Thursday, May 26, 2011

SPB Solo songs - Part 3

1) கனா காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல - அக்னி சாட்சி

2) இளம் மஞ்சள் வண்ணம் கொஞ்சுகுகிற செந்தூரம்
இது மாலை நேர வானம் பாடும் சங்கீதம் - அக்கரைக்கு வாரீங்களா ?

3) கடலில் அலைகள் பொங்கும்
ஆனால் கரைகள் தாண்டுமா - மகரந்தம்

4) ஒரு பாடலை பல ராகத்தில்
உனை பார்த்துப் பாடினேன் - மல்லிகை மோகினி

5) வா பொன் மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது - பூந்தளிர்

6) சித்திரப்பூ சேலை சிவந்த முகம் சிரிப்பரும்பு
முத்துச் சுடர் மேனி மூடி வரும் முழு நிலவோ - புதுச்செருப்பு கடிக்கும்

7) தொடங்கலாம் தொடரலாம்
தொடங்கலாம் இனிய தனியிடம் கிடைத்தது
தொடரலாம் இருவர் கனவுகள் பலித்தது
மயக்கம் தருவது மாலை நேரம் - காலமடி காலம்

8) யாரிது தேவதை ஓராயிரம் பூமழை
சுகம் தரும் நிலா வரும் திருவிழா
- என் ப்ரியமே

Tuesday, February 22, 2011

Romantic Duets of SPB & Chithra

1) இதழில் கதை எழுதும் நேரமிது - உன்னால் முடியும் தம்பி
2) மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு - அண்ணா நகர் முதல் தெரு
3) காதல் ஊர்வலம் இங்கே - பூக்களை பறிக்காதீர்கள்
4) முத்தமிழே முத்தமிழே - ராமன் அப்துல்லா
5) கொட்டுக்கிளி கொட்டு நாயனம் - சின்னவர்
6) குளு குளு என்று குளிர்கின்றதே - ?
7) சொல்லாமத்தானே இந்த மனசு துடிக்குது - ஒரு தாயின் சபதம்
8) தனனம்.. என் கண்ணனுக்கு காதல் வந்தனம் - ப்ரதாப்
9 ) உன்னைத் தொட்ட தென்றல் - தலை வாசல்
10) உடலும் இந்த உயிரும் உனக்கே அர்ப்பணம் - நியாய தீர்ப்பு
11) யெம்மா யெம்மா லேடி டாக்டர் - தாலாட்டு கேட்குதம்மா
12 ) கன்னத்தில் கன்னம் - வாட்ச்மேன் வடிவேலு
13) அம்மாடி இது தான் காதலா - இது நம்ம ஆளு

Monday, December 19, 2005

புத்தம் புதிய வீடு

மக்களே என்னோட புதுவீட்டை வந்துபாருங்க....

Monday, December 12, 2005

இனிய கானங்கள் (1)


படம் : தனியாத தாகம்

பாடல் : பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்

பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன்-ஜானகி

Friday, December 09, 2005

ச்சே.. சின்னப்புள்ளையாவே இருந்துருக்கலாம்

கொட்டையோடு விழுங்கிய இலந்தை
மரமாய் முளைக்குமோ?
கிளைவிட்டு வளர்ந்து வயிறு கிழிக்குமோ ?

புத்தகத்தில் வைத்த மயிலிறகு
நான் ஊருக்குப் போன நாள் பார்த்து
குட்டி போட்டால்
யார் அதற்கு தீனி போடுவார் ?

பள்ளிநாட்களில்
பால்யவயதில்
இவ்வாறாக
தினமும் ஒரு கவலை
மனதில் எழும்

0

வேலைகிடைக்குமா ?
கிடைத்தது நிலைக்குமா ?
வருமானம் போதுமா ?
வாழ்க்கை சிறக்குமா ?
வளர்ந்த பிறகு

வளர்கின்ற கவலையில்
மாட்டிக்கொள்கிற மனசு
நினைத்துப் பார்க்கும்
மீண்டும் வராதா ?
அந்தப் பால்ய நாட்கள் ! -( கவிஞர் ஜீவி )

