதினாறாயிரம் நரிகள் ஏக காலத்தில் சுருதி பேதம் செய்து ராகமாலிகை எல்லாம் பாடினவாம் ! துரியோதனனைப் போல் எல்லோரும் எப்படிப் பிறக்க முடியும் ? தோன்றினால் புகழோடு தோன்ற வேண்டும் இல்லாவிட்டால் தோன்றாமல் இருக்க வேண்டும் என்றால் எப்படி அது சாத்தியம் ? தோன்றாமல் இருப்பது நம்முடைய வசத்தில் இருக்கிறதா ? " என்று என்று சராமாரியாகப் பொழிந்தேன் . வள்ளுவர் திக்குமுக்காடிப் போனார்.


தகவல்: கல்கி வளர்த்த சிரிப்பு அலைகள்

000000000000000000000000000000000000000000000000

மனிதர்களைத் தேவர்களாக்கக் கூடிய தலைசிறந்த உணர்ச்சிகளுள் தலை சிறந்தது காதல்.வாழ்க்கையில் சிறிது காலமாவது அதை அனுபவித்தவர்கள் இனிய சுபாவமும் , தாராள மனமும் கொண்டவர்களாயிருப்பார்கள். அந்த உணர்ச்சியை அனுபவித்து அறியாதவர்களோ அசூசையும் துவேஷமும் பொங்கும் உள்ளத்தினராய் எப்போதும் கடுகடுப்பாகவே இருப்பார்கள் .
காதலில் ஒரே ஒரு குறை உண்டு . அதில் தேக தத்துவமும் கலந்திருக்கும் காரணத்தினால் அதுநெடுங்காலம் நீடித்து நிற்பதில்லை.நாளடைவில் அதனுடைய வலிமை குன்றி விடுகிறது .அதற்குப் பிறகும் மணவாழ்க்கை சந்தோசமாய் நடக்க வேண்டுமானால் இன்னும் சில நிபந்தனைகளும் நிறைவேற வேண்டும்.
புருஷனும் மனைவியும் ஏறக்குறைய ஒத்த அறிவு நிலையில் இருக்க வேண்டும் . புருஷன் கம்பனையும் காளிதாசனையும் ஆராய்ந்து கொண்டிருக்கும் பொழுது , மனைவி அடுத்த வீட்டுக்காரியின் காதுத் தோட்டையும் கைவளையலையும் ஆராய்ந்து கொண்டிருப்பவளாய் இருந்தால் அவர்களுடைய இல்வாழ்க்கை லட்சிய இல்வாழ்க்கையாக முடியாது .

தகவல்: கல்கி கட்டுரைகள்

0000000000000000000000000000000000000000000000000000000

ராஜாஜி அவர்கள் சேலத்தில் வக்கீலாகப் பணிபுரிந்த பொழுது ,தனது வேலைக்காரர் ஒருவரை அழைத்து , ஒரு தபால் உறையில் (Postal Cover) தபால் தலை (Stamp) ஒன்றை ஒட்டி எடுத்து வருமாறு கூறினாராம் .
சிறிது நேரத்தில் அந்த வேலைக்காரர் , தபால் தலை ஒன்றை ஒட்டி ராஜாஜியிடம் கொடுத்தாராம்.அந்த தபால் உறையை வாங்கிப் பார்த்த ராஜாஜி , வேலைக்காரரிடம் "நாங்கள் பிரிட்டிஷ் மன்னனை கவிழ்ப்பதற்காக எவ்வளவோ பாடுபடுகிறோம்.ஆனால் நீ அவரை ஒரு நிமிடத்தில் கவிழ்த்துவிட்டாயே .. ! " என்று கூறி , வாய்விட்டுச் சிரித்தாராம் .

அந்த வேலைக்காரர் பிரிட்டிஷ் மன்னனின் உருவம் பொதித்த தபால் தலையை , தலைகீழாக(Upside down) ஒட்டியிருந்தாராம் .

