
அன்புள்ள நண்பர்களே
நலம் நலம் தானே ..
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வலைப் பதிய வந்திருக்கிறேன். இந்தப் பதிவில் நெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள் என்ற கவிதை நூலிருந்து சில கவிதைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
கல்பற்றா நாராயணன் , அனிதா குட்டி , பி.பி ராமச்சந்திரன் , டி.பி.ராஜீவன் , பி.ராமன், வீரான் குட்டி மற்றும் அன்வர் அலி ஆகிய 7 மலையாளக் கவிஞர்களின் படைப்புகளை ஜெயமோகன் அவர்கள் மிகவும் அழகான தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் கவிதைகள் அனைத்தும் மே 21,22,23 /2004 நாட்களில் , ஊட்டியில் நாராயண குருகுலத்தில் நித்ய சைதன்யயதி நினைவாக நடத்தப்பட்ட தமிழ் மலையாளக் கவிதை அரங்குக்காக மொழிபெயர்க்கப்பட்டதாக புத்தகமுன்னுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும் "நெடுஞ்சாலைப் புத்தர்" என்ற கவிதை தனக்கு ஓர் ஆழமான அனுபவத்தை அளித்தாகக் குறிப்பிட்டிருக்கும் ஜெயமோகன் , அந்தக் கவிதையின் தலைப்பையே புத்தகத் தலைப்பிலும் பயன்படுத்தியிருக்கிறார்.
நெடுஞ்சாலைப் புத்தர் - கல்பற்றா நாராயணன்
நேற்று நான்
நெடுஞ்சாலையைக் குறுக்கே கடக்கும்
புத்தனைக்கண்டேன்
சாயங்காலப் பரபரப்பில்
கடக்க முடியாமல்
இப்பக்கம்
வெகுநேரமாக நின்றிருந்தேன்
ஐம்பதோ
அறுபதோ
எழுபதோ
வருடம் நீளமுள்ள வாழ்வில்
எப்படிப் பார்த்தாலும் ஒரு ஒன்றரை வருடம்
நாம் இப்படி கடக்க முடியாமல்
காத்து நிற்கிறோம்
என்று எண்ணியபடி ...
அப்போது ஒருவன்
சற்றும் தயங்காமல்
மெதுவாக நெடுஞ்சாலையை கடப்பதைக் கண்டேன்
அவனைப் பின் தொடரத் தொடங்குகையில்
ஒரு வண்டி
குரோதத்துடன் என்னை நோக்கி வந்தது
ஒரு வண்டியும்
அவனுக்காக வேகத்தைக் குறைக்கவில்லை
இயல்பான
அகன்ற
தனித்த
எப்போதும் அங்கிருக்கும் பாதையில்
அவன் நடந்து மறுபக்கம் சேர்ந்தான்.
இதே போன்றதொரு கவிதையை விருட்சம் சிற்றிதழில் (அக் 92 - மார்ச் 93) ரா.ஸ்ரீனிவாசன் என்றொரு கவிஞர் எழுதியிருக்கிறார்
விபத்து - ரா.ஸ்ரீனிவாசன்
கார்களும் பேருந்துகளும்
விரைந்தபடியிருந்த
நெடுஞ்சாலையைக் குறுக்கே
கடந்துவிடக் காத்திருந்தோம்
இப்புறம் நானும்
மறுபுறம் ஒரு நாயும்
எதிர்ப்புறமிருந்து நாய்
என்புறம் கடந்து வர
என்னவோர் அவசரம் அதற்கு !
மூடத்தனம் - அதன் பின்
ஒரு கனரக வாகனம்
வேகம் .. மிக வேகம் ...
வீற்றிருந்த ஓட்டுநருக்கில்லை
குறுக்கிட்ட
நாய் பற்றிய கவனம்
செத்தது நாயென்று
என்னுடல் துள்ளினேன் அப்பால்
நிகழ்ந்தது என்ன ?
ஓர் அற்புதம்
கடக்கப்படாத சாலையின்
எதிர்ப்புறம் சுவரோரம்
நடுங்கியும் ஒடுங்கியும்
நாய் பிழைத்து நின்றது
நான் செத்துக் கிடந்தேன் !
இந்தக் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் அனைத்துக் கவிதைகளுமே எனக்குப் பிடித்திருக்கின்றன , உங்களுக்காக மேலும் இரண்டு கவிதைகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
திண்ணையும் உம்மாவும் - வீரான்குட்டி
புதுவீட்டின்
திண்ணையிடம்
உம்மாவுக்கு உள்ள பிரியம்
எனக்கு இல்லை
இரவில்
கதவுகள் மூடிய பிறகு
வெளியே
திண்ணை
குளிர்ந்து சிலிர்த்து
தனித்துக் கிடக்குமே
என்று உம்மா
அடிக்கடி திறந்து பார்ப்பாள்
காலையில்
அவசரமாக
திறந்து போகும்போது
பால் பொட்டலங்கள்
செய்தித்தாள்
இரவு பிறந்த பூனைக்குட்டிகள்
காற்று வீசியிட்ட
பழைய இலைகள்
ஆகியவற்றை மடியில் வைத்து
புன்னகைத்து அமர்ந்திருக்கும்
திண்ணை
மெல்லிய துணியால்
துடைத்து
உம்மா
திண்ணையை சுத்தப்படுத்துவாள்
மதிய வெயிலில்
துணிவிரித்து
அதில் ஒட்டிப்படுப்பாள்
உம்மா
சமையலறையில்
தனித்து
தன்னில் ஆழ்ந்து
வேலை செய்யும்போது
வாசல் கடந்து
சத்தமின்றி
உள்ளே சென்று
அவளைத் தொடும் அது
ஜின்னுகளையும்
மலக்குகளையும்
கனவு கண்டபடி
உம்மா தூங்கும்போது
இரவில்
மெல்ல வந்து அவளைத் தொட்டு
எழுப்பி
புற உலகு காணாத அவளை
படிகளில் இறக்கி
வெளியே கூட்டிக்கொண்டு
போகுமா அது ?
