Wednesday, September 07, 2005
மெளனியும் மண்ணாங்கட்டியும் - பாகம்(1)
வாழ்க்கைக் குறிப்பு
மெளனியின் இயற்பெயர் மணி, தஞ்சாவூர் ஜில்லாவில் உள்ள செம்மங்குடி என்ற கிராமத்தில் 27/07/1907 அன்று பிறந்தார் . கும்பகோணத்திலும் திருச்சியிலும் படித்தார் . இசையிலும் தத்துவத்திலும் அதிக ஈடுபாடு காட்டினார் . இளங்கணிதம் படித்திருந்த மெளனி வேலைக்கு எங்கும் செல்லவில்லை. சில காலம் கழித்து சிதம்பரத்திற்குக் குடிபெயர்ந்தார் ,
மெளனி , 06/06/1985 அன்று சிதம்பரத்தில் காலமானார்.
0
மெளனி இலக்கியத் துறைக்கு வந்தது அவரே எதிர்பாராத ஒரு விபத்து . கும்பகோணத்தில் , 1933 ஆம் ஆண்டு ஒரு சென்னை நண்பர் மூலமாக பி.எஸ்.ராமையாவை சந்திக்கும் வாய்ப்பு மெளனிக்கு ஏற்பட்டது. அதன் பிறகு இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டு ஸ்நேகிதம் வளர்த்துக் கொண்டார்கள் . பி.எஸ்.ராமையா மெளனியை மணிக்கொடி இதழுக்காக சிறுகதைகள் எழுதச் சொல்லி ஊக்குவித்தார் . மெளனி என்ற புனைபெயரைச்
சூட்டியவரும் பி.எஸ்.ராமையா தான். மெளனியின் முதல் கதையான
" ஏன் ? " என்ற கதை மணிக்கொடி இதழில்( பிப்ரவரி - 1936) பிரசுரமானது.
0
மெளனியின் கதைகளை ஒற்றைப் பரிமாணத்துடன் அணுகினால் ஏமாற்றமே மிஞ்சும் . அவருடைய கதைகள் யாவும் உளவியல், தத்துவம் போன்ற பல்வேறான சாரங்களை உள்ளடக்கியது . மெளனி மொத்தம் இரண்டு டஜன் கதைகள் ( 24 கதைகள் ) மட்டுமே எழுதியிருக்கிறார் . தமிழ் வாக்கிய அமைப்புகள் மெளனிக்கு எளிதாக வசப்படவில்லை . தமிழ்மொழி தன்
சிந்தனைக்குப்போதுமானதாக இல்லை என்று கூறியிருக்கும் மெளனி,
" என்னால் தமிழில் தோன்றுவதை எல்லாம் சொல்லமுடியவில்லை, சமஸ்கிருதத்தினால் கொஞ்ச நாள் தள்ளியது , இப்பொழுது ஆங்கிலத்தைக் கொண்டு ஓடுகிறது " என்று குறிப்பிட்டிருக்கிறார் . மெளனியின் எழுத்துக்கள் " அவலட்சணம், கட்டுக்கடங்காதது, ஓட்டமின்மை திருத்தமில்லாதது " என்று பலவாறான விமர்சனத்தை எதிர்கொண்டிருந்தாலும் அவருடைய எழுத்துக்கள் எல்லாம் கூட்டணி சேர்ந்து ஒரு புதிய மொழியை சிருஷ்டித்திருக்கிறது என்றே கூறலாம் .
0
மெளனியின் பெரும்பாலான கதைகள் புறவயமான உலகத்தைப் புறக்கணித்து விடுகின்றன . ஆழ்மனத்திலிருந்து வரும் சிந்தனைகளே கதையை ஒரு தொடர்வாக நகர்த்தி (Stream of Consiousness) முன்னெடுத்துச் செல்கின்றன . இவருடைய கதை மாந்தர்கள் வெளியே சிக்கொள்வதை விட மனதுக்குள் தான் அதிகம் குசுகுசுத்துக் கொள்வார்கள், உள்ளுக்குள்ளே காதலைச் சுமந்துகொண்டிருக்கிறார்கள் , திடீரென காதல் தோன்றி திடீரென அல்பாய்ஸில் போய்ச் சேர்ந்துவிடுகிறது . ஆனால் அதற்கான முறையான காரணம் எதுவும் கற்பிக்கப்படவில்லை.