தகவல் : உலகைக் கவர்ந்த உன்னத நிகழ்ச்சிகள் - பூவை.எஸ்.ஆறுமுகம்

000000000000000000000000000000000000000000000000000000

இலக்கிய கூட்டமொன்றில் கண்ணதாசன் அவர்கள் , " கண்ணன் என் மன்னன் , அவன் கானத்தைக் கேட்டால் பட்டமரம் தளிர்க்கும் " என்று பேசிக் கொண்டிருந்தாராம் .
முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒருவர் எழுந்து " கண்ணன் வாசிக்கும் புல்லாங்குழல் கூட பட்டமரம் தானே ? , கண்ணபிரான் கைகளில் இருந்தும், அது மட்டும் ஏன் தளிர்க்கவில்லை " என்று கேட்டாராம்.
உடனே கண்ணதாசன் அவர்கள் , " கண்ணன் கானத்தைக் கேட்டால் பட்டமரம் தளிர்க்கும் , ஆனால் புல்லாங்குழல் கண்ணனின் கையிலேயே பட்டுக் கொண்டிருக்கிறது ,பெருமாளின் கரம் பட்டால் மீண்டும் பிறவி கிடையாது , நேராக மோட்சம் தான் ! அதனால் தான் புல்லாங்குழல் தளிர்க்கவில்லை " என்று கூறினாராம் .


(தகவல் : கேள்விகளும் உங்கள் பாக்யராஜின் பதில்களும் : பாகம் 2)

00000000000000000000000000000000000000000000000000000

ராயர்காபிகிளப்பில் வால்டேர் குறித்தான இழையில் நான் அனுப்பிய மடல்..

அன்புள்ள பாலாஜி மற்றும் இந்திராபார்த்தசாரதி அவர்களுக்கு ,

வால்டேர் குறித்தான தங்களின் கடிதங்கள் பல்வேறு விடயங்களைத் தாங்கி வந்துள்ளன.
மிக்க நன்றி .


வால்டேர் குறித்த வேறு முக்கிய புத்தகங்கள் இருந்தால் சொல்லுங்கள்.- பாஸ்டன் பாலாஜி

சிந்தனைச் சிற்பி சி.பி . சிற்றரசு அவர்கள் எழுதிய உலகைத் திருத்திய உத்தமர்கள் என்ற புத்தகத்தில் வால்டேரைப் பற்றிய ஒரு சிறு கட்டுரை இருக்கிறது .நான் அந்தக் கட்டுரையிலிருந்து உள்வாங்கிய சில செய்திகளை மட்டும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

அதற்கு முன்னால் ஒரு குட்டித் துணுக்கு சொல்லிவிடுகிறேன் .சாக்ரடீஸின் நண்பர் ஒருவர், சாக்ரடீஸிடம் " உன்னிடம் ஒரு செய்தி கூறவேண்டும் " என்றாராம் . உடனே சாக்ரடீஸ் " நீ என்னிடம் அந்த செய்தியையைக் கூறுவதற்கு முன் அதை வாய்மை ,நன்மை , இனிமை என்னும் மூன்று சல்லடைகளால் சலித்துவிட்டுப் பிறகு கூறு" என்றாராம் .உடனே அவருடைய நண்பர் " அம் மூன்று சல்லடைகளால் சலித்தால் கூறுவதற்கு ஒன்றுமே இல்லை " என்றாராம் . நான் கூறப் போகும் செய்திகள் சல்லடைகளில் சலித்ததோ , இல்லை சலிக்காததோ ... ஆனால் படிக்கப் போகின்றஉங்களுக்கு சலிக்காது :-) என்ற நம்பிக்கையில் தட்டிவிடுகிறேன் . கோர்வையாக இருக்கவேண்டும் என்பதற்காக, கட்டுரையின் சில வரிகளை நீக்கியும், கொஞ்சம் மாற்றியும் ,இடைச்செருகலாய் எனது வரிகள் ஒன்றிரண்டைச் சேர்த்தும் இங்கே இடுகிறேன் .

