Monday, September 19, 2005

மெளனியும் மண்ணாங்கட்டியும்-பாகம்(2)

கி.அ. சச்சிதானந்தம் அவர்கள் தொகுத்து பீகாக் பதிப்பகம் வெளியிட்ட " மெளனியின் கதைகள் "என்ற புத்தகம் என்னிடம் இருக்கிறது . இதில் 24 கதைகளும் பின்னிணைப்புகளாகமெளனியின் பேட்டி , மெளனியின் வாழ்க்கைக் குறிப்புகள் , க.நா.சு விமர்சனக்கட்டுரைமற்றும் மெளனியின் கையெழுத்துப் பிரதிகள் ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன.இந்தப் புத்தகத்தில்,கதைகள் அனைத்தும் காலவரிசையில் இடம்பெறாமல் தரவரிசையில் இடம்பெற்றிருக்கிறது என நினைக்கிறேன் . மெளனி முதலில் எழுதிய "ஏன்" என்ற கதை (பிப்ரவரி - மணிக்கொடி -1936 ), ஏனோ இந்தப் புத்தகத்தில் கடைசியாக இடம்பெற்றிருக்கிறது.


மெளனி எழுதிய 24 கதைகள் - வெளியான இதழ் மற்றும் காலம்


1) மனக்கோட்டை - எழுத்து,1963
2) மாறாட்டம் - மணிக்கொடி,1938
3) அழியாச்சுடர் -மணிக்கொடி,1937
4) சாவில் பிறந்த சிருஷ்டி -சிவாஜி,1954
5) பிரக்ஞை வெளியில் - சரஸ்வதி,1960
6) மனக்கோலம் -தேனி,1948
7) மாறுதல் - மணிக்கொடி,1937
8) பிரபஞ்சகானம் - மணிக்கொடி,1936
9) நினைவுச்சுழல் - மணிக்கொடி,1937
10) சிகிச்சை - ஹனுமான் மலர்,1937
11) உறவு, பந்தம் , பாசம் - குருஷேத்திரம் ,1968
12) எங்கிருந்தோ வந்தான்-தினமணி வருஷமலர் 1937
13) குடை நிழல் - சிவாஜிமலர் 1959
14) இந்நேரம் , இந்நேரம் - மணிக்கொடி - 1937
15) அத்துவான வெளி - குருஷேத்திரம் - 1968
16) குடும்பத்தேர் - மணிக்கொடி - 1936
17) கொஞ்ச தூரம் - மணிக்கொடி - 1937
18) தவறு - கசடதபற 1971
19) காதல் சாலை - மணிக்கொடி - 1936
20) சுந்தரி - மணிக்கொடி - 1936
21) நினைவுச்சுவடு - தேனி -1948
22) மாபெருங்காப்பியம் - தினமணி மலர் 1937
23) மிஸ்டேக் - மணிக்கொடி - 1937
24) ஏன்? - மணிக்கொடி - 1936

0

மெளனி சிறுகதையின் திருமூலரா ?

மெளனி அரிதாகவும் , உயர்வாகவும் எழுதிவந்தமைக்காக , புதுமைப்பித்தன் " மெளனி - சிறுகதையின்திருமூலர்" என்று கூறினார் . இந்த ஒற்றை வாக்கியம் இலக்கியவாதிகளிடையே சலசலப்புகளைஉருவாக்கியது . புதுமைப்பித்தனின் வாசகர்கள் சிலர் , மெளனி அரிதாக எழுதியதற்காக**மட்டுமே** புதுமைப்பித்தன் அவ்வாறு கூறினார் மற்றபடி கதைகளின் தரத்துக்காக அல்ல என்று கூறிவந்தார்கள்.

0
என் இலக்கிய நண்பர்கள் (தி.ஜானகிராமன் , க.நா.சு , மெளனி) என்ற புத்தகத்தில் ," மெளனியை சிறுகதையின் திருமூலர் என்று புதுமைப்பித்தன் ஏதோ வேகத்தில் குறிப்பிட்டுவிட்டார்என்றே எனக்குத் தோன்றுகிறது , பிழையின்றித் தமிழ் எழுத முடியாத ஒருவரைத் திருமூலரோடு புதுமைப்பித்தன் ஒப்பிட்டிருப்பது பொருத்தமற்றது " என்று எம்.வி வெங்கட் ராம் குறிப்பிட்டிருக்கிறார். தேனி சிற்றிதழ் நடத்தி வந்த எம்.வி.வெங்கட்ராம் , காதுகள் என்ற நாவலுக்காக சாகித்ய அகாடாமிவிருது பெற்றிருக்கிறார்.