0
ஒரு சின்னப்புள்ளை வீட்டுப்பாடம் எழுதிக்கிட்டு இருந்திச்சாம்,அது கிட்டத்துல வீட்டு வேலைக்காரி உட்காந்தமானக்கி பாத்துக்கிட்டே இருந்துச்சாம்.. உடனே அந்தச் சின்னப் புள்ளை " நீ எம்புட்டு படிச்சிருக்கன்னு " வேலைக்காரியக் கேட்டுச்சாம்.. உடனே அந்த வேலைக்காரி " எங்கம்மாலாம் என்னை பள்ளிக்கொடத்துல சேக்கலைன்னு" சொன்னுச்சாம்.. அதுக்கு அந்த சின்னப் புள்ளை உங்க அம்மா தான் " நல்ல அம்மா "ன்னு சொன்னிச்சாம்.

0

கவிஞர் வண்ணை சிவா , உடைந்த பொம்மையும் அழாத குழந்தையும் அப்படின்னு ஒரு கவிதை தொகுப்பை வெளியிட்டாரு. எந்தக் குழந்தையுமே பொம்மைய உடைச்சதும் அழும் , அப்படி அழலேன்னா , அதுக்கு ஏதோ மூளைக் கோளாறுன்னு அர்த்தமாம்..

0சில சின்னப்புள்ளைங்கள்ளாம் எதாச்சும் நினைச்சா சாதனையா கெடந்து அதை சாதிச்சுட்டுத்தான் மறுவேலை பாக்கும்.

இவன் எங்க அண்ணன் மவன் , ஸ்வஸ்திக் குமாரு . இவனை இங்கிலீஸ் மீடியத்துல சேத்துவிட்ட முத நாளுஸ்கூல் ஆரம்பிச்சு செத்த நேரத்துல , பைக்கட்ட தூக்கிட்டு விறுவிறுன்னு கிளம்பியிருக்கான் , ஏ எங்க போறன்னு மிஸ் கேட்டுருக்காங்க .. வீட்டுக்குப் போறேன்னு இவன் சொல்லியிருக்கான் , வீட்டுக்குலாம் போக முடியாது பெல் அடிச்சதுக்கப்புறம் தான் போகணும்னு மிஸ் சொல்லியிருக்காங்க ... அப்படின்னா பெல் அடிங்க ... நான் வீட்டுக்குப் போகணும்னு சொல்லியிருக்கான்.

0அங்கே போகாதே
அதை எடுக்காதே
கீழே இறங்கு
மேல ஏறாதே
பேசாம இரு
சத்தம் போடாத
தூங்கு சீக்கிரம்
தொண தொணண்ணு பேசாதே
இவற்றோடு
லேசான கையுயர்த்தலும்
போதுமானதாயிருக்கிறது
குழந்தைகளை
நம் உலகிற்கு அழைத்துக் கொள்ள - ( வெண்ணிலா )குழந்தைங்களப் பத்தி வெண்ணிலா நிறைய கவிதைகள் எழுதியிருக்காங்க வெண்ணிலாவின் கணவர் மு.முருகேஷும் நல்ல கவிஞர் தான்,ஆனா நிறைய பேருக்கு அவரைத் தெரியாது .


0

குங்குமம் புத்தகத்துல சினிமாப் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் , "பாலகாண்டம்" அப்படின்னு ஒரு தொடர் எழுதிட்டு வந்தார் ,மொத்தம் 15 வாரங்கள் வந்திச்சுஅவரோட சின்ன வயசுல நடந்த சம்பவங்களை ரொம்ப நல்லா சுவாரஸ்யமா எழுதியிருந்தாரு.

0

நான் சின்னோண்டா இருக்கும் போதுலாம் எனக்கு நிறைய சந்தேகம் வரும் .. நான் ஆறாப்பு படிக்கத்துல வரலாறு வகுப்புல பேபி டீச்சர் பாடம் நடத்திட்டு இருந்தாங்க..... 1923 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 5 ஆம் நாள் அந்தப் போர் நடந்தது , டிசம்பர் திங்கள் 8 ஆம் நாள் இந்தப் போர் நடந்ததுன்னு .. அவங்க பாட்டுக்கு சொல்லிக்கிட்டே போனாங்க
உடனே நான் எந்திரிச்சி , "டீச்சர் எல்லாப் போரும் திங்கள் கிழமை அன்னைக்குதான் நடக்குமா?"ன்னு கேட்டேன் "
"திங்கள் என்பதற்கு இங்கே மாதம்னு அர்த்தம்"னு சொல்லி எனக்கு வெளங்க வச்சாங்க...