0
வால்டேர் பிறந்தவுடன்(21-11-1694) மிகவும் மெலிந்து காணப்பட்டார் ,அவர் ஒரு

நாளைக்குமேல் உயிர் வாழ மாட்டார் என்று சிலர் கூறினார்கள் .ஆனால் 84ஆண்டுகள் இந்தப் புவியில் வாழ்ந்தார் (1694 - 1778)

வால்டேரின் வாழ்க்கையில் நடந்த சில சுவையான சம்பவங்கள் .....

ஆர்மண்ட் (Armand) என்பவர் வால்டேரின் அண்ணன் ஆவார் , அவர் ஜேன்சனிசம் என்ற மதசீர்திருத்த இயக்கத்தில் சேர்ந்து அதன் கருத்துக்களை எழுதிக்கொண்டிருந்தார்." என்ன தொழில் செய்யப் போகிறாய் ? " என்று கேட்ட தந்தையிடம் , இலக்கிய தொழில்செய்யப் போகிறேன் " என்று கூறியிருக்கிறார் வால்டேர் . வால்டேரின் தந்தைக்கு தன் மகன்களின் போக்கு பிடிக்கவில்லை , "எனக்கு இரண்டு முட்டாள்கள் பிறந்திருக்கிறார்கள், ஒருவன் வசன முட்டாள் (ஆர்மண்ட்), மற்றொருவன் கவிதை முட்டாள் (வால்டேர்) , அவர்களை எப்படியாவது திருத்துங்களேன் "என்று தன் நண்பர்களிடம் சதா புலம்பிக் கொண்டேயிருப்பாராம் . கொள்கைவாதிகளைக் காட்டிலும் காரிய வாதிகளே சிறந்தவர்கள் என்று அவர் கொண்டிருந்த கொள்கையை தன் இரு மகன்களும் சேர்ந்து தவிடுபொடியாக்குவதை இவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
நுண்கலையில் (Fine Arts) கைதேர்ந்த நினாந்தி எல்வென்கொல் என்பவர் ,வால்டேருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறதென்று உணர்ந்து , அவருக்குக் கல்வியும் போதித்து , சாகும் போது தனக்குத் தேவையான நூல்களை வாங்கிக் கொள்வதற்காக 2000 பிராங்குகளை வால்டேருக்கு எழுதி வைத்தார் .
பாரீஸைத் தலை நகரமாகக் கொண்ட ப்ரான்ஸை ஆண்ட மன்னனை , அவனுடைய மதமும் ஆண்டு கொண்டிருந்தது . பதினான்காம் லூயி இறந்து பதினைந்தாம் லூயி பட்டத்திற்கு வந்த நேரம்.அவனுக்குத் தக்க வயது வராத காரணத்தினால் ஒரு மடையனைக் கார்டியனாக்கி இருந்தார்கள் ; ஊரெல்லாம் சிரித்தது , அவன் அரசனுக்குத் தெரியாமல் லாயத்திலிருந்த குதிரைகளை விற்றுவிட்டான்.இதையறிந்த வால்டேர் கிண்டலாக " அரச சபையிலே அன்றாடம் கூடிக் கலையும் கழுதைகளிலே பாதியை விற்றிருந்தால் கூட எவ்வளவோ கண்ணியமாகவும், மேலாகவும் இருந்திருக்கும் " என்று சொன்னார் . இதைக் கேட்ட கார்டியன் வால்டேரை பாஸ்டிலி சிறையிலடைத்தான் .