0

புதுமைப்பித்தன் தெளிவான காரணத்துடனேயே மெளனியைத் தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் என்றுசொல்லியுள்ளார் . அதாவது கதைகளின் எண்ணிக்கையை வைத்து , என் கதைகளும் நானும் கட்டுரையில் வாரத்துக்கு ஐந்து ஆறு கதைகலிருந்து வருஷத்துக்கு ஒன்று என்ற திருமூலர் அந்தஸ்தை எட்டியிருக்கிறேன் என்று புதுமைப்பித்தன் கூறுவதிலிருந்தே இதைத் தெளிவாக அறிய முடியும். - ( ராஜமார்த்தாண்டன் , புதியநம்பிக்கை சிற்றிதழ் , ஜூலை ,93 )

0
ஆனால் இதைப் பற்றி க.நா.சு இவ்வாறாக எழுதியிருக்கிறார்....

புதுமைப்பித்தன் எழுதியுள்ள இலக்கிய விமர்சனக்குறிப்புகளில் ஒரு இடத்தில் மெளனியைத் திருமூலர்என்று குறிப்பிடுகிறார். அது அவர் அதிகம் எழுதாமையும் அடிக்கடி எழுதாமையும் பற்றித்தான்.தரத்தைப் பற்றியல்ல என்று விவாதிக்கிற "முற்போக்குக்" கும்பல் (புதுமைப்பித்தன் என்று "முற்போக்கு"வாதியானாரோ- அது கடவுளுக்குத் தான் வெளிச்சம்) ஒரு விஷயத்தை மறந்து விடுகிறார்கள்.மெளனியின்முதல் பத்துப் பன்னிரென்து கதைகள் புதுமைப்பித்தனையும் விட அதித துரித கதியில் எழுதப்பட்டவை.அது விஷயம் புதுமைப்பித்தனுக்கும் தெரியும்.ஆகவே திருமூலர் என்று அவர் கூறியது தரத்தைப் பற்றியும்,உருவத்தைப் பற்றியும், பிற சித்தரிப்புகள் பற்றியும் தான் என்று நான் சொல்லுகிறேன். அதைப்பற்றிநான் புதுமைப்பித்தனுடன் பேசியதுண்டு - க.நா.சு

0

பிரமிள் , ஆரம்பகாலத்தில் மெளனியின் படைப்புகள் மீது நல்ல அபிப்ராயமே கொண்டிருந்தார்.ஆனால் , க.நா.சு போன்றவர்கள் மெளனியின் வருகைக்குப்பின்னால் , புதுமைப்பித்தனைக் குறைத்தும்,மெளனியைத் தூக்கி வைத்தும் எழுதத் தொடங்கினார்கள் . இதை க.நா.சு பல விமர்சனக்கட்டுரைகளில் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் செய்திருக்கிறார். புதுமைப்பித்தனின் தீவிர ரசிகரான பிரமிளுக்கு இந்தப் போக்கு பிடிக்கவில்லை , அதைத் தொடர்ந்து மெளனியின் படைப்புகள் தரம் தாழ்ந்தவை என்றும் புதுமைப்பித்தனே சிறந்த படைப்பாளி என்றும் ஸ்தாபிக்க முற்பட்டார்.

0

மீறல் சிற்றிதழில் , மெளனியைப் பற்றி பிரமிள் எழுதிய கட்டுரையிலிருந்து சில வரிகள்...

