Tuesday, May 24, 2005

மணிக்கொடி சிற்றிதழ்

நமது இந்தியா , ஆங்கிலேயர்களின் கைவசம் இருந்த காலத்திலேயே சிற்றிதழ்கள் தோன்றிவிட்டன .வணிக நோக்கமில்லாமல் இலக்கியத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து தமிழகத்தில் பல சிற்றிதழ்கள் இயங்கி வருகின்றன/ வந்தன.பல சிற்றிதழ்கள் தோன்றிய சிறிது காலத்திலேயே பொருளாதாரச் சுழலில் சிக்கி அல்பாய்ஸில் போய்ச் சேர்ந்துவிட்டன . இந்தப் பதிவில் மணிக்கொடி சிற்றிதழ் குறித்து நான் அறிந்தவைகளை மட்டும் எழுதியிருக்கிறேன் . தகவல் பிழை இருப்பின் தெரியப்படுத்தவும்.

மணிக்கொடி இதழ் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தவர்கள் என மூன்று பேரைக் குறிப்பிடலாம்

1) கு.சீனிவாசன், 2) வ.ராமசாமி , 3) டி.எஸ் சொக்கலிங்கம்.

வ.ராமசாமி

பாரதியின் உரைநடை வாரிசு என்றழைக்கப்படும் வ.ரா, பூணூல் அணிவதைத் தவிர்த்தார்.பெண்ணடிமை மூடப்பழக்கங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தார்.தாம் எழுதிய " தமிழ் நாட்டுப் பெரியார்கள் " என்ற நூலில் ஈ.வே.ரா பெரியாரையும்ஒருவராகச் சேர்த்துக் கொண்டார். இதைக் கண்டு வியந்த அறிஞர் அண்ணாதமது திராவிடநாடு பத்திரிகையில் வ.ராவைப் பற்றி எழுதுகையில் " அக்கிரகாரத்து அதிசய மனிதர் " என்று வருணித்தார் .

0

புதுவையில் அரவிந்தருடனும் பாரதியுடனும் வ.ரா வசித்த பொழுதுவங்காளி மொழியைக் கற்றுக் கொண்டு ,பக்கிம் சந்திரசட்டர்ஜி எழுதிய ஜோடிமந்திரங்களை தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினார் . தினமும் சில பக்கங்கள் என்ற முறையில் மொழி பெயர்த்து , அதை நோட்டில் எழுதிக் கொண்டுவந்தார். ஒருமுறை வ.ரா தனது மொழிபெயர்ப்பை நோட்டில் எழுதிக் கொண்டிருந்தபொழுது பாரதி வந்துவிட்டார். உடனே அந்த நோட்டை படுக்கையின் கீழே ஒளித்து வைக்க முற்படுகையில் , பாரதி குறுக்கிட்டு " என்ன ஓய் ! ரகசியம் ஒளிக்கிறீர் ? எடும் இப்படி ! " என்று நோட்டைப் படிக்க ஆரம்பித்தார் , மேலும் அரவிந்தரை அழைத்து " பாபுஜி இந்த நோட்புத்தகத்தில் என்ன இருக்கிறது தெரியுமா ? பக்கிம் பாபுவின் " ஜோடிமந்திரங்களின் மொழி பெயர்ப்பு. நம் ராமசாமி ஐயங்கார் எழுதியிருக்கிறார் .அற்புதமான தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். வசனத்தில் இனி எனக்கு வேலையில்லை ,கவிதைகளை மட்டும் நான் கவனித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.


மணிக்கொடி சீனிவாசன்



தஞ்சாவூர் ஜில்லாவில் உள்ள சீர்காழி கிராமத்தில் ,
ஸ்ரீ வெ.குப்புசாமி சாஸ்திரிக்கும் , ஸ்ரீமதி. பாகீரதி அவர்களுக்கும் 1899 ஆம் ஆண்டு மேமாதம் 30 ஆம் நாள் சீனிவாசன் பிறந்தார் . சென்னை பிரசிடெண்சி கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த பிறகு டெய்லி எக்ஸ்பிரஸ் என்ற ஆங்கில தினப் பத்திரிகையில் பணிபுரியத் துவங்கினார் , ஸ்வராஜ்யா , பிரிபிரஸ் ,ஸன் ,'டான்' ஆகிய பத்திரிகையிலும் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. சீனிவாசன் அவர்கள் ஃபிரி பிரஸ் ஜர்னலில் எழுதி வந்த காங்கிரஸ் கட்சியின் பிரச்சார செய்திகள் , அன்றைய பிரிட்டிஷ் ஆட்சிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும்,மக்களிடையே அரசைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தை உருவாக்குதாகவும் குற்றம் சாட்டப்பட்டு நாசிக் சிறையில் அடைக்கப்பட்டார். சாக்ரடீஸ் தனது சிறைவாசத்தை மனமுவந்து ஏற்றுக்கொண்டாரோ அதே போல் சீனிவாசனும் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை மனம் தளராமல் ஏற்றுக் கொண்டார் , சிறையிலிருந்த படியே புத்தகங்கள் வாசித்தார் , பிளேட்டாவின் வசனங்களைத் தமிழாக்கினார், மேலும் சிலபுத்தகங்களும் எழுதினார்.
சீனிவாசனின் மீசை ஸ்டாலின் மீசையைப் போல் இருந்ததால் அவரை ஸ்டாலின் சீனிவாசன் என்றும் அழைத்தார்கள்.