0
" மெளனி கவியாகப் பிறந்திருக்க வேண்டியவர் , தப்பித் தவறி வசன உலகிற்கு வந்துவிட்டார். மெளனி கதை மாந்தர்களை மாஸோக்கிஸ்டுக்களாக விளக்குகிறார் , இவ்வகை உணர்வுக்கு வாசிப்பாளனும் கூட ஆட்படுகிறான் , அதனால் தான் மெளனி மொழிக்குத் தரும் பரிணாமத்தை கதைகளுக்குத் தருவதில்லை " என்று கூறிய சி.சு செல்லப்பா , எழுத்து சிற்றிதழில் " மெளனியின் மனக்கோலம்" என்ற தொடர்கட்டுரை (5 பாகங்கள்)எழுதியிருக்கிறார் . மேலை நாட்டுப் படைப்புகளின் தாக்கம்,தன்படைப்புகளின் மீது ஒருபோதும் படியாதவாறு தான் பார்த்துக் கொண்டதாக மெளனி கூறிக்கொண்டாலும் பின்னாட்களில்,
கா·ப்கா இலக்கிய ரீதியாக தன்னைப் பாதித்திருப்பதாக மெளனியே தெரிவித்திருக்கிறார்.
0
மெளனி தன் கதைகளில் "போலும்" என்ற வார்த்தையை அடிக்கடி பிரயோகிப்பது கண்கூடு . மெளனியின் கதைகள் சிலவற்றை பி.எஸ் . ராமையா மற்றும் எம்.வி வெங்கட்ராம் ஆகியோர் திருத்தியமைத்திருக்கிறார்கள் . திருந்தாத படிவம் , நிறைய இலக்கணப்பிழைகளோடும் நிறுத்தற்குறிகளே இல்லாமலும் காணப்பட்டிருக்கின்றன .
0
மனுஷயபுத்திரனின் கவிதை ஒன்று
சிவப்புப் பாவாடை
வேண்டுமென சொல்ல
அவசரத்திற்கு
அடையாளமேதும் சிக்காமல்
விரலை கத்தியாக்கி
தன் தொண்டையறுத்து
பாவனை இரத்தம் பெருக்குகிறாள்
ஊமைச் சிறுமி
0
தொடரும் ....
என்றும் அன்பகலா
மண்ணாங்கட்டி
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
சரியாக பார்மட் செய்யவில்லை
மன்னிக்கவும்
கருத்துச் சொன்னவரு: மண்ணாங்கட்டி
டி.என்.ராஜரத்தினம் பிள்ளை, காருகுறிச்சி போன்ற மேதைகள் தங்கள் வாயில் கௌவியிருக்கும் நாதஸ்வரம் போன்று, மலை தன் வாயில் கௌவியிருக்கும் நாதஸ்வரம் (மலைக் குகை) போன்று என்ற ரீதியில் படித்த நினைவு.
கருத்துச் சொன்னவரு: சன்னாசி
////மெளனியின் முதல் கவிதையான
" ஏன் ? " என்ற கதை மணிக்கொடி இதழில்( பிப்ரவரி - 1936) பிரசுரமானது.///
"ஏன்" கவிதையா? கதையா? சுரதால திஸ்கில போட்டு யுனிகோடுல வாங்கற மாதிரி மணிக்கொடி கவிதையை கதையா பிரசுரிக்குமா? :)
-- ஜெயஸ்ரீ.
கருத்துச் சொன்னவரு: Jsri
அன்புள்ள ஜெயஸ்ரீ
பிழையைத் திருத்திவிட்டேன் , நன்றி :-)
கருத்துச் சொன்னவரு: மரவண்டு
Post a Comment