வீடு கட்டுறதுக்கு முன்னாடி அஸ்திவாரம் போடுறதுக்கு குழி தோண்டுவாங்க, அத கிராமத்துல வானம் தோண்டுறதுன்னு சொல்லுவாங்க , என்னடா இது "பூமியத் தோண்டிப்புட்டு வானம் தோண்டுறோம்"னு சொல்றாய்ங்கன்னு யோசிப்பேன் . இதே யோசனை இன்னொரு புத்திசாலிக்கும் வந்து அதை ஆனந்த விகடன் மதன் கிட்ட கேட்டடிருந்தாப்ல..அவர் அதுக்கு என்னமோ பதில் சொல்லியிருந்தாரு. சரியா ஞாபகம் இல்லை..ஒரு ரெண்டு மூணு மாசத்துக்கு முன்னாடி பிரசன்னான்னு ஒருத்தர் மதன்கிட்ட ஒரு கேள்வி கேட்டுருந்தார்..ஏன் சார் வாழப் பழத்தை கழுவாமலே சாப்புடுறோம்னு..அந்தக் கேள்விக்கும் மதன் பொறுமையா , வாழைப்பழத்தோலே அதுக்கு பாதுகாப்பா இருக்குறதுன்னால கழுவத் தேவையில்லைன்னு பதில் சொல்லியிருந்தாரு. பிடிச்சி மோலத் தெரியாத பய கூட இதுக்கு பதில் சொல்லிப்புடுவான் , இது ஒரு கேள்வின்னு அந்த ஆளு மெனக்கெட்டு , மதனுக்கு கடுதாசி போட்டுக் கேட்டுருக்காரு பாருங்க..

0

நான் அஞ்சு வயசிலேயே நீச்சல் கத்துக்கிட்டேன், தினமும் காலேல கிணத்துல தான் குளிப்பேன்.எங்க ஊரு கம்மாக்கரை ஓரமா ஒரு கிணறு இருக்கு , அந்த கிணத்துப் பக்கத்துல ஒரு பூவரசமரம் இருந்ததுனாலஅந்த கிணத்துக்கு பூவரசங்கிணறுன்னு பேரு , அப்ப பத்தாப்பு முழுப்பரிச்சை லீவு உட்டுருந்த சமயம் , வழக்கம் போல பூவரசங்கிணத்துல குளிச்சுட்டு இருந்தேன் , நல்லா அழுக்குத் தேய்ச்சு குளிக்கும் போதுநெஞ்சுல சின்ன கட்டி மாதிரி தட்டுப் பட்ட்டுச்சு, என்னடா இதுன்னு புடிச்சு நசுக்கிப் பாத்தேன் , வலிச்சது , அய்யய்யோ போச்சுடா இதை அறுத்துத் தான் எடுக்கணும் போலன்னு தலயக் கூட துவட்டாம வீட்டுக்கு விறுவிறுன்னு போயி எங்க அம்மா கிட்ட விசயத்தச் சொன்னேன் , எங்க அம்மா அங்க ஐயா கிட்ட சொன்னாங்க ...உடனே எங்க ஐயா எங்க அம்மாகிட்ட இருவது ரூவா கொடுத்து , " குமார செவாசில சந்திர கிரகம் டாக்டர் கிட்டபோயி காட்டிட்டு வாம்மா"ன்னு சொன்னாரு.