"உலகத்தில் மனிதர்கள் சிரிக்கத் தெரியாமலும் , பிறரை சிரிக்கவைக்கத் தெரியாமலும் இருந்தால் பாதிப் பேர் தூக்குப் போட்டுக் கொண்டு மாண்டு போவார்கள் "என்கிறார் வால்டேர் ஓரிடத்தில்.
வால்டேருடைய நண்பர்களின் வற்புறுத்தலாலோ,கார்டியனின் மனமாற்றத்தாலோ சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார் வால்டேர் ,சிறையை விட்டு வெளியே வந்தவுடன் துன்ப இயல் நாடகம் ஒன்றையும் , ஒடிப்பி(oedipe) என்ற மற்றொரு நாடகத்தையும் எழுதி அரங்கேற்றினார் . அதுவரை வால்டேரை " ஒரு உதவாக் கரை " என்று சொல்லிக் கொண்டிருந்த அவருடைய தந்தையே , நாடகத்தைப்பார்த்துவிட்டு வால்டேரை வெகுவாகப் பாராட்டினார் . இவருடைய நாடகத்தை சில மதகுருமார்கள் வெறுத்தார்கள் , " ஒருவன் நாடகத் தொழிலை விட்டுவிட்டேன் என்று சொன்னாலன்றி அவனைப் புதைக்க , கல்லறையில் இடம் தருவதில்லை ; மதச் சடங்குகளும் இல்லை " என்று கூறினார்கள் . பிரெஞ்சு நாட்டின் புகழ் வாய்ந்த நடிகை ஏட்ரியன் லெக் ரூவியா என்பவள் நோய்வாய்ப்பட்டு மரணப்படுக்கையிலே கிடக்கிறாள் , அருகில் வால்டேர் நின்று கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தார்.மத குருக்கள் வந்தார்கள் , தான் செய்த நடிப்புத்தொழிலுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்டாலன்றி மதச் சடங்குகளோ , கல்லறையில் இடமோ கொடுக்க முடியாது என்று பயமுறுத்தினர் . என்றாலும் அவள் " என்னை ஆளாக்கி , பேரும் புகழும் பணமும் சம்பாதித்துக் கொடுத்த அந்தத் தொழிலுக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று மறுத்து விட்டாள் . சிறிது நேரத்தில் இறந்தும் போய்விட்டாள் , உறவினர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அடக்கம் செய்வதற்காக ஆயத்தம் செய்து கொண்டிருந்த பொழுது ,போலீஸ் புகுந்து தடியாலடித்து எல்லோரையும் விரட்டிவிட்டு பிணத்தை ஒரு குப்பை மேட்டில் போட்டு சுண்ணாம்புத் தண்ணீரை கொதிக்க கொதிக்க அந்த சடலத்தின் மேல் ஊற்றி அது பஞ்சுபஞ்சாகப் போகும் வரை தடியால் அடித்துவிட்டுப் போய்விட்டார்கள் .
இதைக் கண்ட பிறகு தான் வல்டேர் , இனி மதக் கொடுமைகளை ஒழித்தாலன்றி சமுதாயம் தன்மானத்தோடு வாழ முடியாது என்ற முடிவுக்கு வந்தார் .அவர் எழுதிய நாடகங்கள் நடிக்கத் தொடங்கிய இரண்டொரு நாட்களில் தடை போடப்படும் . காரணம் , முன்பு அந்த நடிகையின் மீது நடத்தப் பட்ட கோரக் கொடுமைக்குப் பிறகு , சமுதாய மூடவழக்கங்களைத் தாக்கி நாடகங்கள் அமைத்ததன் விளைவுதான்
.