மணிக்கொடி சிற்றிதழின் தோற்றம்

நாசிக் சிறைவாசம் முடிந்த அடுத்தமாதமே கு.சீனிவாசன் சென்னைக்கு வந்தார்.சுயராஜ்ய பத்திரிகையில் பணியாற்றிய வ.ராமசாமியையும் அவர் மூலம் வரதராஜுலு நடத்தி வநத தமிழ் நாடு பத்திரிகையில் பணிபுரிந்த டி.எஸ்.சொக்கலிங்கத்தையும் அணுகி " மூவரும் இணைந்து ஒரு சஞ்சிகை ஆரம்பிக்கலாம்" என்று தெரிவித்திருக்கிறார் . இதற்கு வ.ராவும் , சொக்கலிங்கமும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள்
கு.ஸ்ரீனிவாசன் , வ.ராமசாமி , டி.எஸ் சொக்கலிங்கம் இவர்கள் மூவரும் தீர்மானித்தபடியே , லண்டனில் இருந்து வெளிவந்துகொண்டிருந்த சண்டேஅப்சர்வர் என்ற வாரப் பத்திரிகையை ஆதர்சமாகக் கொண்டு மணிக்கொடி சிற்றிதழை செப்டம்பர் 17 , 1933 இல் தொடங்கினார்கள்.



மணிக்கொடி பெயர்க்காரணம்

மணிக்கொடி என்ற பெயர் எப்படி சூட்டப்பட்டது என்பதை கு.சீனிவாசன் இவ்வாறாக விளக்குகிறார்...

ஒரு நாள் ஏதோ நினைவாக கம்பனைப் புரட்டிய பொழுது அவன் மிதிலையில்மணிக்கொடிகளைக் கண்டதாகச் சொன்னது என் மனத்தை நெருடிக் கொண்டே இருந்தது .அன்று மாலை கோட்டைக்கு அடுத்த கடல் மணலில் நாங்கள் மூவரும்பத்திரிக்கையைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். கோட்டை கொடிமரத்தில்பறந்து கொண்டிருந்த யூனியன் ஜாக் திடீரென்று கீழே விழுந்தது . அதைக் கண்டஎங்களுக்கு உணர்ச்சி பொங்கிற்று , " விழுந்தது ஆங்கிலக் கொடி , இனி அங்குபறக்க வேண்டியது நமது மணிக்கொடி" என்றேன் . ஜெயிலில் மாதந்தோறும் கொடிவணக்கம் செய்வோம்.அதனால் தான் கொடிக்கு அத்தனை மகத்துவம் . அதுவே எங்கள் பத்திரிகைக்குப் பெயராகட்டும் , என்று குதூகலத்துடம் முடிவு செய்தோம்.

மணிக்கொடியின் முதல் கட்டம்

கு.ஸ்ரீனிவாசன் , வ.ராமசாமி , டி.எஸ் சொக்கலிங்கம் ஆகிய மூவரும் இணைந்துபணியாற்றிய காலகட்டத்தை மணிக்கொடியின் முதல் கட்டம் எனக் குறிப்பிடலாம்.
" பாரதி பாடியது மணிக்கொடி . காந்தி ஏந்தியது மணிக்கொடிகாங்கிரஸ் உயர்த்தியது மணிக்கொடி . சுதந்திரப் போராட்டத்தில் பல்லாயிரம்வீரர்களை ஈடுபடச் செய்து அவர்களுக்கு உற்சாகம் ஊட்டியது மணிக்கொடி.மணிக்கொடி பாரத மக்களின் மனத்திலே ஓங்கி வளரும் அரசியல் லட்சியத்தின்நுனி .....

பொதுவாழ்விற்குக் கண்ணும் காதும் பத்திரிகை . இந்நாட்டில் இன்று தோன்றிப்பயன் தரும் ஒவ்வொரு பொது இயக்கத்திற்கும் பத்திரிகைகள் ஆதாரம் , இத்துறையில்சேவை செய்து வருவன நமது மூத்த பத்திரிகைகள் எனலாம் . அந்தக் கூட்டத்தில் மணிக்கொடியும் இன்று சேருகிறது . ஒரு சிறிது பாரத்தை இதுவும் தூக்கட்டும் . தலைமக்களின் தூய்மையையும் , நேர்மையையும் வீரத்தையும் பொதுமக்களிடம் பரப்புவதே மணிக்கொடியின் பொறுப்பு . அந்தப் பொறுப்பை மணிக்கொடி ஏற்கும் "

என்ற தலையங்கத்துடன் முதல் மணிக்கொடி வார இதழ் (17/09/1933) வெளியானது.

மணிக்கொடிதோன்றிய சிறிது காலத்திற்குப் பிறகு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் பொருட்டு கு.ஸ்ரீனிவாசன் , பம்பாய்க்குச் சென்று ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதி அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை மணிக்கொடிக்கும் , தனது குடும்பத்திற்கும் அனுப்பி வந்தார்.இது பற்றி சீனிவாசன் இவ்வாறு கூறினார் .