சிவகாசில சந்திரககிரகம் டாக்டரு நல்ல கைராசிக்காருன்னு சொல்லிக்குவாங்க , சீக்காளியப் பாத்தே அவனோட ஆயுசச் சொல்லிப்புடுவாரு.பயந்துக்கிட்டே எங்கம்மா கூட ஆஸ்பத்திரிக்குள்ள போனேன் .டாகடர் கிட்ட , எங்க அம்மா விபரத்த சொன்னாங்க .. டாக்டரு என்னைய சட்டையக் கழட்டிட்டு அந்த ரூமுல போயி படுன்னாரு ,உயரமான படுக்கையில மல்லாக்கப் படுத்த்திருந்தேன் , எங்கன வலிக்குதுன்னு டாக்டர் கேட்டாரு , இங்கனன்னு நெஞ்சைக் காட்டுனேன் , லேசா பிடிச்சுப் பாத்துட்டு சட்டையப் போட்டுக்கோ.. 2 மாத்திரை எழுதித் தாரேன்னார் , எனக்கு ஒன்னும் புரியலை , ரூமுக்கு வெளிய நின்னுக்கிட்டிருந்த எங்க அம்மா கிட்ட என்ன தெரியுமா சொன்னாரு , பயப்புடுற மாதிரி ஒன்னும் இல்லேம்மா ,வேற டாக்டர் கிட்ட போயிருந்தேன்னா ..அறுக்கணும் வைக்கணும் ஒரு ஐயாயிரம் கொடும்பான் .. இது பயப்படுற மாதிரி ஒன்னும் கிடையாது , உன் மவன் வயசுக்கு வந்திருக்கான் . அவ்வளதான் "னு பொசுக்குன்னு சொல்லிப்புட்டாரு,வைத்தியம் பாக்குறதுக்கு வந்திருந்தவங்க எல்லாரும் என்னையே பாக்குறாங்க .அதுல காய்ச்சலுக்கோ வயித்துவலிக்கோ வைத்தியம் பாக்கவந்த ஒரு தாவணிப் பிள்ளை என்னைப் பாத்து நக்கலாச் சிரிக்கிது . எனக்குலாம் ஒரே வெட்கம் , என்னோட வலது கால் பெருவிரலால சிமெண்ட் தரையில் ஒரு வானவில்லையே வரைஞ்சுப்புட்டேன்... (இருங்கடே ஒரு டூயட் பாடிட்டு வந்துறேன் .. )

ஆஸ்பத்திரிக்கு எதுக்க இருக்குற மகாராஜா மெடிக்கல்ஸ்ல டாக்டரு
எழுதிக் கொடுத்த மாத்திரைய வாங்கிட்டு வீட்டுக்குத் திரும்பிட்டோம் ,
எங்க அம்மா , எங்க ஐயா கிட்ட விசயத்த சொல்லிட்டாங்க . எங்க ஐயா என்னைய கூப்பிட்டு , " எலே குமாரு இனிமேலு நீ டவுசர்லாம் போடக்கூடாது , ஐயா செவாசில இருந்து கைலி வாங்கிட்டு வர்ரேன் , இனிமேல் நீ கைலிதான் கட்டணும்னு சொல்லிட்டாரு..ஹ்ம் ... நான் வயசுக்கு வந்து 12 வருஷம் ஆச்சி .. அப்பிடி இப்பிடி நடக்குறதுக்கு எந்த சந்தர்ப்பமும் கிடைக்காததுனால இதுநாள் வரைக்கும் நான் ஒரு கற்புக்கரசனாத்தான் வாழ்ந்த்துக்கிட்டு இருக்கேன் :-)

0

முனீஸ்வரன் , இவன் என்னோட வகுப்புத் தோழன் , நெருங்கிய நண்பன்.குழப்பமான நேரத்துல இவங்கிட்டதான் நான் யோசனை கேட்பேன்.ஒரு நாள் இவன் கிட்ட " கல்யாணம் முடிக்காம இருந்துடலாமான்னு யோசிட்டுருக்கேன்னு" சொன்னேன்...
அதுக்கு அவன் "ரொம்ப கஷ்டம்டா , வயசான காலத்துல உன் கூடவே இருந்து நீ சொல்றதையெல்லாம் கேக்குறதுக்கு ஒரு ஆளு வேணும்,அப்படி ஒரு ஆளு வேணும்னா கண்டிப்பா நீ கல்யாணம் முடிச்சுதான் ஆவணும்"னு சொன்னான்.அவன் சொல்றதும் சரிதான்னு படுது. ஹ்ம்... எனக்குன்னு வாய்ச்சிருக்கவ இந்நேரம் எங்க இருக்காளோ .. என்ன செஞ்சிட்டு இருக்காளோ ...