மெளனியின் இலக்கிய பார்வை என்ன ? அவருடன் நேரில் சந்தித்துப் பேசினால் பிரபஞ்சம் தலைகீழாகத் தெரியும் என்கிறார்களே உண்மையா ? அந்தப் பேச்சுக்களைப் பதிவு செய்திருக்கலாமே ? என்ற கேள்விகள் இன்றைய தலைமுறையினருக்கு ஏற்படுவதுண்டு. மெளனியின் படைப்புகள் நம்மிடம் உள்ளன. இவற்றில் உள்ள மெளனி செம்மையான வகையில் நிற்கிற ஒரு சிருஷ்டிகரமாகும்.அவரது பேச்சுக்களிலோ இந்தச் செம்மை இராது . ஒரு மகத்தான சிற்பத்தின் சிதறுண்ட பகுதிகள் போலத்தான் அவை தோன்றும். சிற்பக் கலை நுட்பத்தை உணர்ந்தவர்களுக்கு இந்த சிதறல்களில் உள்ள சிறுபகுதிகள் ஒரு வியப்புணர்வை தரும். பெரும்பாலோனோர்
சிற்பத்தின் படைப்புப்பகுதியை விட்டு சிதறல் பகுதியைப் பார்த்து இதிலென்ன கிடக்கிறது என்பதுண்டு. தமது நேர்ப் பேச்சுகளில் இப்படிப் பிரச்சினை இருப்பதை மெளனி உணர்ந்திருந்த ஒருவராவார். எனவே தான் அவர் பேட்டி தருவதிலோ தமது நேர்ப்பேச்சுக் கள் பதிவு பெறுவதிலோ ஆர்வம் காட்டவில்லை. பதிவு செய்வதற்கு நான் முயன்றிருக்கிறேன் . விளைவு ஏமாற்றத்தைத் தந்தமையால் அதை விட்டுவிட்டேன் . பாதிக்குப் பாதி ஒரு சிறப்பான பார்வையுடன் ஆதாரமற்ற துவேஷமும் அவரிடமிருந்து வெளிப்படுவதுண்டு.பார்க்கப்போனால் 'தத்துவம்' என்றதுமே நாம் அதனுடன் கைகோர்த்தபடி பிரசன்னம் தருகிற கருணையை மெளனியிடம் எதிர்பார்க்க
முடியாது. மெளனியின் சிருஷ்டியில் கூட கருணையின் மூச்சு இயங்குவதில்லை . தமது சிறப்பு, தமது இழப்பு,இதன் விளைவான ஒரு
ஆழ்ந்த தாபம் , இந்தத் தாபத்தின் தத்துவார்த்தச் சலனம் இவைதான் மெளனியின் சிருஷ்டிகரமாக மலர்ந்து கொண்டிருக்கின்றன.
தமது சிறப்பை ஓரிரு கதைகளில் சுயரூப வர்ணனையாக அசிங்கப்படுத்தியிருந்தாலும் , இதனையே சங்கீதபாவமாக வேறு கதைகளில் உந்தப்படுத்தியிருக்கிறார் . மற்றபடி தான் என்பதே தாபமாகி இருக்கிறது . பெர்ஸனலாகப் பார்த்தால் சிறுவயதிலேயே தாயை இழந்து
மாற்றாந்தாயினால் வளர்க்கப்பட்டதின் அந்தரங்கம், அவரது தாபத்திற்கு வித்தாகி இருக்கிறது . கருணை காட்டப்படாமையினால் அதை வெளிப்படுத்தவும் முடியாத ஒரு தத்துவார்த்தம் அவரது படைப்பில் ஊடாடுவதையும் இது நிர்ணயித்திருக்கலாம் . இது பற்றி அபிப்ராய பேதத்திற்கு இடமுண்டு

0

ஒரு குணரூப வடிவில் அமைந்த (Abstract) படைப்புகளைத் தந்த அவரால்(மெளனி) புதுக்கவிதையின் இதே அம்சங்களையோ நவீன ஓவியங்களையோ உணர முடிந்ததில்லை. பார்க்கப் போனால் குணரூபத்தின்அம்சங்களையே முழுவதும் சார்ந்து எழுதாமல் 'கதை' என்ற காமிரா, மைக்சிஸ்டம் சார்ந்த வடிவில்எழுத முற்பட்டமையால் குணரூபமேயான அவரது சிருஷ்டிகரம் பரிபூரணம் பெறாமலே போய்விட்டதுஎன வேண்டும். சாவில் பிறந்த சிருஷ்டியை இவ்விஷயத்தில் தனிமைப்படுத்தி ஒரு பூரணமான உரைநடைப் படைப்பாகக்காட்டலாம் என்றாலும், கெளரி மீது சுப்பய்யர் எரிச்சல் கொண்டு , அவளது பிறந்தகத்திலிருந்துஉடனே ஊருக்குக் கிளம்பவைக்க அவளை "தனியே கூப்பிட்டு ஏதோ அவள் மனது நோகியதாப் பேசி"தாகஎழுதுகிறார் மெளனி. காமிரா , மைக்சிஸ்டம் இந்த "ஏதோ"வுக்கு ஏன் ? எதுவாக இருந்தாலும்அதைப்பதிவு செய்வது அல்லவா இந்த சிஸ்டம் ? இத்தகைய 'ஏதோ' எதையும் புதுமைப்பித்தனிடம்காணமுடியாது" - பிரமிள் , மீறல் சிற்றிதழ்

0


இதே போல நினைவுச் சுவடு கதையில் ஏதோ என்று வரும்படியாக மெளனி எழுதியிருக்கிறார்.

