Thursday, April 28, 2005

பெண்ணே நீயும் பெண்ணா

" ஏலே மூதி கொட்டகை தொறந்துட்டு இன்னும் படம்
காட்டாம இருக்க ... சீக்கிரம் படத்தைப் போடுலே வென்று "
என்று எனது குரு ஆசிப் சாத்தான் என்னை செல்லமாகக்
கண்டித்தார். இதோ முதல் காட்சி தொடங்குகிறது......


பெண்ணாகி வந்ததொரு மாயப் பிசாசும் பிடித்திட்டென்னை
கண்ணால் வெருட்டி முலையால் மயக்கிக் கடிதடத்துப்
புண்ணாம் குழியிடைத் தள்ளி என் போதப் பொருள் பறிக்க
எண்ணாது உனை மறந்தேன் இறைவா ! கச்சி ஏகம்பனே

என்று பட்டினத்தார் பாடி வைத்தார்.

புணர்ந்து வெளியேறிவர்கள் தான்
புத்தரும் சித்தரும்

என்று கவிஞர் மகுடேஸ்வரன் எழுதியிருக்கிறார் .


ஓர் ஆணிற்கும் பெண்ணிற்கும் வயிற்றுப் பசியைப் போல உடல் பசியும் இயற்கையானதே .ஆணின் உடல் பசியில் ஏற்பட்ட ஆதிக்க உணர்வின் அடிப்படையிலேயே குடும்பம் என்ற அமைப்பு தோன்றியதாகவும் , பெண்களுக்கு எதிரான அடக்கு முறைகள் பெருகியதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

ஆண்களின் அடக்குமுறைகளை எதிர்த்துக் கிளர்ந்த சித்தாந்தமே பெண்ணியவாதம்.

பிரான்சு நாட்டைச் சேர்ந்த சிமொன் தெ பெளவோ ( Simone de Beauvoir ) என்ற பெண் எழுதிய இரண்டாவது பாலினம் (Second Sex ) 1949 , என்ற நூலே உலகளாவிய பெண்களிடையே பெண்ணியவாதச் சிந்தனையைத் தூண்டியது .பெண்ணியவாதிகளைக் கொள்கைகளின் அடிப்படையில்
3 வகையாகப் பிரிக்கிறார்கள்.

1.மிதவாதப் பெண்ணியம் (Liberal Feminism)- ஆண் பெண் இருவரும் சமம் என்று கருதுவது

2. தீவிரவாதப் பெண்ணியம் (Redical Feminism)- பாலியல் தொடர்பான விஷயங்களைவெளிப்படையாகப் பேசுதல் , பெண்களின் எதிரி
ஆண்கள் தான் எனக் கருதுவது.

3. சமதர்மப் பெண்ணியம் (Socialist Feminism) முதலாளித்துவமே பெண்ணடிமைக்குக் காரணம் என்று கருதுவது.

சில பெண்மொழிகள்

0
பெண்மை என்பது அழகு கலந்த மாயை - வோட்ஸ்வொர்த்
0
வயதானவர்கள் ஒரு குமரியை மணப்பது இன்னொருவர்
படிப்பதற்காக நாம் புத்தகம் வாங்குவது போன்றது - தாம்ஸன்
0
அழகிய மனைவியை உடையவனுக்கு இரு கண்களுக்கு
மேல் தேவை - இங்கிலாந்து
0
ஏமாந்த பெண்ணின் ஆவேசத்திற்கு இணையாக நரகத்தில் கூட
எந்தப் பேயும் கிடையாது - கோலிகீப்பர்

துணுக்கு

இங்கிலாந்தைச் சேர்ந்த மரியா கன்னிங் (1733 - 1760 )என்ற பேரழகி தனது 27 வயதிலேயே இறந்து விட்டாள் .அளவுக்கதிகமாக தன்னை ஒப்பனை செய்து கொண்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை தான் அவளுடைய மரணத்திற்கான காரணம் !

பொது அறிவு

முத்தம் என்பது காதலின் திறவுகோல் என்று சொல்வார்கள் .
இந்த வன்முறை முத்தத்தைப் பாருங்களேன் .




ஓர் ஆணும் பெண்ணும் உதட்டோடு உதடாக முத்தமிட்டுக் கொள்ளும் பொழுது ஆணின் உடலுக்குள் 20 வோல்ட் மின்சாரமும் , பெண்ணின் உடலுக்குள் 40 வோல்ட் மின்சாரமும் பாயுமாம் .

இதைப் பரிசோதனை செய்துபார்க்க வெகுநாட்களாக ஒரு பெண்ணைத்
தேடி வருகிறேன், இன்னும் கிடைத்தபாடில்லை :-(

மீண்டும் சந்திப்போம் ....

என்றும் அன்பகலா

மரவண்டு

Tuesday, April 26, 2005

எல்லாத்துக்கும் வணக்கம்

அன்புள்ள நண்பர்களுக்கு

நலம் நலம்தானே.

ஏதோ ஆர்வக்கோளாறில் நானும் இந்த வலைப்பூ உலகத்தில் நுழைந்துவிட்டேன்.

நான் ஒரு முகமூடி அல்ல ! எனது இயற்பெயர் கணேஷ் குமார் , புனை பெயர் மரவண்டு.சிறிது காலம் உயிரெழுத்து , மரத்தடி போன்ற இலக்கிய மின்மடல் குழுக்களில் எழுதி வந்தேன் .

நான் இதுவரை சொல்லிக் கொள்ளும் படியாக சுயமாக எந்தப் படைப்பும் எழுதியதில்லை , நான் எழுதியதும் / எழுதப் போவதும் மற்றவர்களுடைய படைப்பைப் பற்றிய ஒரு விமர்சனப் பார்வையாகவே இருக்கும்.

நான் ரசித்த கவிதைகள் , கதைகள் , பாடல்கள் ஆகியவற்றைக் கூடுமான வரையில் சில தகவல்களுடன் சேர்த்து இங்கே பகிர்ந்து கொள்வேன்.தனது வலைப்பூவின் வார்ப்புருவத்தை (Template) தாராள மனதுடன் தானமாகக் கொடுத்து உதவிய எனது உற்றுழி நண்பர் ஆசிப் சாத்தானின் நல்லாசியுடன் ( நல்லா இருடே ) எனது இலக்கிய யாத்திரையைத் துவங்குகிறேன்....வலைப்பூ உருவாக்கத்தில் உதவி செய்த கே.வி ராஜா விற்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளேன்.

பிச்சைக்கண்ணன் என்றாவது ஒருநாள் உழைத்துச் சாப்பிட ஆரம்பித்துவிடலாம்..பிறிதொரு கணங்களில் நம்பிக்கு நன்றாகச் செரித்து ...வாந்தி நின்று போகலாம்..சோடா பாட்டில் அண்ணாச்சி திருந்தி ...சமர்த்துப் பையனாக மாறலாம்..அதே போல் என்றாவது ஒரு நாள் இந்த விளங்காவெட்டிக்குக் கால்கள் நோகும்பொழுது யாத்திரை நின்று போகலாம் .....அதுவரை எனது யாத்திரை தொடரும்..........

மீண்டும் சந்திப்போம் ....

என்றும் அன்பகலா
மரவண்டு