0

போட்டி

கேள்வி எண் 1 : இவர் ஒரு நவீன தமிழ் இலக்கியவாதி இவருடைய இயற்பெயர் இளங்கோ. இவருடைய புனைபெயர் என்ன ?

கேள்வி எண் 2 : இது ஒரு நான்கெழுத்து தமிழ்த் திரைப்படம் , (பாடல்களுக்காகவே இந்தப் படத்தை நான் ஐந்து முறை பார்த்தேன்)இந்தப் படத்தில் வரும் ஒரு காட்சியில் இந்தப் படத்தின் இயக்குநர் , கதாநாயகிக்கு ஒரு பொக்கே கொடுத்துவிட்டுப் போவார்.இந்தப் படத்தின் பெயர் என்ன ?

சரியான பதில் அளிப்பவர்களுக்கு வழக்கம் போல ஒரு புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.

Thursday, October 27, 2005

மூன்று கவிதைகள்

எனது வீட்டிலிருந்து அலுவலகம் சுமார் 20 கி.மீ தூரத்தில் உள்ளது.ஒரு மணிநேர பேருந்துப் பயணம் , முன்னிருக்கைக்காரர்களின் பின்மண்டையை எவ்வளவு நேரம்தான் பார்த்துக் கொண்டிருப்பது . அச்சலாத்தியாக இருக்கும் அல்லவா , ஆகையால் கையில் தினமும் ஏதாவது புத்தகத்தோடுதான் பேருந்தில் ஏறுவேன். யாருமே தொல்லை தராத வண்ணம் கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டு படித்துக் கொண்டே வருவேன் . இன்று இரண்டு புத்தகங்கள் எடுத்துக் கொண்டேன்.ஒன்று கரிகாலன் எழுதிய ஆறாவது நிலம் மற்றொன்று காலச்சுவடு கவிதைத் தொகுப்பு.

0

வளர்ப்பு நாயின் சுகவீனத்தால்
கவலை கொள்ளும்
சிறுமியின் பிரார்த்தனை
கடவுளுடைய இருப்பிற்கான
பரிசோதனையாய் மாறுகிறது

நாயின் மரணம் சம்பவித்தவேளையில்
உருளும் கண்ணீர் துளியில்
தோல்வியை ஒப்புக்கொண்டபடி கரைகிறது
சிறுமியின் மனதிலிருந்து
கடவுளெனும் கற்பிதம்
0

மேற்காணும் கவிதை ஆறாவது நிலம் கவிதைத் தொகுப்பில் கரிகாலன் எழுதிய கவிதை ஆகும்.பேருந்து ஜன்னலை மீறி உள்ளே நுழைந்த சின்ன மழை , என்னைச் சுமார் 20 வருடங்களுக்குப் பின்னோக்கிஇழுத்திச் சென்றது

0
அப்பொழுது நான் நான் ரெண்டாப்பு படிச்சுட்டு இருந்தேன் , ஒருநா ஒன்னுக்கு பீரியடுல நல்லா மழைபெஞ்சிட்டு இருந்துச்சு , எல்லாப் பயன்களும் நனைஞ்சுக்கிட்டே போயி கம்மாக்கரையில போயி ஒன்னுக்கு இருக்கப் போனோம் , உதா கலரு டவுசர இடது பக்கம் தூக்குனமானக்கி பக்கத்துல ஒன்னுக்கு இருந்துக்கிட்டிருந்த முருகேசன் கிட்ட ," எலே முருவேசா , மழை எப்புற்றா பெய்யுது ? " ன்னு கேட்டேன். அதுக்கு அவன் சொன்னியான் , வானத்துல கடவுள் இருக்கார்ரா , அவர் அங்க இருந்து ஒருபெரிய்ய வாளில தண்ணிய மோந்து மோந்து ஊத்துவார்ரா , அதான் மழையா பெய்யுதுன்னான், அவன் சொல்லிமுடித்த பொழுது என்னிலிருந்து கடைசி சொட்டு நீர் வெளியேறி உடம்பு சிலிர்த்தது. அவன் சொன்னது நெசந்தான்னு நானும் ரொம்ப நாளா நம்பிக்கிட்டுத் திரிஞ்சேன்.அப்புறம் நாலாப்பு வந்ததுக்கப்புறந்தான் மேகத்தில் இருந்துதான் மழை பெய்யுதுன்னும் தெரியவந்திச்சி ....கடவுள் இருக்காரா இல்லையான்னு சந்தேகமும் வந்திச்சி ....இன்னமும் சந்தேகம் தீர்ந்தபாடில்லை.....