சேகர் எப்போது வந்தாய் - என்ன விசேஷம் - ஊரில எல்லோரும் செளக்கியமா - என்ன செய்கிறாய் .."என்று என்னவெல்லாமோ கேட்டு ஒரு பதிலில் அவனைப் பற்றிய இருபது வருஷ சமாசாரத்தையும் அறிய முயன்றுகொண்டு இருந்தேன். அவனும் எனக்கு ஏதோ பதிலளித்துக் கொண்டிருந்தான். - நினைவுச்சுவடு

0

ஏன் ? - கதைச் சுருக்கம்

" ஏன் ? " என்ற கதையின் சாரத்தை தந்தி பாஷையில் சொன்னால் " திடீர்க் காதல் , காணாமல் போய்த் திரும்பவந்த பின் சாதல்"

சுசிலா , இவள் நான் கதாநாயகி , எதிர்த்தவீட்டில் கதாநாயகன் மாதவன் குடியிருக்கிறார்.சுசிலா எட்டாவது வகுப்பு படிக்கும் அதே பள்ளியில் மாதவன் பத்தாம் வகுப்பு படிக்கிறார்.இருவரும் ஒருவரை அறிந்திருந்தாலும் இதற்கு முன்னால் ஒரு வார்த்தை கூட பேசிக்கொண்டது கிடையாது.ஒரு நாள் பள்ளிக்கூடம் முடிந்து சுசிலா வீட்டிற்குச் சென்று கொண்டிருக்கிறாள்.அவள் பின்னாலே சற்றுத் தள்ளி மாதவன் நடந்து வருகிறான். " சுசீலா ,நானும் வீட்டிற்குத்தானே போகிறேன்சேர்ந்து போகலாமே ? " என்று திடீரென கேட்டான் மாதவன். சுசிலா திடுக்கிட்டுப் பின்புறம் திரும்பிப் பார்த்தாள்.அவள் புருவங்கள் சற்று உயர்ந்து , கண்களும் சற்றுப் பெரிதாகி , " ஏன் எதற்கு ? " என்று வியப்போடு கேட்டதுபோல தோன்றின . மாதவன் தன் மனக்கட்டுப்பாட்டை இழந்தவன் போன்று " சுசீ நான் உன்னை மறக்க மாட்டேன்,நீயும் என்னை மறக்காமல் இருக்கிறாயா ? " என்று பொருத்தமில்லாமல் கேட்டான். (இது தான் திடீர்காதல் , அதாவது லா.ச.ராவின் "த்வனி" ல சொன்னால் " உன்னை நான் அறியுமுன்னர் என் உள்பிரக்ஞையிடம் நீ பீடம் கொண்டுவிட்டாய்" என்று மாதவன் சுசிலாவிடம் சொல்லாமல் சொல்கிறான்.) இருவரும் அடுத்துப் பேசிக்கொள்ளாமல் வீட்டிற்குச் சென்றுவிட்டார்கள் . புருவங்களை உயர்த்தி , கண்களைச்சிறிது பெரிதாக்கி "ஏன்?" என்று சுசிலா கேட்டது மட்டும் மாதவன் மனதிற்குள் அழுத்தமாய் பதிந்துவிட்டது .சில நாட்களில் சுசிலாவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்துவிடுகிறது . மேற்படிப்புக்காக மாதவன்அசலூருக்குச் சென்று விட்டான் ,இரண்டு வருடம் கழித்து விடுமுறையில் ஊருக்கு வருகிறான்.ஒரு நாள் மதியம் மாதவன் தன் வீட்டின் மாடியிலிருந்து எதிர்த்தவீட்டுத் திண்ணையைப் பார்த்தான்சுசிலா தன் அழும் குழந்தைக்கு தெருவில் போகும் வண்டியை விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தாள்.அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் மாதவன். அழுத்தமாய் மூளையில் பதிந்திருந்த "ஏன்?" என்ற கேள்விமேலே கிளர்ந்தெழுந்து மூளையை இழந்தவன் போலாகி நாளடைவில் பித்துப்பிடித்து செத்துப் போகிறான் மாதவன்.

