எனது வீட்டிலிருந்து அலுவலகம் சுமார் 20 கி.மீ தூரத்தில் உள்ளது.ஒரு மணிநேர பேருந்துப் பயணம் , முன்னிருக்கைக்காரர்களின் பின்மண்டையை எவ்வளவு நேரம்தான் பார்த்துக் கொண்டிருப்பது . அச்சலாத்தியாக இருக்கும் அல்லவா , ஆகையால் கையில் தினமும் ஏதாவது புத்தகத்தோடுதான் பேருந்தில் ஏறுவேன். யாருமே தொல்லை தராத வண்ணம் கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டு படித்துக் கொண்டே வருவேன் . இன்று இரண்டு புத்தகங்கள் எடுத்துக் கொண்டேன்.ஒன்று கரிகாலன் எழுதிய ஆறாவது நிலம் மற்றொன்று காலச்சுவடு கவிதைத் தொகுப்பு.
0
வளர்ப்பு நாயின் சுகவீனத்தால்
கவலை கொள்ளும்
சிறுமியின் பிரார்த்தனை
கடவுளுடைய இருப்பிற்கான
பரிசோதனையாய் மாறுகிறது
நாயின் மரணம் சம்பவித்தவேளையில்
உருளும் கண்ணீர் துளியில்
தோல்வியை ஒப்புக்கொண்டபடி கரைகிறது
சிறுமியின் மனதிலிருந்து
கடவுளெனும் கற்பிதம்
0
மேற்காணும் கவிதை ஆறாவது நிலம் கவிதைத் தொகுப்பில் கரிகாலன் எழுதிய கவிதை ஆகும்.பேருந்து ஜன்னலை மீறி உள்ளே நுழைந்த சின்ன மழை , என்னைச் சுமார் 20 வருடங்களுக்குப் பின்னோக்கிஇழுத்திச் சென்றது
0
அப்பொழுது நான் நான் ரெண்டாப்பு படிச்சுட்டு இருந்தேன் , ஒருநா ஒன்னுக்கு பீரியடுல நல்லா மழைபெஞ்சிட்டு இருந்துச்சு , எல்லாப் பயன்களும் நனைஞ்சுக்கிட்டே போயி கம்மாக்கரையில போயி ஒன்னுக்கு இருக்கப் போனோம் , உதா கலரு டவுசர இடது பக்கம் தூக்குனமானக்கி பக்கத்துல ஒன்னுக்கு இருந்துக்கிட்டிருந்த முருகேசன் கிட்ட ," எலே முருவேசா , மழை எப்புற்றா பெய்யுது ? " ன்னு கேட்டேன். அதுக்கு அவன் சொன்னியான் , வானத்துல கடவுள் இருக்கார்ரா , அவர் அங்க இருந்து ஒருபெரிய்ய வாளில தண்ணிய மோந்து மோந்து ஊத்துவார்ரா , அதான் மழையா பெய்யுதுன்னான், அவன் சொல்லிமுடித்த பொழுது என்னிலிருந்து கடைசி சொட்டு நீர் வெளியேறி உடம்பு சிலிர்த்தது. அவன் சொன்னது நெசந்தான்னு நானும் ரொம்ப நாளா நம்பிக்கிட்டுத் திரிஞ்சேன்.அப்புறம் நாலாப்பு வந்ததுக்கப்புறந்தான் மேகத்தில் இருந்துதான் மழை பெய்யுதுன்னும் தெரியவந்திச்சி ....கடவுள் இருக்காரா இல்லையான்னு சந்தேகமும் வந்திச்சி ....இன்னமும் சந்தேகம் தீர்ந்தபாடில்லை.....
0
ஆறாவது நிலம் தொகுப்பில் இருக்கும் பெரும்பாலான கவிதைகள் எனக்குப் பிடித்திருந்தன.காலச்சுவடு தொகுப்பிலிருந்து இரண்டு கவிதைகளை மட்டும் இங்கே தருகிறேன்.
பேட்டி - யுவன்
ஊர்வதற்கே வாழ்வென
உடம்பெல்லாம் கால்கொண்ட
மரவட்டை ஒன்று
ஓய்வாகச் சுருண்டிருக்கக் கண்டேன்.
பொழுதுபோகாமல் கேட்டேன்
"இந்திய சுதந்திரத்தின்
பொன்விழாபற்றி...."
"என்ன பெரிய சுதந்திரம்?
பையன்கள் இன்னமும்
குத்துகிறார்கள் குச்சியால் "
இலைகளிலும் மலர்களிலும்
சிறுநீர்த் துளிகளுடன்
அருகிலிருந்த செடி
ஆமென்றது தலையசைத்து
பையனாய் இருந்து
வந்தவன்தான் நானும் எனச்
சொல்லாமல் மறைத்து
" என்றாலும் வாழ்க்கைத் தரம் .. ? "
என்றேன்
" நோ கமெண்ட்ஸ்" என்று
நகர்ந்தது தன்
நூறாவது காலை
எதிர்காலத்துள் இழுத்துவைத்து...