தொடங்கின ஆறுமாதத்திற்குள் மணிக்கொடிக்கு குருத்து உலர்ந்து விட்டது ,அதற்கு உயிர்த்தண்ணீர் தேடி வளர்க்க நான் பம்பாய்க்குப் போய் ஆங்கிலப்பத்திரிகை ஒன்றில் தொழில் மேற்கொள்ள வேண்டியதாயிற்று.

இதற்கிடையில் சொக்கலிங்கத்திற்கும் , வ.ராவிற்கும் கருத்து மோதல் ஏற்பட்டது .மணிக்கொடியிலிருந்து விலகிய வ.ரா கொழும்பிலிருந்து வெளிவந்த வீரகேசரி இதழுக்குப் பணியாற்றச் சென்றுவிட்டார் . செப்டம்பர் 1934 இல் சொக்கலிங்கம் மணிக்கொடியிலிருந்து விலகி தினமணிப் பத்திரிகைக்கு ஆசிரியராகச் சென்றுவிட்டார் .

ஜனவரி 1935 இல் ,ஸ்ரீனிவாசனின் தந்தை சென்னையில் காலமானார். அதைத்தொடர்ந்து சென்னை வந்த ஸ்ரீனிவாசன் மணிக்கொடியை மேற்கொண்டு நடத்த சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வந்தார்.மணிக்கொடியின் முதல் கட்டம் 1933 செப்டம்பரில் தொடங்கி , 1935 ஜனவரியில் முடிவுபெற்றது.
மணிக்கொடியின் முதல் கட்டம் பற்றி ஸ்ரீனிவாசன் கூறியது ...
" நான் ஒரு லட்சியக் கூடாரம் அடித்தேன் . ஒரு காற்று வீசியது , அதில்முளைகள் பிய்த்துக் கொண்டு வந்துவிட்டன . டேராத் துணியே காற்றோடுபோய்விட்டது "

மணிக்கொடியின் இரண்டாவது கட்டம்


சிறிது கால இடைவெளிக்குப் பின் , (1935 மார்ச்) பி.எஸ் ராமையா மணிக்கொடியை நடத்த முன்வந்தார் . அவருக்கு மாதம் 25 ரூபாய் சம்பளம்தரப்பட்டது.பி.எஸ் .ராமையா காலத்தில் , கி.ராமச்சந்திரன் மணிக்கொடியில் இணைந்தார் .வாரப்பத்திரிகையாக இயங்கி வந்த மணிக்கொடி இருவார இதழாக மாறியது.ராமையாவின் காலத்து மணிக்கொடி சிறுகதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது.மேலும் நவயுகப்பிரசுரம் என்ற நிறுவனத்தை ஸ்தாபித்து அதன் மூலம் புத்தகம்வெளியிடத் துவங்கினார்கள்.

மாகாண சுயாட்சி (ஏ.என்.சிவராமன்) , தேய்ந்த கனவு (கி.ராமசந்திரன்) , இரட்டை மனிதன் (கு.பா.ரா) , கப்சிப்தர்பார் (புதுமைப்பித்தனும் ,ந.ராமநத்னமும் இணைந்து எழுதிய ஹிட்லர் வரலாறு ) , பாஸிஸ்ட ஜடாமுனி (புதுமைப்பித்தன் , முசோலினி வரலாறு)ஆகிய புத்தகங்களை நவயுகப் பிரசுராலயம் வெளியிட்டது.
1938 ஆம் ஆண்டு ஜனவரி 27 இல் ஏற்பட்ட கருத்து பேதம் காரணமாக பி.எஸ் .ராமையா மணிக்கொடியை விட்டு விலகி சினிமாத் துறைக்குள் நுழைந்துவிட்டார்.

மணிக்கொடியின் வாமனானாக வந்த ராமையா திருவிக்ரமனாக வளர்ந்துவிட்டார்மாயையினால் அல்ல சேவையினால் - கு.சீனிவாசன்

மணிக்கொடியின் மூன்றாவது கட்டம்

1938 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மணிக்கொடி சிற்றிதழ் ப.இராமஸ்வாமியின் வசம் வந்தது.நவயுகப்பிரசுராலயம் மணிக்கொடி இதழைப் பற்றிய அக்கறையை விட புத்தகம் வெளியிடுவதிலேயே அக்கறையைச் செலுத்தியது .
நவயுகப் பிரசுரலாயம் நாட்டுக் கோட்டைச் செட்டியார்களிடம் விற்கப்பட்டது.அதன் பிறகு நான்கைந்து இதழுக்குப் பிறகு மணிக்கொடி இதழ் முற்றிலுமாக நின்றுவிட்டது.