0
மாதவனின் பிரேதத்தை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்கிறார்கள் , திண்ணையிலிருந்தபடியே கவனித்துக் கொண்டிருந்தசுசிலாவின் கண்களிலிருந்து விழுந்த இரண்டு சொட்டுக் கண்ணீர் "ஏன்" என்ற கேள்விக்கு அகப்படாமலேதான் கீழே சொட்டின.

இந்தக் கதையின் மூலம் " எல்லாம் விதிப்படி தான் நடக்கும் ? "ஏன்" னு காரணம்லாம் சொல்லமுடியாது " என்று மெளனி சொல்ல வருகிறார் என்று மாதிரி எனக்குத் தோன்றுகிறது

0

சாவில் பிறந்த சிருஷ்டி - கதைச்சுருக்கம்

இந்தக் கதையின் நாயகன் சுப்பய்யர் , ஐம்பது வயது மதிக்கத்தக்கவர், 10 வருடத்திற்கு முன்னால்மனைவியை இழந்த விதவன் , குழந்தை ஏதும் இல்லாத அநாதை . இரண்டாந்தாரமாக கெளரி என்ற19 வயது பெண்ணை மணந்து கொள்கிறார்.முப்பது வருட வயது இடைவெளி அவர்களுக்கிடையே ஒருசுவரை எழும்பியிருக்கிறது.


0

கெளரி தன் தங்கையின் திருமணம் முடிந்த மறுநாளில் திண்ணையில் அமர்ந்த படி தன்உறவுக்காரர்களிடம் சிரித்துப் பேசிக்கொண்டிருக்கிறாள் . அதைக் காணும் சுப்பய்யர் ," நம்மிடம்மட்டும் ஏன் இவள் இவ்வளவு கலகலப்பாக இல்லை ? " என்று மனதுக்குள் புழுங்குகிறார்,தனியேகூப்பிட்டு ஏதோ அவள் மனது நோகப் பேசி, உடனே வீட்டிற்குக் கிளம்புமாறு அவசரப்படுத்துகிறார் .

0

சுப்பய்யரும் , கெளரியும் இரயில் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள் , "தான் இழுத்தஇழுப்புக்கெல்லாம் கெளரியும் வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ ? " என்ற குற்றஉணர்வு சுப்பய்யருக்கு , இரயில் ஒரு சந்திப்பில் நிற்கிறது , ஓர் இளைஞர் அவர்களுக்கு எதிர்இருக்கையில் வந்தமர்கிறான் , அந்த இளைஞனிடம் , சுப்பய்யர் விவஸ்தையில்லாமல் ஏதேதோபேசிக்கொண்டே வருகிறார் . ஒரு கட்டத்தில் அந்த இளைஞர் கெளரியை ," சுப்பய்யரின் மகள்"என்று தவறாகப் புரிந்து கொள்கிறார். அதற்கு சுப்பய்யர் கோபப்படாமல் " பெண்ணில்லை ஸார்..பெண்ணில்லை.. அவள் நம்ப ஸம்சாரம்" என்கிறார்.

0

ஏதேதோ உளறிக்கொண்டிருந்த சுப்பய்யர் , அந்த இளைஞனிடம் படைத்தல் , காத்தல் ,அழித்தல் வேலைகளைச் செய்யும் திருமூர்த்திகளான சிவன்,பிரம்மன் ,விஷ்ணு ஆகியோருடைய புராணத்தைஎ டுத்து விடுகிறார் ( இந்தப் புராணக்கதை தான் கதையின் மையப்புள்ளி )

சுப்பய்யர் , இளைஞனிடம் சொல்லும் கதை ...............