முப்பதாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இறந்த லிஸ்பன் பூகம்பம்,அதனால் உதித்த கண்மூடித்தனமான கடவுள் நம்பிக்கைகுறித்த கிண்டல், போரில் தோற்றதற்காக சுட்டு தண்டிக்கப்பட்டஉற்ற நண்பனின் பிரிவு, ஆகியவற்றை உள்ளடக்கி எழுதப்பட்டCandide-இன் விமர்சனம். - பாஸ்டன் பாலாஜி


Candide என்ற கதை எழுதுவதற்குக் காரணமாயிருந்தது லிஸ்பன் பூகம்பம் ,1756 நவம்பர் திங்களில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தில் 30,000 பேர் உயிரிழந்தனர் ,கிருத்துவமதத்தின் முக்கியமான திருவிழாவான (All Saints Day) அன்று தான் இந்த பூகம்பம் நடந்தது . இதை ,லிஸ்பன் மக்கள் செய்த குற்றம் என்றனர் மத குருமார்கள் . அதை எதிர்த்து தீப்பொறி பறக்க ஒரு கவிதை எழுதி ,இது கடவுளின் குற்றம் என்று சுட்டிக் காட்டினார் வால்டேர் .


வால்டேர் கூர்மையான அறிவாளி. பிரபுக்களோடு அவருக்கு ஒருவிதமான love-hate relationship இருந்தது. பிரஷ்யா நாட்டுமன்னன் Federickக்குக்கும் அவருக்குமிடையே இருந்த நட்பை உதாரணமாகச் சொல்லலாம்.அதிகாரமும் செல்வாக்குமுடைய எல்லாரையும்போல பிரஷ்ய மன்னனுக்கு தான் கவிஞன் என்ற எண்ணம் ஆழமாக இருந்தது.தன்னுடைய கவிதைகளை விருந்தாளியாக வந்திருந்த வால்டேரிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னான்.அரசனிடம் அவை பற்றிப் பாராட்டிக் கூறிவிட்டு, அவர் தம் நண்பனிடம் கூறியிருக்கிறார்:' The king has sent me his dirty linen to wash' - இந்திரா பார்த்தசாரதி

நோகன் பிரபு கலந்து கொண்ட ஒரு விருந்தில் வால்டேரும் கலந்து கொண்டு தன் நண்பர்களோடு உரக்கப் பேசிக் கொண்டிருந்தாராம் . " யார் அவன் ? நான் இருக்கிறேன் என்று தெரியாமல் உரக்கப் பேசிக் கொண்டிருக்கிறான் " என்று நோகன்பிரபு கேட்டாராம் . உடனே வால்டேர் " பிரபு அவர்களே , ஏதோ குடும்ப கவுரத்திற்காக பிரபு பட்டம் பெற்றிருக்கிற தங்களைப் போலல்லாமல் சுயமாகவே சிந்தித்துச் சம்பாதித்து வாழ்க்கையை மேம்படுத்திக் கொண்ட ஒரு கனவான் " என்று சுடச் சுட பதிலளித்தாராம் . இதனால் ஆத்திரம் அடைந்த நோகன் பிரபு , ஆட்களை விட்டு அவரை நையப்புடைத்தாராம் . ஆனால் அப்போதும் , " வால்டேரை எங்கு வேண்டுமாலும் அடியுங்கள் , ஆனால் அவன் தலையில் மட்டும் அடிக்காதீர்கள் . ஏனென்றால் அந்தத் தலையிலிருந்து இன்னும் எவ்வளவோ வரவேண்டியிருக்கிறது "என்று நோகன் பிரபு கூறினாராம்.

0

பிரஷ்ய நாட்டு மன்னன் ஆதரவில் சிறிது காலம் வாழ்ந்தார் வால்டேர் . அது சமயம் மன்னனிடம் சிலர் வால்டேரைத் துரத்திவிடுமாறு கேட்டுக் கொண்டிருந்தார்கள் . அதற்கு பிரெடெரிக் மன்னன் " அதிகமாகப் போனால் வால்டேர் இன்னும் ஓராண்டு காலம் இங்கே இருக்க வேண்டியதிருக்கும் . அதன் பிறகு ஆரஞ்சுப்பழத்தை பிழிந்த உடன் தோலை எறிந்து விடுவதைப் போல் எறிந்து விடலாம்" என்று கூறியிருக்கிறார். இந்தச் செய்தி வால்டேருக்கும் எட்டியது.இருந்தாலும் இதைக் காட்டிக் கொள்ளாமல் , அறிந்து கொள்ளாதவர் போலே நடந்து கொண்டனர் .ஆனால் பகை மட்டும் வளர்ந்து கொண்டே போனது .