மணிக்கொடி வரலாறு குறித்து புதுமைப்பித்தன்



மணிக்கொடி பொருளாதார நிர்பந்தம் என்ற நண்பரால் சிசுஹத்தி செய்யப்பட்டு அசிரத்தை என்ற குப்பைத் தொட்டியில் எறியப்பட்டு மூச்சுப் பேச்சற்றுக் கிடந்தஅந்தக் குழந்தையை எடுத்து வந்து ஆசை என்ற ஒரே அமுதூட்டி வளர்ப்பதற்காகநானும் பி.எஸ் ராமையா என்ற நண்பரும் எங்களைப் போலவே உற்சாகத்தை மட்டும்மூலதனமாகக் கொண்ட இன்னும் சக எழுத்தாளர்களும் சேர்ந்து நடத்தி வந்தோம் .அது இரண்டு மூன்று வருஷம் கன்னிப்பருவம் எய்திக் கண்ணை மயக்கும் லாவண்யத்தைப் பெறும் சமயத்தில் அதைக் கைப்பிடித்து இழுத்துக் கொண்டு ஓடும் நண்பரைப் (ப.ராமசாமி) பெற்றோம் , அவர் அவளை ஒருவருக்கு விற்றார் .விற்ற உடனே அவளுக்கு ஜீவன் முக்தி இந்தக் கலிகாலத்தில் கிடைத்தது , இதுதான் மணிக்கொடியின் கதை - புதுமைப்பித்தன்

0

ந.சிதம்பரசுப்ரமணியன் , சிட்டி (பெ.கோ.சுந்தர்ராஜன்), புதுமைப்பித்தன் , கு.ப.ரா, தி.ஜானகிராமன்,க.நா.சு , சிலம்பொலி செல்லப்பா , லா.சா.ரா, மெளனி , ஆர்.ஷண்முகசுந்தரம் , எம்.வி.வெங்கட்ராம் ஆகியோரை மணிக்கொடியின் முக்கிய எழுத்தாளர்களாகக் கருதலாம் . மணிக்கொடிக்குப் பிறகு பல சிற்றிதழ்கள் தோன்றின .

க.நா.சு , ஏப்ரல் 1939 இல் சூறாவளி என்ற இதழை கி.ராஜேந்திரனைத் துணை ஆசிரியராகக் கொண்டு
துவங்கினார். இந்த இதழில் எஸ்.ராமையா ,சிதம்பரசுரமணியன், கு.பா.ரா , புதுமைப்பித்தன் ஆகியோர் எழுதி வந்தனர். மொத்தம் 20 இதழ்களை வெளியிட்டபிறகு சூறாவளி இதழ் நின்றுவிட்டது.

வீ.ர.ராஜகோபாலன் (சாலிவாஹணன் ) , ஜூன் 1942 இல் கலாமோகினி என்றமாதமிருமுறை சஞ்சிகையைத் திருச்சியில் துவங்கினார்.சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இதழும் நின்று விட்டது.

திருலோகசீதாராம் , 05/08/1943 இல் கிராம ஊழியன் என்ற இதழை கு.பா.ராஜகோபாலனைக் கெளரவ ஆசிரியராகக் கொண்டு துவங்கினார்.கு.பா.ரா. , ஜானகி ராமனை கிராம ஊழியனில் எழுதவைத்தார் , 1944 ஆம் ஆண்டின் இறுதியில் கு.பா.ரா உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்.அதற்குப் பிறகு வல்லிக்கண்ணன் கிராமஊழியனில் பணியாற்ற வந்தார்.
1944 ஆம் ஆண்டின் இறுதியில் திருலோகசீதாராம் சிவாஜி என்ற புது இதழைத் தொடங்கியவுடன் ,வல்லிக்கண்ணன் கிராம ஊழியனின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

1950 இல் கணேசன் என்பவர் பி.எஸ்.ராமையாவை அணுகி நின்றிவிட்ட மணிக்கொடி இதழைத் தொடர்ந்து நடத்துவதற்குத் தான் பணஉதவி அளிப்பதாகக் கூறியவுடன் மீண்டும் மணிக்கொடி சிறிது காலம் நீடித்தது , கணேசனுக்குப் பண நெருக்கடி ஏற்பட்டதும் இதழ் வெளியீடு நின்று விட்டது.

0

1935 ஆம் ஆண்டில் , வ.ரா அவர்கள் காரைக்குடி இலக்கிய கூட்டமொன்றில் , ' பாரதி ஒருமகாகவி , அவர் ஷேக்ஸ்பியர் ,ஷெல்லி , தாகூர் ஆகியோரைக் காட்டிலும்பாரதி கவிதைத் திறனில் உயர்ந்தவர் என்று கூறினார்.
வ.ராவின் கூற்றை ஆட்சேபிக்கும் வகையில் , நெல்லை நேசன் ஆனந்தவிகடனில் ஒரு கட்டுரை எழுதினார் . அதைத் தொடர்ந்து கல்கி ஆனந்தவிகடனில், "ஷேக்ஸ்பியர் , ஷெல்லி , தாகூர் ஆகியோரைக் காட்டிலும் பாரதி உயர்ந்தவர்,பாரதியின் கவிதையின் ஒரு வரிக்கு அவர்களது கவிதைகள் ஈடாகாது என்று எவரேனும் பேசியிருந்தால் , அவரை ஒரு நிரட்சரகுட்சி (எழுத்து வாசனை இல்லாதவர்) என்று தாம் சந்தேகிப்பதாக எழுதினார்.

இதைத் தொடர்ந்து வ.ரா இவ்வாறாக எழுதினார்..