0

ஆறாவது நிலம் தொகுப்பில் இருக்கும் பெரும்பாலான கவிதைகள் எனக்குப் பிடித்திருந்தன.காலச்சுவடு தொகுப்பிலிருந்து இரண்டு கவிதைகளை மட்டும் இங்கே தருகிறேன்.

பேட்டி - யுவன்

ஊர்வதற்கே வாழ்வென
உடம்பெல்லாம் கால்கொண்ட
மரவட்டை ஒன்று
ஓய்வாகச் சுருண்டிருக்கக் கண்டேன்.

பொழுதுபோகாமல் கேட்டேன்

"இந்திய சுதந்திரத்தின்
பொன்விழாபற்றி...."

"என்ன பெரிய சுதந்திரம்?
பையன்கள் இன்னமும்
குத்துகிறார்கள் குச்சியால் "
இலைகளிலும் மலர்களிலும்
சிறுநீர்த் துளிகளுடன்
அருகிலிருந்த செடி
ஆமென்றது தலையசைத்து

பையனாய் இருந்து
வந்தவன்தான் நானும் எனச்
சொல்லாமல் மறைத்து

" என்றாலும் வாழ்க்கைத் தரம் .. ? "
என்றேன்

" நோ கமெண்ட்ஸ்" என்று
நகர்ந்தது தன்
நூறாவது காலை
எதிர்காலத்துள் இழுத்துவைத்து...

0

ஒற்றை ரகசியம் - உமா மகேஸ்வரி

என் மென்மைகளை
ஊற்றிவிடுகிறேன் ஒவ்வொரு நாளும்
செம்பருத்தியின் வேருக்கு

உருட்டி வைக்கிற எனது
நட்புணர்வில்
அலகு பதிக்கும் காகம்
உன்னைக் கண்டதேயில்லை

நமதில்லாத குழந்தைகளைத் தழுவும்போதுதான்
தளிர்க்கிறது என் தாய்மை நிபந்தனைகளின்றி

நள்ளிரவில்
நட்சத்திரங்கள் தேங்கிய மாடித்தளம்
என் பாதம் வழி ஊடுருவிப்
பகிரும் கிளர்ச்சிகளை
ஒவ்வொரு மழையின் போதும்
இளகிப் பொழிவித்திட முடிகிறது என்னையும்

மோகங்கள் தாபங்கள்
முற்றுப்பெறாத சஞ்சலங்கள்
மற்றும் நீ தொடவொண்ணாத
தூய்மையின் ஆழங்களோடு
சாறுகள் பிழிபட்ட
வெற்றுச் சக்கையின் கிடப்பே
உன் கட்டிலுக்கு என்றுணர்கையில்
அடைகிறேன் உனை வென்ற உவகையை
நீ அறியவியலா ஒற்றை ரகசியமாக

Monday, October 10, 2005

ஈரத்தாமரைப் பூவே - போட்டி
ஈரத் தாமரைப் பூவே
உன் இதழில் எத்தனை சாரங்கள்
புத்தன் நானே பித்தன் ஆனேன்
உறங்கவில்லை சில வாரங்கள்

0

கண்கள் கார்த்திகை அகல்களோ
இல்லை நட்சத்திரங்களின் நகல்களோ

விரல்கள் வெள்ளரிப் பிஞ்சுகளோ - இல்லை
வெடித்த பருத்திப் பஞ்சுகளோ

0

கூந்தல் என்பது சமுத்திரமோ - அதில்
பூக்கள் மலர்வது விசித்திரமோ

இலைகள் இல்லா பூமரமோ
உன் இமையே உனது சாமரமோ

நீ இலைகள் இல்லா பூமரமோ
உன் இமையே உனது சாமரமோ

ஈரத் தாமரைப் பூவே...
உன் இதழில் எத்தனை சாரங்கள்
புத்தன் நானே பித்தன் ஆனேன்
உறங்கவில்லை சில வாரங்கள்

போட்டி

கேள்வி எண் (1) : மேலே இருக்கும் பாடல் இடம் பெற்ற திரைப்படம் எது ?
துப்பு : சமீபத்தில் ஓர் எழுத்தாளர் இந்தத் திரைப்படத்தின் பெயரைத் தலைப்பாகக் கொண்டு ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.