0

வால்டேர், என்னுடைய வணிகமெல்லாம் நான் நினைப்பதை மக்களுக்குச் சொல்வதுதான் என்று கூறினார் , (My trade is to say what I think ) . தனது தள்ளாத வயதிலும் (83) இரேனி(Irene) என்ற ஒரு நாடகத்தை எழுதி , அது நடிக்கப்படுவதைத் தானே உட்கார்ந்து பார்த்து விட்டு படுக்கையில் படுத்துவிட்டார் . மரணம் நெருங்குவதையும் அறிந்து கொண்டார்.இதையறிந்த ஒரு மத குரு வால்டேரின் அருகில் வந்து ,தங்களுக்கு ஆத்ம விடுதலை அளிக்க வந்திருக்கிறேன் எனறார் . உடனே வால்டர் அவரிடம் ," தாங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் ? " என்று கேட்டார் . அதற்கு அந்த மதகுரு நான் கடவுளிடமிருந்து நேராக வருகிறேன் என்றார் . உடனே வால்டேர் அதற்கான அத்தாட்சியைக் காட்டுங்கள் என்று கேட்டார் .மதகுரு தலை குனிந்த படியே திரும்பி விட்டார் .


0

மனித சுதந்திரத்தைப் பற்றி எழுதிய ரூஸோ, தம் வாழ்நாள் முழுவதும் ஒரு பணிப்பெண்ணுடன் இருந்தார். அவளுக்கு சிநேகிதி அல்லது மனைவி என்றஅந்தஸ்து தரவேயில்லை. அவர்காலத்திய அவர் நண்பர்கள் அவளை வேலைக்காரி என்றே நினைத்தார்கள். நம்முடைய இந்தக் காலத்திய 'புரட்சிச் சிந்தனையாளர்' களின் சொந்த வாழ்க்கையும் இப்படித்தான். - இந்திரா பார்த்தசாரதி