பாரதி இலக்கணக் கவி அல்ல என்று பண்டிதர்கள் காய்ந்தார்கள் இலக்கணக் கவி என்றால் என்ன பொருள் என்று அவர்களைத் தான் கேட்க வேண்டும் . இலக்கணக் கவி அல்ல என்ற நிலையிலிருந்து பாரதியார் விடுதலையடைந்துவிட்டார்.இப்போது தேசக்கவி என்ற அரியாசணத்தை ரா.கி (கல்கி) அவருக்கு அளித்திருக்கிறார். வாணியின் வரத்தால் ரா.கியும் நெல்லை நேசனும் மகாகவி என்று பாரதியாருக்கு தங்கள் இதயமலர் ஆசனத்தை உவந்து கொடுக்கும் காலம் வராதா ? அதை கற்பனை செய்யும் படியாக அன்பர் ரா.கியை பெரிதும் வேண்டிக் கொள்கிறேன் .


வ.ராவின் கட்டுரைக்கு எதிர்வினையாக கல்கி எழுதியது.....

பாரதிக்கு எனது இதயமலர் ஆசனத்தை உவந்து கொடுக்கும் காலம் வராதா என்று பிரார்த்தனை செய்திருக்கிறீர்கள். என் இதயத்தில் பாரதிக்கு எத்தகைய இடம் உண்டென்று தங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் .முதன் முதலில் என்னுடைய பத்தாவது வயதில் பாரதியின் பாடல்களை நான்படித்தேன் . அன்று முதல் இன்றுவரை என் வாழ்நாளில் ஒரு நாளாவது பாரதியின் சில வரிகளையாவது பாடாமலோ , பாடக் கேட்காமலோ கழிந்திருக்குமென்று எனக்குத் தோன்றவில்லை. ஷேக்ஸ்பியர் , தாகூர் முதலியவர்களிடம் எனக்கு பக்தி உண்டு.நான் பிறந்து வளர்ந்த ஜில்லாவில் ஓடும் காவேரி நதியிடம் எனக்கிருக்கும் பிரியம் அளவில் அடங்காதது . ஆனால் அந்தப் பிரியம் என்னுடைய திருஷ்டியை மறைத்து விடுவதில்லை . காவேரி கங்கையை விடப் பெரியது என்று ஒருநாளும் சொல்லமுற்பட்டதில்லை .


0

கல்கி ஆரம்பத்தில் மணிக்கொடி எழுத்தாளர்களுடன் சுமூகமாகவே பழகி வந்தார்.பாரதியை மகாகவி என்று தம்மால் ஏற்றுக் கொள்ளமுடியாது என்று கல்கி கூறிய பிறகு , மணிக்கொடி எழுத்தாளர்கள் கல்கியையும் அவர் எழுத்தையும் புறக்கணிக்கத் தொடங்கிவிட்டார்கள் . பிற்காலத்தில் புதுமைப்பித்தன் கல்கியை தனது விமர்சனக் கட்டுரைகளால் பயங்கரமாத் தாக்கினார் . கல்கி எழுதிய தழுவல் கதைகளைகளவாணி இலக்கியம் என்று குற்றம் சாட்டினார் .ஒரு கட்டத்தில் கல்கியின் குருவான ராஜாஜியே பாரதியை மகாகவி என்று கூறிவிட்ட பிறகு கல்கியால் மேற்கொண்டு பாரதியை விமர்சிக்க முடியவில்லை.

0

தமிழில் இல்லாதன இல்லை இளங்குமரா என்ற கிழட்டுத் தத்துவம் ஒழிய வேண்டும் .இப்பொழுது இலக்கியத்தின் பெயரில் நடக்கும் ஆராய்ச்சிகள் , முதல் குரங்கு தமிழனாய்த்தான் மாறியதா என்பது முதல் கம்பன் சைவனா , வைஷ்ணவனா ? தமிழ் எழுத்துக்கள் ஓம் என்ற முட்டையை உடைத்துக்கொண்டு வெளிவந்துள்ள வரலாறுவரையுள்ள இலக்கியத்திற்குப் புறம்பான தொண்டுகளையெல்லாம் அப்படியே கட்டி வைத்துவிட்டு இலக்கியத்தை அனுபவிக்கும் முறையை உணர்த்த முன்வரவேண்டும். ( புதுமைப்பித்தன் -மணிக்கொடி 01/07/34)

0

குறிப்பு நூல்கள்

1) முனைவன் சிற்றிதழ் மூலம் வெளியான மணிக்கொடி பவளவிழா மலர்
2) புதுமைப்பித்தன் கதைகள் - சில விமர்சனங்களும் விஷமத்தனங்களும் - தொ.மு.சி ரகுநாதன்
3) எழுத்து சிற்றிதழ்கள் 4) சுபமங்களா சிற்றிதழ்கள்
5) மணிக்கொடி சீனிவாசன் எழுத்துக்கள்
6) தமிழில் சிறுபத்திரிகைகள் - வல்லிக்கண்ணன்

0





பத்திரிகைத் தொழில் தொடங்குவது விலை உயர்ந்த தற்கொலை என்று சொல்வார்கள்.இந்தக் கூற்று வணிக இதழ்களுக்குப் பொருந்துமோ பொருந்தாதோ ஆனால் சிறுபத்திரிகைக்குச் சாலப் பொருந்தும்.