கேள்வி எண் (2) : இந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் ?
கேள்வி எண் (3) : ஒரு நடிகையின் பெயரில் உள்ள முதல் இரண்டு எழுத்துக்களைப் புனைபெயராகக் கொண்ட தமிழ்க் கவிஞர் , அவர் யார் ?
துப்பு : கவிஞர் மீரா அல்ல


கேள்வி எண் (4) : ஒரு வில்லன் நடிகரின் பெயரைக் கொண்ட ஓர் இலங்கை எழுத்தாளர் , அவர் யார் ?

ஒவ்வொரு பதிலுக்கும் ஒரு புத்தகம் பரிசாக வழங்கப்படும் :-)


போட்டி முடிவு

1. பாய்மரக்கப்பல் - பரிசு பெறுபவர் ( பிரகாஷ் )

ஜனகராஜ் கதாநாயகனாக நடித்த படம் . இந்தப் பாடலைப் பாடியவர் பால்சுப்ரமணியன் . இசை கே.வி. மகாதேவன் என்று நளாயினி தெரிவித்திருக்கிறார் (நன்றி) . இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். இந்தப் பாடலின் Mp3 வடிவம் என்னிடத்தில் இருக்கிறது . தேவைப்பட்டால் maravantu@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு மடல் அனுப்பவும்


2. சுரேந்தர் - பரிசு பெறுபவர் ( ஆனந்த் )

3. அபி - பரிசு பெறுபவர் ( சொக்கன்)


கவிஞர் அபியின் இயற்பெயர் அபிபுல்லா , இவருடைய சொந்த ஊர் தேனி மாவட்டத்திலுள்ள போடி நாயகனூர் ஆகும் , முதுகலைத் தமிழ் பட்டம் பெற்ற இவர் கல்லூரியில் பேராசியராகப் பணிபுரிகிறார். "இன்னொரு நான்" என்பது இவர் எழுதிய முதல்(1967) கவிதை ஆகும் . மெளனத்தின் நாவுகள் (1974) , அந்தர நடை (1979) , என்ற ஒன்று (1988) , அபிகவிதைகள் ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார் . மேலும் லா.ச.ராமாமிர்தம் நாவல்களை ஆய்வு செய்துடாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார். சமீபத்தில் நண்பர் சுதாகர் கஸ்தூரி அவர்கள் அபியின் கவிதைகள் குறித்து ஒரு பதிவை இட்டிருக்கிறார்


4. மு.பொன்னம்பலம் - பரிசு பெறுபவர் (பெயரில்லாப்பூச்சி)

நிறைய பேர் சிலோன் விஜயேந்திரன் என்று தவறாகச் சொல்வார்கள் என்று எனக்குத் தெரியும் :-)

பி.கு

இந்தப் போட்டியின் பரிசுப் புத்தகங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனந்த் மற்றும் பெயரில்லாப்பூச்சி ஆகியோர் தங்களது முகவரியை எனக்கு அனுப்பி வைக்கவும்.

0


இனிமேல் போட்டியில் கலந்து கொள்பவர்கள் தங்களது மின்னஞ்சல் முகவரியையும் சேர்த்து எழுதுங்கள்

0


நிறைய பேர் கலந்து கொள்வதற்குள் போட்டி முடுந்துவிடுகிறதே என்று சிலர் அங்கலாய்க்கிறார்கள் :-) . இனி இப்படிச் செய்யலாம் , போட்டிக்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு முன்பே போட்டி என்றைக்கு & எத்தனை மணிக்குத் தொடங்கும் என்ற விபரத்தை முன் கூட்டியே ஒரு பதிவாக இட்டுவிடுகிறேன். போட்டியாளர்களுக்கு வசதியாக இருக்கும்.