0
ஒற்றை ரகசியம் - உமா மகேஸ்வரி
என் மென்மைகளை
ஊற்றிவிடுகிறேன் ஒவ்வொரு நாளும்
செம்பருத்தியின் வேருக்கு
உருட்டி வைக்கிற எனது
நட்புணர்வில்
அலகு பதிக்கும் காகம்
உன்னைக் கண்டதேயில்லை
நமதில்லாத குழந்தைகளைத் தழுவும்போதுதான்
தளிர்க்கிறது என் தாய்மை நிபந்தனைகளின்றி
நள்ளிரவில்
நட்சத்திரங்கள் தேங்கிய மாடித்தளம்
என் பாதம் வழி ஊடுருவிப்
பகிரும் கிளர்ச்சிகளை
ஒவ்வொரு மழையின் போதும்
இளகிப் பொழிவித்திட முடிகிறது என்னையும்
மோகங்கள் தாபங்கள்
முற்றுப்பெறாத சஞ்சலங்கள்
மற்றும் நீ தொடவொண்ணாத
தூய்மையின் ஆழங்களோடு
சாறுகள் பிழிபட்ட
வெற்றுச் சக்கையின் கிடப்பே
உன் கட்டிலுக்கு என்றுணர்கையில்
அடைகிறேன் உனை வென்ற உவகையை
நீ அறியவியலா ஒற்றை ரகசியமாக
Thursday, October 27, 2005
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
நல்ல கவிதைகள்.
கருத்துச் சொன்னவரு: karthikramas
Nanri!
கருத்துச் சொன்னவரு: பாலா சுப்ரா
//*அவர் அங்க இருந்து ஒருபெரிய்ய வாளில தண்ணிய மோந்து மோந்து ஊத்துவார்ரா **// இன்னொன்னையும் உட்டுட்டீங்களே. மழைக்கு அப்புறம் வரும் சிகப்பு பட்டு பூச்சி. "கடவுள் வெத்தல போட்டு துப்பராரா, அதான் அது பூச்சியா செகப்பா ஓடுது."
கருத்துச் சொன்னவரு:
//*அவர் அங்க இருந்து ஒருபெரிய்ய வாளில தண்ணிய மோந்து மோந்து ஊத்துவார்ரா **// இன்னொன்னையும் உட்டுட்டீங்களே. மழைக்கு அப்புறம் வரும் சிகப்பு பட்டு பூச்சி. "கடவுள் வெத்தல போட்டு துப்பராரா, அதான் அது பூச்சியா செகப்பா ஓடுது."
//மோகங்கள் தாபங்கள்
முற்றுப்பெறாத சஞ்சலங்கள்
மற்றும் நீ தொடவொண்ணாத
தூய்மையின் ஆழங்களோடு
சாறுகள் பிழிபட்ட
வெற்றுச் சக்கையின் கிடப்பே
உன் கட்டிலுக்கு என்றுணர்கையில்
அடைகிறேன் உனை வென்ற உவகையை
நீ அறியவியலா ஒற்றை ரகசியமாக//
இதுக்குத்தா எல்லாப் பய மவனும் பயந்து சாவுறது. :-)
நல்ல கவிதை கணேசு.
கருத்துச் சொன்னவரு: மூக்கு சுந்தர்
அன்புள்ள கார்த்திக் , பால சுப்ரா & மூக்குசுந்தர்
பின்னுட்டத்திற்கு நன்றி
எலே சிவபுராணம் சவத்து மூதி
என்னோட குருநாதர் ஆசிப் மீரான் சொன்னதை அப்படியே
எங்கிட்ட திருப்பிச் சொல்லுத அந்தால போலே வென்ர்ரு :-)
என்றும் அன்பகலா
மரவண்டு
கருத்துச் சொன்னவரு: மரவண்டு
//**அந்தால போலே வென்ர்ரு **//
:-(. இது எனக்கு தேவையா :-)
கருத்துச் சொன்னவரு: siva
அன்புள்ள சிவா
நீங்க என்னைவிட ஒன்னு ரெண்டுவயசு மூத்தவாரா இருந்தாலும் இருப்பிங்க
இருந்தாலும் உங்க தம்பி பாசமா திட்டுனதா நினைச்சுக்கோங்க :-)
என்றும் அன்பகலா
மரவண்டு
கருத்துச் சொன்னவரு: மரவண்டு
நான் அப்படி தான் எடுத்துக்கிட்டேன் கணேஷ். அதான் "இது எனக்கு தேவையா :-)" இப்படி போட்டிருந்தேன். குசும்பு மக்கா உனக்கு ரொம்ப :-)))))
கருத்துச் சொன்னவரு:
நல்ல கவிதைகள்
நல்ல பதிவு
கருத்துச் சொன்னவரு: Chandravathanaa
நல்ல கவிதைகள்
நல்ல பதிவு
கவிதை என்றால் என்ன என்றே
அறியாத என்னைப் போன்ற அறிவிலிகளை உய்விக்க வந்தவரே!
கவிதைகள் அருமை. இன்னும் இப்படி
தொடர்ந்து போடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கருத்துச் சொன்னவரு: kavimadathu sishayai
சந்திரவதனா மற்றும் நுனிப்புல் உஷா , எட்டிப்பார்த்தற்கு நன்றி
கருத்துச் சொன்னவரு: மரவண்டு
Post a Comment