" இந்த திருமூர்த்திகள் கிளம்பி ஊருக்கு வந்து ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொண்டு வேலைக்கு ஆரம்பித்தார்கள்.ரொம்ப நாள் செய்தார்கள் ஒற்றுமையாக .. கிரேதாயுகம் ... திரேதாயுகம்...துவாபரயுகம்..முழுசா மூன்று யுகங்கள் ஐயா.. ஒரு யுகம் பாக்கி, இந்த கலியுகம் தன்.வேலை கலைந்து சாப்பிடத் தூங்க.கலி பிறந்ததே பாருங்க சார்,நம்மைப் பிடித்து ஆட்டுகிற கலி, அதைத் தான் சொல்லுகிறேன்.அது தான்பாக்கி.அப்போது பிரும்மாவிற்கு கொஞ்சம் தூக்கம் கண்ணை அமட்டியது. காப்பி கீப்பி , பொடி கிடிஎன்று என்னவெல்லாமோ போட்டுப்பார்த்தான் போலிருக்கிறது ... ஆமாம் பிரும்மாவிற்கு தூக்கம்வந்துவிட்டது.விஷ்ணுவைக் கேட்டான். "கொஞ்சம் வேலையை நிப்பாட்டு . ஒரு சின்ன தூக்கம்போட்டுவிட்டு ஓடிவந்து விடுகிறேன் " என்றான். சரிதான் நடுவிலும் கொஞ்சம் சாப்பிடலாம் என்றுஅந்தச் சாப்பாட்டுராமன் சரி என்றான்... சிவனைப் போய் கேட்டாலோ, அது ஒரு பைத்தியம்.'முடியவே முடியாது . நீ கேட்கிறதினாலே நிச்சயமாக முடியாது.இப்போது தான் எனக்குக் குஷிகண்டிருக்கிறது' என்று சொல்லிவிட்டான்.என்ன கெஞ்சியும் மிஞ்சியும் அவனிடம் பலிக்கவில்லை.கோபம்வருகிறது ஆனால் யார் யாரை என்ன செய்யமுடியும்.ஸார் .. இந்தக் காலத்திலே எல்லோரும்ஈசுவரர்கள் இல்லையா ? எப்படியாவது துலைந்து போகிறது. அவா அவா தலைஎழுத்துப்படி நடக்கும்.நடக்கப்போவது தான் நடந்தது, ஆகப் போகிறது தலை எழுத்தாக , எனநினைத்துக் கொண்டு பிரும்மா கண் அசந்து தூங்கி விட்டான் ...சிவன் அழித்துக் கொண்டே விடாது வேலையை செய்துகொண்டிருந்தான். பிரும்மா படைத்ததை எல்லாம்குஷியில் ஒரே நொடியில் அழித்து முடித்துவிட்டான்.பிரும்மா தூங்கிக் கொண்டு இருந்தான்.படைத்ததுஆன பிறகும் பிரும்மா படைக்காததையும் சேர்த்து அழித்துக்கொண்டிருந்தான் இவன்.சாமிகளோன்னோ..எல்லாம் செய்யமுடியும் அவர்களால்.தூங்கிவிட்டு பிரம்மா தன் வேலைக்கு ஆரம்பித்தார்.அது தான்உன்னை, என்னை , இந்தப் பொம்பிள்ளை, நாய்,நரி ... எல்லாவற்றையும் படைக்கிற பிரும்மாசிருஷ்டி கொள்வதற்கு முன்னால் தான் அவைகள் சிவனால் அழிக்கப் பட்டுவிட்டாச்சே.இப்படிப் படக்கிறதிலேஏதாவது பலன் உண்டா ஸார் சொல்லுங்கோ .. என்ன பிறவிகள் நாம் எல்லாம் இந்தக் கலியில் துளுக்கிறதரிதலைகள் தான். அந்தத் திருமூர்த்திகளின் போட்டி நம்மை எல்லாம் உயிர் இல்லாமல் தவிக்கவிட்டுக் கொண்டிருக்கு. எல்லாம் தரிதலையாட்டம் தான் ஸார் இந்தக் காலத்திலே.... வேறு என்னசொல்ல இருக்கிறது ஸார். "

0

சுப்பய்யர் இறங்கவேண்டிய இடம்வந்துவிட்டது . அந்த இளைஞனின் பெயரைக் கேட்கிறார். அவன் சுப்புஎன்கிறார் அடடே என் பெயரும் அது தான் சின்ன வயதில் நானும் உங்களைப் போலத்தான் இருந்திருப்பேன்போல.. எதற்கும் ஊருக்குப் போனது ஒரு போட்டோ எடுத்து வைச்சுக்கோங்க ..' என்றுசொல்லிக்கொண்டே வண்டி நிற்குமுன் எழுந்தவர் கொஞ்சம் தள்ளாடிச் சாய்கிறார்.பக்கத்தில் இருந்த கெளரியின் அணைப்பில் அகப்பட்டு கீழே விழாது தப்புகிறார்.