" மனிதர்களைப் பற்றிச் சிந்திப்பது மனிதனின் கடமை " என்று சொன்னவர் சாக்ரடீஸ் . மனிதர்கள் எங்கும் சுதந்திரமாகவே பிறக்கிறார்கள் , ஆனால் என்றும் தளைகளால் பூட்டப் பட்டிருக்கிறார்கள் " என்று சொன்னவர் ரூசோ( 1712-1778) ,மகத்தான பிரெஞ்சுப் புரட்சிக்கு எழுத்துக்கள் என்ற வல்லமை மிக்க வெடிகுண்டுகளால் சமுதாய ஒப்பந்தம் (Socail Contract - 1762- Jean Jacques Rousseau ) என்ற நூலை ஆக்கித் தந்தவர் ரூசோ . ரூசோவின் இளமை அவ்வளவு சுவையுள்ளதாகவோ , மேன்மை பொருந்தியதாகவோ , பெண்களிடத்தில் நடந்து கொள்ள வேண்டிய இங்கிதம் நிறைந்ததாகவோ ,சிறந்த படிப்பாளி என்று சொல்லத்தக்க அளவிலோ இருந்ததில்லை . எந்த சீமாட்டியாவது இவனை விருந்துக்கு அழைத்தால் , உணவை சுவைப்பதை விட உணவிட்டவளின் அங்க அசைவுகளையே பார்த்துக் கொண்டிருப்பானாம் .இதை அவரே ஒப்புக் கொள்கிறார் . " நான் பதினைந்து , பதினாறு வயதிற்குள்ளாகவே கட்டுக்கடங்காத காமந்தகாரனாய்விட்டேன் " என்கிறான் ஓரிடத்தில். தன் இளம் வயதில் ரூசோ பொறுப்பில்லாமல் நடந்து கொண்ட காரணத்தினால் பாரீஸ் நகரத் தெருக்களில் திரிய வேண்டிய நிலமைக்குத் தள்ளப்பட்டார் .பிறகு சேவாய் நகரை அடைந்து பாண்ட் வீர் என்ற பாதிரியார் தயவில் அன்னெஸி நகரத்திலிருந்து , லாரண்ஸ் சீமாட்டியை அணுகி , பாதிரியார் கொடுத்த சிபாரிசு கடிதத்தைக் கொடுத்து அங்கு தங்கியிருந்தார் . அப்போது ரூஸோவுக்கு வயது 15 ,அந்த சீமாட்டிக்கு வயது 28 , தன்மேல் கருணை காட்டிய அவள் காதல் காட்டமாட்டாளா என்று ஏங்கினார் . அதை அவள் புரிந்து கொள்ளவுமில்லை . இப்படியே அலைந்த இவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது .ஒரு பிரபுவின் தயவால் ஓர் உணவு விடுதியில் தங்க வேண்டி வந்தது .அங்கே தெரஸ் என்ற வேலைக்காரி பணிபுரிந்து வந்தாள். அவளுக்கு எழுதப் படிக்கத் தெரியாது , அழகானவள் ,அவளிடம் ரூசோ கொண்ட நட்பு, காதலாக மாறி அவள் மூலம் இரண்டு குழந்தைகளைப் பெற்றார் . அந்தக் குழந்தைகள் ,சட்ட ரீதியான மனைவிக்குப் பிறக்காத காரணத்தால் , ஒரு அனாதை விடுதியில் விட்டுவிட்டார் . இவர் தான் பிளேட்டோ குழந்தைகளைப் பற்றி எழுதிய நூலைத் தழுவி (Emile) என்ற நூலை எழுதினார் .அதே ஆண்டு தான் (Social contrast) என்ற உலகப் புகழ் பெற்ற நூலை எழுதினார் . ஒரு கட்டத்தில் ரூசோவை கிருஸ்துவின் துரோகி என்று சொல்லி எங்கு சென்றாலும் கல்லால் அடித்து விரட்டினார்கள் . ஆனால் இங்கிலாந்து மட்டும் இவரை அன்போடு அழைத்துக் கொண்டது ." காலத்தின் மேல் குற்றமில்லை . மக்கள் மனோ நிலை தான் காரணம் "என்று ஷேக்ஸ்பியர் கூறியது போல் நமது நினைப்பே காலத்தின் நிலைக்களனாய் அமைந்து விடுகிறது .

ஒரு காலத்தில் பாரீஸ் நகரத்து உயர் நீதி மன்றத்தின் முன்னால் தீயிட்டுக் கொழுத்தப் பட்ட சமுதாய ஒப்பந்தம் மற்றும் எமிலி ஆகிய நூல்களை உலக மக்கள் போற்றத் துவங்கியதைக் கண்டதும் , பிரான்சு நாடு ரூசோவை அழைத்துச் சிறப்பிக்கலாமா என்றெண்ணியது .ஆனால் ரூசோவின் மனத்தில் விழுந்திருந்த பழைய வடு மறையவில்லை.ஆதலால் , அவர் பிரான்சுக்கு செல்லவுமில்லை .இப்படி அண்டத்தையே கலக்கிய பேருருவமாய்த் திகழ்ந்த ரூசோ ,கிபி 1778 ஆம் ஆண்டு முகமெல்லாம் வீங்கி , தன் அறையில் மாண்டு கிடந்தார் .அவர் மரணத்தின் உண்மையான காரணம் மறைக்கப்பட்டு மருத்துவர்களும் ஊமையாக்கப் பட்டார்கள் .