0

என்றும் அன்பகலா
மரவண்டு

Tuesday, May 10, 2005

கவிஞர் புகாரியுடன் ஒரு சந்திப்பு



எழுத்தாளர் மாலனின் திசைகள் சார்பாக கவிஞர் புகாரியை சிறப்பிக்கும் பொருட்டு சென்னை நியூ உட்லேண்ட்ஸ் ஓட்டலில் இலக்கிய விழா ஒன்று கடந்த திங்கள் கிழமையன்று (09/05/2005 ) அரங்கேறியது.

விழா ஆரம்பிப்பதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பே நான் நியூ உட்லேண்ட்ஸ் ஓட்டலுக்குச் சென்றுவிட்டேன்.சற்று நேரத்தில் மாலன் தன் துணைவியாருடன் வந்தார் . விழாவுக்கு வந்திருந்தவர்களை மாலன் இன்முகத்தோடு வரவேற்றார்.

புதுவை இராஜ.தியாகராஜன் ஜிப்பா சகிதமாக அறைக்குள் நுழைந்தவுடன் மாலனிடம் சிறிது நேரம் பேசிவிட்டு என்னருகே அமர்ந்து கொண்டார்.

நேரம் 5.45 ஆகிவிட்டது . நிகழ்ச்சி ஆரம்பிக்க இன்னும் 15 நிமிடங்கள் தான் இருந்தன .நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு கட்லட் , முந்திரிப்பருப்பு (நெய்விட்டு வருத்ததா ? பிரமாதம் போங்க) அல்வா ,ஐஸ்கிரீம் எல்லாம் பறிமாறப்பட்டன .

நேரம் 6 மணியை நெருங்கியவுடன் மளமளவென்று மக்கள் கூட்டம் அரங்கினுள் நுழைந்தது. நான் எதிர்பார்த்திராத பல நண்பர்கள் விழாவிற்கு வந்திருந்தார்கள்.கவிஞர் சேவியர் மற்றும் அவருடைய மனைவியார் , ஐகாரஸ் பிரகாஸ்,கிரிதரன் , மதுரபாரதி , ஹரி கிருஷ்ணன் , சுரேஷ் கண்ணன் , சிபி வெங்கடேஷ் , அரவக்கோன் மற்றும் அவரது மனைவி கிருஷாங்கினி , வ.ஊ.சி யின் பேரன் , பத்ரி சேஷாத்ரி, சிறகு ரவிச்சந்திரன் , கவிஞர் ஜெயபாஸ்கரன் , அமிர்தம் சூர்யா,லேனா தமிழ்வாணன் மற்றும் நான் அறிந்திராத பல நண்பர்களும் கவிஞர்களும் வி்ழாவுக்கு வந்திருந்தார்கள்.

புகாரி அரங்கினுள் நுழைவதற்கு முன்பே மாலன் அவர்கள் எல்லா முன்னேற்பாடுகளையும் செய்து வைத்திருந்தார். கோட் சூட்டுடன் கவிஞர் புகாரி வந்திருந்தார். அவரைச் சந்தித்துக் கைகுலுக்கிக் கொண்டேன் , நான் வந்தது கண்டு மகிழ்ச்சி என்று கூறினார்.நானாவது பெங்களூரில் இருந்து தான் சென்றிருந்தேன் . ஆனால் கவிஞர் சேவியரோ இந்த விழாவிற்காக ஆஸ்திரேலியாவில் இருந்து பறந்து வந்திருந்தார் .

நானும் கவிஞர் சேவியரும் , எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் மற்றும் கலைவிமர்சகர் இந்திரனோடு சிறிது நேரம் இலக்கியம் பேசினோம் .

0

விழா சற்று தாமதமாகத் தொடங்கியது . மேடையில் அமுதசுரபி பொறுப்பாசிரியர் அண்ணாக்கண்ணன் , கவிதாயினி வைகைச்செல்வி , கவிஞர் யுகபாரதி , கவிஞர் இந்திரன், கவிஞர் புகாரி ஆகியோர் அமர்ந்திருந்தனர்.

0

முதலில் மாலன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார் .இந்த விழாவானது வழமையான சம்பிராதய முறைப்படி இல்லாமல் கொஞ்சம் மாறுதலாக இருக்கும் என்று மாலன் தெரிவித்தார் . விழாவில் பேசிய யாருமே " அவர்களே இவர்களே "என்று ஒவ்வொருவரையும் தனித்தனியாக வரவேற்று பார்வையாளர்களைப் கடுப்பேத்தவில்லை .

மாலன் தனது பேச்சினிடையே சுவாரஸ்யமாக வார்த்தைச் சிலம்பம் வீசினார்." என்னை புகாரி இந்த விழாவிற்கு தலைமைப் பொறுப்பு ஏற்று நடத்தச் சொன்னார் , எனது தலை "மை" யை ஏற்கும் நிலையில் இருந்தாலும் , நான் வரவேற்புரை மற்றும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதோடு நிறுத்திக் கொள்கிறேன் என்று புகாரியிடம் கூறி விட்டேன் " என்றார் மாலன் .