நட்பு என்ற கவிதையில் ஆறை ஒரு குழந்தையாக பாவித்து எழுதியிருக்கும்
விதம் ரசிக்கும் படியாக் இருக்கிறது
நட்பு - டி.பி. ராஜீவன்
ஆற்று நீர்
மல்லாந்து
பொக்கை காட்டிச் சிரித்தது
பிறகு
குப்புறப்படுத்து
மூச்சு கிடைக்காமல்
கால்கை உதறிக்கொண்டது
மணலில்
கூழாங்கல் பரப்பில்
முழந்தாளிட்டு ஊர்ந்தது
கருங்கல் பாறை விளிம்பில்
பிடித்து எழுந்து நிற்க முயன்றது
மல்லாந்து விழுந்து
தலை முட்டி அழுது
மீண்டும் தயங்கி எழுந்து
நின்று சிறுகால் வைத்து
தள்ளாடி நடந்தது
நண்டு வளைகளில் கைநுழைத்து
பரல் மீன்களை
கிச்சுகிச்சு மூட்டியது
மென்மணல் கரைகளுக்கும்
பாறைக்கூட்டங்களுக்கும்
நடுவே ஓடியது
கோயில் துறைப்படிக்கட்டுகளில் ஏறி
அரசமர மேடையை
வலம் வந்தது
என்னைக் கண்டு
அடையாளம் அறிந்து
உரக்கச் சிரித்து
கட்டிக்கொண்டது
மெல்லக் கைபிடித்து
காலடிகள் பதியாத
பாதைகளினூடாகக்
கொண்டு சென்றது
மரக்கொம்பில் அவிழ்த்து வைத்த
உள்ளாடைகளைக் கூட எடுக்காமல்
பிறந்த மேனியாய்
வீடு நோக்கி
நான் ஹைக்கூ குறித்து எழுதிய பதிவின் பின்னூட்டத்தில் சங்கர் என்றொரு நண்பர் " நான் ஏதேனும் ஹைக்கூ எழுதியிருக்கேனா ? " என்று கேட்டிருந்தார் அவருக்காக இதோ ஒரு ஹைக்கூ (பொய்க்கூ ?)
உப்பு நீரைக் குடிக்க
இவ்வளவு ஓட்டமா
அறிவு கெட்ட ஆறு !
நெடுஞ்சாலை புத்தரின் நூறு முகங்கள் -
புத்தகம் கிடைக்குமிடம்
United Writers
130/2 , Avvai shanmugam saalai
Chennai - 86
ஒரு முக்கியமான விஷயம் .. செப்டம்பர் 7 ஆந்தேதி புதன் கிழமை எனக்கு ஹேப்பி பர்த்டே .. 27 வயசு முடிஞ்சு 28 தொடங்கப் போகுது , எல்லாரும் வாழ்த்துச் சொல்லுங்கடே/டி கீழ இருக்குற போட்டோல இருக்குறது நான் தான் :-)

7 comments:
//எல்லாரும் வாழ்த்துச் சொல்லுங்கடே/டி//
சொல்லிட்டேன்.
சென்னைக்கு வரும் போது ஒரு kit kat வாங்கிக் கொண்டு வந்து நேரில் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுச் செல்லவும்.
கருத்துச் சொன்னவரு: prakash
வாழ்த்துக்கள்
கிட் கேட் ரேன்ஞ்சிற்கு உங்களை இறக்கமாட்டோம்ல, வாங்க ஹைதராபாத் பிரியாணி போவோம்.
கருத்துச் சொன்னவரு: நாராயணன்
சொல்லுங்க டீன்னு மரியாதையா கேட்டுகிட்டதுக்கு ... மனசு நெகிழ்ந்துபோச்சு போஙக. இன்னும் நிறைய ஹைக்கூ சொல்லி எல்லாரையும் பாடாய் படுத்த வாழ்த்துக்கள். பெண்மொழிகளை நிறுத்தியது சந்தோஷம். கல்யாணம் காட்சின்னு கண்டு, அடுத்து அவங்களளயும் உங்க ஹைக்கூ சொல்லி பாடாய் படுத்த வாழ்த்துக்கள். (எத்தனன நாள் நாங்களே அனுபவிக்கறது :D)
அல்ல் சைட் ந் டொனெ, உர் கைகோச் அரெ கவிதைச் அரெ க்ரெஅட். ஈ நச் ஜுச்ட் கிட்டிங்.
மன்ய் மன்ய் கப்ப்ய் ரெடுர்ன்ச் மரவன்டு!
ரெகர்ட்ச்,
ஷக்திர்பப்க
கருத்துச் சொன்னவரு: Shakthiprabha
advancice wishes
கருத்துச் சொன்னவரு: anony
Dear Prakash, Narain & shakthi
Thanks for your wishes
maravantu
கணேஷ்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அன்புடனில் வாழ்த்துக்கள் குவிந்துவிட்டது, போய்ப் பார்க்கவும்.
கருத்துச் சொன்னவரு: மஞ்சூர் ராசா
அன்புள்ள மஞ்சூர் ராஜா
வாழ்த்துக்களுக்கு நன்றிகள்
அன்புடன் மடல்களையும் பார்த்தேன்
என்றும் அன்பகலா
கருத்துச் சொன்னவரு: மரவண்டு
Post a Comment