ஓஷோவின் வெற்றுப்படகு என்ற புத்தகத்திலிருந்து....

சாக்ரடீஸ் மிகவும் ஆழமாக , ஒவ்வொன்றையும் மிகவும் நுண்ணியமாகத் தெரிந்துகொள்வதற்கான கேள்விகளைக் கேட்டு வந்தார் . இதனால் ஏதென்ஸ் நகரிலுள்ள மக்கள் கோபமடைந்தார்கள் . சாக்ரடீஸ் மற்றவர்களை முட்டாளாக்குவதற்கான முயற்சியைச் செய்து கொண்டிருந்தார் . அவர்கள் சாக்ரடீஸைக் கொன்றனர். சாக்ரடீஸ் வாழ்ந்த காலத்தில் சீனாவில் சுவாங்தஸ¤ வாழ்ந்து வந்தார் . சாக்ரடீஸ் , சுவாங்தஸ¤ வைச் சந்தித்திருந்தால், இந்த ரகசியத்தைச் சொல்லியிருப்பார் .

" யாரையும் முட்டாளாக்க முயற்சி செய்யாதே , ஏனெனில் முட்டாள்கள் அதை விரும்புவதில்லை ,பைத்தியக் காரனிடம் அவன் பைத்தியம் என்பதை நிரூபிக்காதே , ஏனெனில்எந்தப் பைத்தியமும் அதை விரும்புவதில்லை , கோபமடைவான் , ஆத்திரமடைந்து உன்னைக்கொல்ல வருவான் , நீ அவனை விட உயர்ந்தவன் என்பது நிரூபிக்கப்பட்டால் , அவன் உடனே பழிவாங்கி விடுவான் . நீ முட்டாளாக இருப்பது நல்லது , அப்பொழுது மற்றவர்கள் உன்னைப் பார்த்து சந்தோசம் அடைவர். இந்த நுணுக்கமான வழிமுறை மூலம் நீ மற்றவர்களை மாற்ற முடியும் , பிறகு உனக்கு எதிராக அவர்கள் இருக்க மாட்டார்கள் ."

இதனால் தான் கீழை நாடுகளில் , முக்கியமாக இந்தியா , சீனா ,ஜப்பான் போன்ற நாடுகளில் கிரேக்க நாட்டில் சாக்ரடீஸை விஷமிட்டுக் கொன்றது போன்ற அசிங்கமான சமபவங்கள் நிகழவில்லை , இது ஜெருசலேமில் நிகழ்ந்தது - இயேசு சிலுவையில் அறையப்பட்டார் .இது ஈரானில் , எகிப்தில் மற்ற நாடுகளில் நிகழ்ந்தது - அனேக புத்திசாலிகள் கொல்லப்பட்டார்கள். இது மாதிரியான நிகழ்ச்சிகள் இந்தியாவிலோ , சீனாவிலோ ,ஜப்பானிலோ ஏற்படவில்லை . ஏனெனில் இந்த மூன்று நாடுகளிலும் உள்ள மக்கள் புத்திசாலியான மனிதனைப் போல் நடந்து கொள்வது பெருந்துன்பங்களை விளைவிக்கும் என்பதை உணர்ந்திருந்தார்கள் .
முட்டாளைப் போல , பைத்தியக்காரனைப் போல நடந்து கொள்ளுங்கள் . இது தான் புத்தி சாலியின் முதல் படியாகும் , அப்பொழுது தான் நீங்கள் அவனைக் கண்டு பயப்படமாட்டீர்கள் . நீங்கள் எதற்கும் அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருப்பீர்கள் .


0

2 comments:

Anonymous said...

நல்ல நல்ல துனுக்குகள்.. நன்றி. வீ எம்

கருத்துச் சொன்னவரு:

வீ. எம் said...

நல்ல நல்ல துனுக்குகள்.. நன்றி. வீ எம்