மேலும் " புகாரி கவிதை வேண்டிய அவசியமே இல்லை , அவர் பணிபுரியும் அலுவலகத்தில் அதிகப்படியாக ஒரு மணிநேரம் வேலை செய்தால் அதற்கேற்றார் போல ஊதியம் கிடைக்கும்.இருப்பினும் புகாரிக்கு தமிழின் பால் இருக்கும் ஆர்வமே அவரைக் கவிதை எழுதவைக்கிறது .

அவருடைய தாயார் அவரை ஒரு டாக்டராக்கிப் பார்க்க வேண்டும் , தன் மகன் கையில்ஒரு ஊசியை எடுக்க வேண்டும் என்று நினைத்தார், ஆனால் புகாரியோ தனது கையில் நூலை (புத்தகம்) எடுத்துக் கொண்டார் , மக்களின் நோய் தீர்க்கும் மருந்து தருவார் என எதிர்பார்த்தார் , ஆனால் அவரோ நமக்கெல்லாம் கவிவிருந்து தருகிறார் .. என்று எதுகையில் விளாசித் தள்ளினார் மாலன் .


மாலனுக்குப் புகாரி பொன்னாடை போர்த்தியவுடன் ,எனக்கு ஆடை எல்லாம் தரவேண்டாம் , இன்னும் சிலநூல்கள் (புத்தகம்) தாருங்கள் என்று மாலன் கூறியவுடன் அரங்கமே கலகலப்பானது.

மாலன் தனது வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு மேடையில் அமர்ந்திருந்த கவிஞர்களைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தோடு அவர்களைப் பேச அழைத்தார்.

0

முதலில் கவிஞர் இந்திரன் பேசினார் . அறைக்குள் ஆப்பிரிக்க வானத்தைக் கொண்டு வந்த இந்திரனைஎல்லோரும் விமர்சகர் என்று சொல்கிறார்கள் . ஆமால் விமர்சகன் என்றால் மரப்பசு என்று பொருள் , மரப்பசு என்றால் சரக்கு ஒன்றும் கிடையாது என்று அர்த்தம் , ஆகையால் நான் இந்திரனைக் கவிஞர் என்றே அழைப்பேன் என்று மாலன் குறிப்பிட்டார் .

0

கவிஞர் இந்திரன் பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர் , இவர் எழுதியவற்றுள் திருவடிமலர்கள் , Syllables of silence , Acrylic Moon ,பசித்த தலைமுறை , அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் ,அந்நியன் , காற்றுக்குத் திசையில்லை , முகில்களின் மீது நெருப்பு,நவீனகலை ஒரு தேடல் , சத்யஜ்த் ரே சினிமாவும் கலையும் , முப்படை நகரம் ,சாம்பல் வார்த்தைகள் , கவிதை , ஓவியம் , சிற்பம் , சினிமா , மின் துகள் பரப்பு ஆகிய நூல்கள் குறிப்பிடத் தகுந்த நூல்களாகும்.

கவிஞர் இந்திரன் பேசிய பொழுது புகாரி கனடாவில் இருந்தாலும் தனது ஒரத்தநாட்டை மனசுக்குள்ளேயே சுமந்து சென்றிருப்பதாகத் தெரிவித்தார் .பிறகு ஒரு குட்டிக் கதை ஒன்று கூறினார்.

ஒரு வெளிநாட்டுக் கவிஞர் (பெயர் நினைவில்லை) சூழலின் நிர்பந்தத்தில் தனது தாயாரை விட்டுவிட்டு அயல் தேசம் சென்றாராம், சில வருடங்கள் கழித்து அந்தக் கவிஞருடைய தாயார், அந்தக் கவிஞனின் நண்பர் ஒருவரை அழைத்து ,தனது மகனைப் போய்ப் பார்த்துவிட்டு வருமாறு பணித்தாளாம் , கவிஞரைச் சந்தித்து விட்டுத் திரும்பிய நண்பர் கவிஞனின் தாயாரிடம் , கவிஞர் நன்றாக இருப்பதாகவும் தாயாரைப் பற்றி ரொம்ப விசாரித்ததாகவும் கூறியவுடன் கவிஞரின் தாயார் , " என் மகன் என்ன மொழியில் பேசினான் ?" என்று கேட்டாராம். உடனே அவர் " கவிஞர் ஆங்கிலத்தில் பேசியதாகக் கூறியவுடன் , கவிஞரின் தாயார் கோபமடைந்தாளாம் , " நம் தாய் மொழியை மறந்துவிட்டு ஆங்கிலத்தில் பேசுகிறானா ? தாய்மொழியை மறந்தவன் தாயை மறந்தவன் என்று கூறினாளாம்.

0

அண்ணாக் கண்ணன் பேசிய பொழுது , புகாரி வலைக் குழுமங்களில் தனது பெயருக்கான விளக்கம் என்ன என்பதை இரா.ம.கியிடம் கேட்டதாகவும் , அதற்கு அவர் புகாரி என்பது தமிழ்ப்பெயரே என்று அவர் கூறியது கண்டு புகாரி மிகவும் மக்ழிச்சி அடைந்ததாகவும் தெரிவித்தார் .பெரும்பாலான இஸ்லாமியர்களின் பெயர் அரபு மொழி(உருது) சார்ந்தாகவே இருக்குமென்றும் , புகாரியின் பெயர் தமிழ் மரபில் இருப்பதாலேயே தமிழில் அவருக்குப் பற்று அதிகமாக இருக்கிறது எனக் குறிப்பிட்டார் , மேலும் புகாரியின் கவிதைகளில் சந்த நயம் துள்ளி விளையாடுவதாகப் பேசிவிட்டு புகாரியின் சிலகவிதைகளில் உள்ள சொல்லாட்சியைப் புகழ்ந்து பேசினார் .