0

இந்தக் கதையில் சுப்பய்யர் தன்னை நடமாடும் பிணமாகவே கருதுகிறார்.


0

நாவலாசிரியர் ·பிரான்ஸ் காப்வைப் பற்றிச் சிலவரிகள் ...

பிரான்ஸ் காப்கா திருமணம் செய்யாமல் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார் ," இலக்கியமில்லாத மற்ற அனைத்தையும் எனக்குப் பிடிக்கவில்லை , குடும்ப வாழ்வுக்கான எந்தத்தகுதியும் எனக்கில்லை , தனியாக இருந்தால் எப்போதாவது நான் என் உத்தியோகத்தைத் தூக்கிஎறியமுடியும் ,ஆனால் திருமணமான பின்பு அது எப்போதும் முடியாது , என் வாழ்வின் படுகொலையை நானே தாங்கிக் கொள்கிறேன் , மாலை நேரத்தின் விசித்திர கணங்களில் நான் என்னையேபிளந்து பார்க்கமுடிகிறது.என்னுள் இருப்பதை ஒரு பெரிய அலறலுடன் கொண்டு வரும் முனைப்பில் எனக்குவேறு வேலையே இருப்பதில்லை. ஆனாலும் கடைசியில் எங்கோ ஒரு இசைவு ஏற்பட்டு அந்தஅலறல் ஒடுக்கப்பட்டுவிடுகிறது . அதை அப்படியே வெளிவர விட்டிருப்பேனாயின் அது மேலும் என்னைவிரிவுபடுத்தி நிறைத்திருக்கக்கூடும் எதுவும் இனி என்னைக் காப்பாற்றப் போவதில்லை ,அலைகளால் இழுத்துவரப் பட்ட சடலத்தின் நிலை என்னுடையது , நீந்துகிற ஒருவன் மீது இது மோதினாலும் அவனால் அதை கடலை விட்டு வெளியே இழுக்கமுடியவில்லை.மாறாக அது அவனை இழுத்துச்சென்றுவிடுகிறது" - இவ்வாறாக கா·ப்கா தான் உயிருடன் இருந்த பொழுதே தன்னை ஒரு பிணமாகக் கருதினார். - ( நன்றி : செந்தூரம் ஜெகதீஷ்)

திண்ணைக் கட்டுரைகள்


மௌனியின் சிறுகதைகள் - மரணமும் மகத்துவமும் - பாவண்ணன்
http://www.thinnai.com/arts/ar1202011.html

சாவில் பிறந்த சிருஷ்டி கதையைப் பற்றி - பாவண்ணன்
http://www.thinnai.com/arts/ar0310024.html

மௌனியின் படைப்புகளில் இலக்கிய இடம் - ஜெயமோகன்
http://www.thinnai.com/arts/ar0710036.html

மௌனியின் படைப்புலகம் - ஒரு கலந்துரையாடல் - அரவிந்தன்
http://www.thinnai.com/arts/ar0910012.html

செம்மங்குடி - மௌனி
http://www.thinnai.com/st121702.html

சுந்தரி - மௌனி
http://www.thinnai.com/st111901.html

உறவு, பந்தம், பாசம் - மௌனி
http://www.thinnai.com/st0122012.html


முற்றிற்று ..

என்றும் அன்பகலா
மண்ணாங்கட்டி

5 comments:

Anonymous said...

nalla pathivu



கருத்துச் சொன்னவரு: venki

Anonymous said...

அத்துவான வெளி: என் பதிவில் முன்பொருமுறை தட்டச்சிப் போட்ட மற்றொரு கதை.

பதிவு மட்டும் சுட்டிகளுக்கு நன்றி.

கருத்துச் சொன்னவரு: சன்னாசி

Anonymous said...

அன்புள்ள சன்னாசி

உங்கள் கருத்துக்கும் சுட்டிக்கும் நன்றி

பி.கு : என்னோட மூத்த அண்ணனோட பேரு "சன்னாசி" தான் :-)


கருத்துச் சொன்னவரு: மரவண்டு

Anonymous said...

இந்தப் பதிவு அருமை

கருத்துச் சொன்னவரு: சுரேஷ்

Anonymous said...

அன்புள்ள வெங்கி மற்றும் சுரேஷ்

உங்கள் கருத்துக்கு நன்றி


கருத்துச் சொன்னவரு: மரவண்டு