0

படித்துறை சிற்றிதழ் நடத்தி வரும் பாடலாசிரியர் யுகபாரதி ஆரம்பம் முதலே இயல்பாகப் பேசினார் ,புகாரி ஏதோ செய்யக் கூடாத காரியம் செய்துவிட்டது போலவும் எங்கே கை தட்டினால் , அவர் மேலும் பல செய்யக் கூடாத காரியங்கள் செய்துவிடுவார் போலவும் பார்வையாளர்கள்
அமர்ந்திருக்கிறார்கள் என்று கூறினார் , இந்த மாதிரியான இறுக்கமான சூழல் வேண்டாம் , அடிக்கடி கைதட்டி உற்சாகப்படுத்துங்கள் என்று எல்லோரையும் கேட்டுக் கொண்டார் .

சிற்றிதழ் ஆரம்பிப்பவர்கள் எல்லாம் ஒரு பதிப்பகம் ஆரம்பித்துக்கொண்டு மற்றவர்களுக்கே எதிரே ஒரு குழுவை உருவாக்கிக் கொண்டு இலக்கியத்தில் அரசியல் செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை யுகபாரதி முன்வைத்தார் , அவர் பேசி முடித்தவுடன் , மாலன் , கவிஞர் யுகபாரதியும் கூடிய விரைவில் ஒரு பதிப்பகம் ஆரம்பிக்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.

0

அம்மி கவிதைத் தொகுப்பு எழுதிய வைகைச் செல்வி , புகாரியின் காதல் கவிதை ஒன்றைப் படித்து விட்டு , தற்சமயம் பல பெண்கவிஞர்கள் காமத்துப்பால் கவிஞர்களாக இருக்கிறார்கள் எனத் தெரிவித்தார் .

வைகைச்செல்வி பேசிக்கொண்டிருந்த பொழுது கவிஞர் வைரமுத்து அரங்கினுள் நுழைந்தார் . கவிஞர் புகாரி மேடையிலிருந்து இறங்கிச் சென்று கவிஞர் வைரமுத்துவை வரவேற்றார். வைகைச்செல்வி , புகாரி எழுதிய சுட்ட வீரப்பன் வேண்டுமா ? சுடாத வீரப்பன் வேண்டுமா ? என்ற கவிதை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகக் கூறி அந்தக் கவிதையிலிருந்து ஒன்றிரண்டு வரிகளை வாசித்தார்.

0

பிறகு கவிஞர் புகாரி பேசத் தொடங்கினார் .கவிஞர் புகாரியின் குரல் ஏற்கனவே எனக்குப் பரிச்சயமான குரல் தான் , கனடா வானொலியில் முன்பொருமுறை ஹைக்கூ கவிதையைப் பற்றி நானும் , அவரும் ,இளந்திரையனும் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருக்கிறோம் .

கவிஞர் புகாரி பெரும்பாலும் கவிதையிலேயே பேசினார் . கவிஞர் புகாரி தனது வாழ்வில் முன்னேறுவதற்காக தான் அடைந்த துயரங்களையும் மேற்கொண்ட சிரத்தைகளையும் ஒரு பாடல் மூலமாகவே கூறியது மிகவும் உருக்கமாக இருந்தது .

மேடையில் தனது தாயாருக்கு பொன்னாடை போர்த்திக் கெளரவித்த புகாரி , பொறுப்புக்கு (மாலன்) பொன்னாடை போர்த்தினேன் , எனது இருப்புக்கு (தாயார்) பொன்னாடை போர்த்தினேன் , இப்பொழுது கவிதை நெருப்புக்கு (வைரமுத்து) பொன்னாடை போர்த்தப்போகிறேன் என்று கூறிவிட்டு வைரமுத்துவிற்குப் பொன்னாடை போர்த்தினார்.

கவிஞர் வைரமுத்து தனது ஆதர்ச (Inspiration) எழுத்தாளர் என்பதை புகாரி மேடையிலேயே தெரிவித்தார் . நேரம் 8.45 ஆகிவிட்டது ,நான் பெங்களூருக்குக் கிளம்ப வேண்டிய அவசரத்தில் இருந்தேன் .

புகாரி எழுதிய 4 கவிதைத் தொகுப்புகளையும் ( வெளிச்ச அழைப்புகள் , அன்புடன் இதயம் , சரணமென்றேன் , பச்சைமிளகாய் இளவரசி ) ஒரு மேஜையில் அடுக்கி வைத்திருந்தார்கள் . அந்த 4 புத்தகங்களையும் கைப்பற்றிக் கொண்டு ஊருக்குக் கிளம்பிவிட்டேன்.

கவிஞர் வைரமுத்துவின் பேச்சைக் கேட்பதற்கு எனக்குக் கொடுத்து வைக்கவில்லை.

என்றும் அன்பகலா
மரவண்டு